பிரீமியம் ஸ்டோரி

போலீஸ் பாதுகாப்புடன் நீராடிய ஹெச்.ராஜா!

வி
நாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ஹெச்.ராஜா, இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் விமர்சித்துப் பேசினார். அதைக் கண்டித்து அறநிலையத் துறை ஊழியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உள்பட பல இடங்களில் அவர்மீது போலீஸில் புகார் அளித்தனர். அந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னையில் செப்டம்பர் 27-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர்கள் நடத்தினர். இந்நிலையில் ஹெச்.ராஜா தன் முன்னோர்கள் நினைவாக ‘திதி’ கொடுப்பதற்காக ராமேஸ்வரம் வந்திருந்தார். கோயில் ஊழியர்கள் பிரச்னை செய்துவிடுவார்களோ என்று ஹெச்.ராஜாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸார் புடைசூழ அவர் 22 தீர்த்தங்களிலும் நீராடினார்!

மினி மீல்ஸ்

தனியாருக்காகவா நூறுநாள் வேலை?

நா
கர்கோவிலில் இருக்கும் பொன்ஜெஸ்லி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் மைதானத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களைக் கொண்டு சுத்தப்படுத்தும் வேலை வாங்கியதாக, புகாரில் சிக்கியிருக்கிறார் கணியாக்குளம் ஊராட்சிச் செயலாளர் ஐயப்பன். இதுகுறித்து காங்கிரஸ் மாநில இளைஞர் அணிச் செயலாளர் செல்வகுமார், “கிருஷ்ண சமுத்திரக் குளத்தின் கால்வாயை மேம்பாடு செய்ய நிர்வாக அனுமதி பெற்று, தனியார் கல்லூரியில் தொழிலாளர்களை வேலை வாங்கியிருக்கிறார் ஐயப்பன்” என்று கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். ஐயப்பனோ, “பணியாளர்கள் தெரியாமல் கல்லூரியில் வேலை செய்துவிட்டனர். கல்லூரி நிர்வாகத்துக்கும் இது தெரியாது. கலெக்டர் என்னைக் கண்டித்ததுடன் நேரில் வந்து பார்க்கச் சொல்லியுள்ளார்” என்றார். ‘பணி நடந்தது குறித்து எங்களுக்குத் தெரியாது’ என்கிறது கல்லூரி நிர்வாகம். ஆனால், ஊராட்சி அதிகாரி, கல்லூரி நிர்வாகத்திடம் சென்று பணிசெய்வது குறித்துக் கூறி அனுமதி கேட்டுள்ளார் என்று அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சப் கலெக்டர் ராகுல்நாத், “மேற்கண்ட திட்டத்தில் சிறு விவசாயிகளுக்கு பணிகளை செய்யலாம். தனியார் நிலங்களில் செய்யக்கூடாது. பஞ்சாயத்து அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மினி மீல்ஸ்

அருந்ததியரை அரவணைக்கும் தினகரன்!

ரோட்டில் ‘அருந்ததியர் சமுதாய எழுச்சி மாநாடு’ செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற்றது. வீரா.சிதம்பரம் தலைமையிலான இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் டி.டி.வி.தினகரன். மேடை பேனரில் வீரா.சிதம்பரத்தின் படம் ஓர் ஓரத்தில் ஸ்டாம்ப் சைஸில் இருக்க... தினகரனின் படம் பிரமாண்டமாகக் காட்சியளித்தது.

மாநாட்டில் பேசிய தினகரன், அருந்ததிய சமுதாயத்தினருக்கு வாக்குறுதிகளை அள்ளிவிட்டுக் கைத்தட்டலை அள்ளினார். “உங்கள் உறவினரான கதிர்காமுதான் பெரியகுளம் எம்.எல்.ஏ. அவரை, பெரியகுளத்தில் உள்ள ஒரு பெரிய மனிதர், 50 கோடி தருவதாகச் சொல்லி அ.தி.மு.க-விற்கு வரும்படி போனில் நச்சரிக்கிறாராம். கதிர்காமுவோ, ‘உண்மையான அம்மாவின் தொண்டர்கள் இருக்கும் இடத்தில்தான் நான் இருப்பேன்’ என்று அ.ம.மு.க-வில் இருக்கிறார். அ.ம.மு.க ஆட்சியமைக்கும்போது, உங்கள் பிரதிநிதியாக கதிர்காமு அமைச்சரவையை அலங்கரிப்பார். அ.ம.மு.க ஆட்சிக்கு வரும்போது கல்வியிலும் பொருளாதாரத்திலும் அருந்ததிய சமுதாயம் முன்னேற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என்று அரவணைப்பாய் சொல்லிவிட்டுக் கிளம்பினார் தினகரன்.

மினி மீல்ஸ்

குமரிக்கு வசந்தகுமார் அச்சாரம்!

டந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பிறகு 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். ஆனாலும், அவரது டெல்லி கனவு கலையவில்லை. கடந்த மாதம் 30-ம் தேதி, நாகர்கோவில் தனியார் நிறுவனங்களை அழைத்து குமரி

மினி மீல்ஸ்

மாவட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை வசந்தகுமார் நடத்தினார். நாங்குநேரி எம்.எல்.ஏ-வான இவர், நாகர்கோவிலில் ஏன் வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறார் என்று உள்ளூர் மக்கள் வியப்புடன் பார்த்தனர். “எல்லாம் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகத்தான்” என்று சொல்லிக் கண்சிமிட்டுகின்றனர் அவரின் ஆதரவாளர்கள்!

கலெக்டரின் உண்ணாவிரத எச்சரிக்கை!

“க
ரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய நிலுவைத்தொகையை வழங்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்” - இப்படிச் சொல்லியிருப்பது விவசாய சங்கத் தலைவரோ, அரசியல்வாதியோ அல்ல, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி. செப்டம்பர் 28-ம் தேதி நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள், ‘‘சர்க்கரை ஆலைகள் எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்கு பதில் சொல்லிவிட்டு கூட்டத்தை நடத்துங்கள்’’ என்றார்கள். உடனே சம்மந்தப்பட்ட ஆலைகளைத் தொடர்புகொண்ட கலெக்டர், மைக்கை ஆன் செய்தார். ஆலை தரப்போ வழக்கம்போல, “விரைவில் தந்துவிடுகிறோம்” என்று உறுதியளித்தனர். ஆனாலும் விடாத கலெக்டர், “வரும் அக்டோபர் 25-க்குள் ஒரு ரூபாய்கூட பாக்கி இல்லாமல் செலுத்திவிட வேண்டும். இல்லையென்றால், நானே விவசாயிகளுக்குத் தலைமை தாங்கிப் போராட்டம் நடத்துவேன்” என்றார் அதிரடியாக. கலெக்டரின் அதிரடியைப் பார்த்து விவசாய சங்கப் பிரதிநிதிகளே சற்று ஆடித்தான் போயிருக்கிறார்கள்! 

- இரா.மோகன், கா.முரளி, ஆர்.சிந்து, நவீன் இளங்கோவன்
படங்கள்: உ.பாண்டி, ரமேஷ் கந்தசாமி , ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு