Published:Updated:

``ஒரு `கை' பார்க்கலாம்!”- ராகுல் வியூகம் அடுத்து தமிழகத்தில்?

``ஒரு `கை' பார்க்கலாம்!”- ராகுல் வியூகம் அடுத்து தமிழகத்தில்?
``ஒரு `கை' பார்க்கலாம்!”- ராகுல் வியூகம் அடுத்து தமிழகத்தில்?

``நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி. ஆனால், ஒற்றை இலக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் வழங்கினால் தி.மு.க கூட்டணியில் தொடர்வது பற்றி பரிசீலிக்கப்படும். ராகுல் காந்தியின் அடுத்த இலக்கு தமிழகம்தான்” என்கிறார்கள் தமிழக கதர்ச் சட்டைக்காரர்கள். 

ஐந்தாண்டுகள் தொடர் தோல்வி, பிரதமர் மோடியின் பிம்பத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ராகுலின் செல்வாக்கு, கூட்டணிகளைக் கைநழுவ விட்டு வாய்ப்புகளை இழந்தநிலை என அடிமேல் அடி வாங்கிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு, கடந்த வாரம் வெளியான ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பெரும் மாற்றத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளன. `இந்து ராஜ்ஜியம்', `காவி மண்' என்றெல்லாம் பி.ஜே.பி-யினர் கோஷமிட்டுவந்த வடமாநிலத்தின் முக்கியமான மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது காங்கிரஸ் கட்சி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தெந்த இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியைச் சந்தித்ததோ, அந்த இடங்களில் தற்போது மெள்ள மெள்ள காங்கிரஸ் கை ஓங்கி வருகிறது. 

கருணாநிதியின் சிலை திறப்பு விழா, சென்னையில் டிசம்பர் 16-ம் தேதி அன்று மாலை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சோனியா காந்தி சென்னை வருகிறார். ஏற்கெனவே, டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டபோதே, தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்கிற செய்திகள் வந்தன. குறிப்பாக, தமிழகத்தில் தி.மு.க தலைமையில் அமையும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் உண்டு. அதேநேரம் கருணாநிதி காலத்தில் இருந்ததுபோல இரட்டை இலக்கத்தில் சீட் கேட்பதெல்லாம் இனி நடக்காது” என்று தி.மு.க தரப்பிலிருந்து காங்கிரஸ் தரப்புக்குச் சொல்லப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனக்கு நெருக்கமானவர்களிடம் ``ஏழு தொகுதியைக் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க தரப்பில் தருவார்கள் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். ஆனால், இதெல்லாம் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்கள். ஐந்து மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு டெல்லி காங்கிரஸ் தலைமையும் இப்போது தெம்புடன் உள்ளது. 

``மோடியை எதிர்க்கும் சக்தியாக ராகுல் உருவாகிவிட்டார். கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ராகுலின் பேச்சு அமைந்த அளவுக்கு, அதற்குப் பின்னால் பேசிய மோடியின் பேச்சு இல்லை என்றபோதே, ராகுல் ஸ்ட்ரெட்டஜி ஒர்க் அவுட் ஆக ஆரம்பித்துவிட்டது" என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பதினைந்து ஆண்டுகள் சத்தீஸ்கர் மாநிலத்தைத் தனது பிடியில் வைத்திருந்த ரமண்சிங் தலைமையிலான பி.ஜே.பி அரசை மண்ணைக் கவ்வ வைத்ததில் ராகுலின் பங்கு மகத்தானது. அங்கு ஒருமாதமாக முகாமிட்டவர், சோர்ந்து கிடந்த காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் அளித்தார். குறிப்பாக, இளைஞர்களைக் களத்தில் இறக்கியது, அவருக்கு மிகப்பெரிய ப்ளஸ். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர் வேட்பாளர் அந்தஸ்திற்கு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோரை முன்மொழிந்ததும் ராகுலின் திட்டம்தான். 

இப்போது அதே பாலிஸியை தமிழகத்திலும் அரங்கேற்றும் முடிவுக்கு ராகுல் வந்துள்ளார். சமீபத்தில் கட்சியின் மூத்தத் தலைவர் குலாம்நபி ஆசாத்துடன் இதுகுறித்துப் பேசியுள்ள ராகுல், ``தமிழகத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதேநேரம் தலைவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டாம். மாவட்ட அளவில் துடிப்புடன் செயல்படும் இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் கட்சி அடுத்தகட்டத்துக்கு வந்துவிடும்.

நீங்கள் மாநில நிர்வாகிகளுடன் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசுங்கள். எழுபது வயதைக் கடந்தும் அரசியல் செய்து கொண்டிருப்பவர்களைக் கட்சியின் ஆலோசகர் நிலையில் வைத்துக் கொள்ளப் பாருங்கள்” என்றெல்லாம் சொல்லியுள்ளார். அதேபோன்று ``தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால், பதினைந்து தொகுதிகளுக்கு குறைவான தொகுதிகளை ஏற்க வேண்டாம்" என்ற மூடில் ராகுல் உள்ளாராம்.

பதினைந்து ஆண்டுகள் ஆட்சியை இழந்த மாநிலத்தை மீண்டும் கைப்பற்றியதுபோல, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை இழந்த தமிழகத்தில் காங்கிரஸ் கரத்தை வலுப்படுத்தும் மூடுக்கு ராகுல் வந்துவிட்டார். ``இப்போது அ.தி.மு.க, தமிழகத்தில் பலவீனமாக உள்ளது. ராகுலின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. பி.ஜே.பி., தமிழகத்தில் காலூன்றுவதற்கு முன்பாக களத்தில் நாம் இறங்கிச் செயல்பாட்டால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்திலும் வலுவான கட்சியாக காங்கிரஸ் கட்சியைக் கொண்டுவரலாம். அதற்கு முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கலாம்" என்று எண்ணியுள்ளாராம் ராகுல். தன்னுடைய திட்டத்தை குலாம் நபி ஆசாத் மூலம் நிறைவேற்றும் முடிவுக்கு வந்துள்ளார் ராகுல் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 

தாமரை தமிழகத்தில் மலரும் முன்பே. தமிழகத்தில் காங்கிரஸ் `கை' ஓங்கிவிடவேண்டும் என்பதே ராகுலின் திட்டம். அது பலிக்குமா? என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும். 

அடுத்த கட்டுரைக்கு