Published:Updated:

கழுகார் பதில்கள்! - அழகிரி... ஸ்டாலின்... அக்னிப் பரீட்சை யாருக்கு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கழுகார் பதில்கள்! - அழகிரி... ஸ்டாலின்... அக்னிப் பரீட்சை யாருக்கு?
கழுகார் பதில்கள்! - அழகிரி... ஸ்டாலின்... அக்னிப் பரீட்சை யாருக்கு?

கழுகார் பதில்கள்! - அழகிரி... ஸ்டாலின்... அக்னிப் பரீட்சை யாருக்கு?

பிரீமியம் ஸ்டோரி

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
திருவாரூர் இடைத்தேர்தலில் மு.க.அழகிரி தனித்துப் போட்டியிட்டால், அது மு.க.ஸ்டாலினுக்கு அக்னிப் பரீட்சையாக இருக்குமா?


அழகிரிக்குத்தான்.

கழுகார் பதில்கள்! - அழகிரி... ஸ்டாலின்... அக்னிப் பரீட்சை யாருக்கு?

@லா.ரா.கணபதி, மடிப்பாக்கம்.
தேர்தல் வந்துவிட்டதைப் போலவே பல ஊர்களுக்குச் சென்று எழுச்சியுரை ஆற்றிவருகிறார் டி.டி.வி.தினகரன். செல்லும் இடமெங்கும் பெருங்கூட்டமும் கூடுகிறதே? 


ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது, இன்றைய அரசியலுக்குத் தேவையான ட்ரெண்டிங் பேச்சு அவருக்கு நன்றாகவே வருகிறது. ஆனால், கூட்டம் கூடுவதைப் பற்றி ஆச்சர்யப்படத் தேவையில்லை. வாகனச் செலவுக்கும், இன்ன பிற செலவுகளுக்கும் தயாராக இருந்தால், இதற்கு மேலும் உங்களால் கூட்டத்தைக் கூட்ட முடியும்.

எம்.சுமதி, பட்டுக்கோட்டை.
‘‘பூதக்கண்ணாடியை வைத்துப் பார்த்தாலும் எங்கள் ஆட்சியில் ஊழலைக் கண்டுபிடிக்க முடியாது’’ என்கிறாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி?


கழுகார் பதில்கள்! - அழகிரி... ஸ்டாலின்... அக்னிப் பரீட்சை யாருக்கு?

வெறுங்கண்ணால் பார்த்தாலே தெரியும் என்று அர்த்தமோ!

எஸ்.கதிரேசன், சென்னை-33.
‘கள்ள உறவு தவறில்லை’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே?


தீர்ப்பு தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. ‘கள்ள உறவு தவறில்லை’ என எங்குமே உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. ‘மனைவிக்கு கணவனை எஜமானனாகக் கருதும் சட்டப்பிரிவை நீக்கி, ‘ஆணையும் பெண்ணையும் சமமாகக் கருத வேண்டும்’ என நீதிபதிகள் கூறியுள்ளனர். திருமணமான பெண்ணுடன் கணவரல்லாத ஒரு நபர் உறவு வைத்திருந்தால், கணவரின் புகாரைப் பெற்று அந்த ஆணுக்கு தண்டனை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பெண்ணுக்கு தண்டனை கிடையாது. இந்தப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ‘முறையற்ற உறவால் யாரும் தற்கொலைக்குத் தூண்டப்படாதவரை அது குற்றம் கிடையாது. இது கிரிமினல் குற்றமல்ல, சிவில் சட்டத்தின்படி விசாரிக்கப்பட வேண்டிய விவகாரம்’ என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இப்போது ரத்து செய்யப்பட்டிருக்கும் ஐ.பி.சி பிரிவு 497, இந்தியாவில் 157 ஆண்டுகளாக அமலில் உள்ளது. ‘இந்தச் சட்டப்பிரிவை ரத்து செய்தால், அது திருமண உறவை சிதறடித்துவிடும்’ என மத்திய அரசு வாதிட்டது. கணவன் - மனைவி இடையிலான உறவு என்பது அன்பாலும் மகிழ்ச்சியாலும் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். சட்டத்தால் மட்டுமல்ல!

@சு.சேகர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைப்பட்டிருக்கும் ஏழு பேரின் விடுதலை விஷயத்தில் பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு அலையை உருவாக்கி குளிர்காய நினைக்கிறதா தமிழக அரசு?


எடப்பாடி அரசுக்கு அவ்வளவு தூரம் குளிர்விட்டுப்போய்விடவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் பலரும் குளிர்காய்ந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் தலைமையோ, ‘சட்டப்படி நடக்கட்டும்’ என்கிறது. ஆனால், விடுதலை கூடாது என்பதற்காக பின்னணியிலிருந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர். விடுவித்தால், அதை வைத்தே ‘தேசத் தலைவனின் தியாகத்துக்கு மரியாதை செய்யவில்லை பி.ஜே.பி’ என்று கலகக்குரல்களை ஒலிக்க விடுவார்கள். விடுவிக்காவிட்டால், ‘தமிழின துரோகி பி.ஜே.பி என்பது மீண்டும் நிரூபணமாகிவிட்டது’ என்று பெரும்பாலான கட்சிகளும் கொடிபிடிக்கும். ‘என்ன செய்தாலும் தமிழகத்தில் நமக்கு வாக்குகள் கிடைக்காது. தேவையில்லாமல் தேசிய அளவில் ஏன் கெட்டபெயர் எடுக்க வேண்டும்’ என்று பி.ஜே.பி-யும் அடக்கியே வாசிக்கிறது.

கழுகார் பதில்கள்! - அழகிரி... ஸ்டாலின்... அக்னிப் பரீட்சை யாருக்கு?

@மோகன்தாஸ்.
நீதிமன்றத் தீர்ப்பு, நீதிபதியின் சொந்தக் கருத்தைப் பிரதிபலிக்கிறதா, வக்கீலின் வாதத்தைப் பொறுத்து அமைகிறதா?


வழக்கில் இருக்கும் உண்மையைப் பொறுத்தே அது அமையவேண்டும். ஆனால், சமயங்களில் போலீஸ் செய்யும் தவறுகள் மற்றும் பொய் சாட்சிகளைப் பொறுத்தும் தீர்ப்புகள் வந்துவிடுவதுண்டு. சமீபத்திய உதாரணம்... சென்னை, குமரன் காலனி பாலியல் வன்கொடுமை சம்பவம். சாட்சியைக் குற்றவாளியாகவும், குற்றவாளியை சாட்சியாகவும் மாற்றி, ஆயுள் தண்டனை வாங்கிக்கொடுத்துவிட்டனர். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது?

கி.ராஜவேலு, திருவள்ளூர்.
கோயில் சிலைகள் தொடர்ந்து கடத்தப்படுகின்றனவே... இதன் பின்னணி என்ன?

இதன் பின்னணியில் இருப்பது மிகப்பெரிய மாஃபியா நெட்வொர்க். உலகம் முழுக்கவே இத்தகைய பொக்கிஷங்களைக் கடத்தி விற்கும் கும்பல்கள் உள்ளன. பெரும் பணக்காரர்கள் சிலரின் பொழுதுபோக்கே இந்த பொக்கிஷங்களை வீட்டிலும் அலுவலகத்திலும் வைத்துப் பெருமையடித்துக்கொள்வதுதான். அருங்காட்சியகங்களை அமைத்து லாபமும் சம்பாதிக்கிறார்கள். சிலைக்கடத்தல் கும்பலின் புரவலர்கள், இந்தப் பணக்காரர்கள்தான். இது கோடி கோடியாகப் புழங்கும் நிழல் பிசினஸாகவே மாறிவிட்டது. தமிழகக் கோயில் சிலைகள் அனைத்தும் பல நூற்றாண்டு பழைமையான பொக்கிஷங்கள் என்பதோடு, கோயில்களின் பாதுகாப்பும் கேட்பாரற்று இருப்பதால் தொடர்ந்து கொள்ளை போகின்றன. அறநிலையத்துறை, அரசியல்வாதிகள், அர்ச்சகர்கள், மத மற்றும் கலாசாரப் போர்வைகளைப் போர்த்திக்கொண்டிருக்கும் சில அமைப்புகள் என்று பலவும் இதற்குத் துணைபோகின்றன.

@மா.ஜெகதீசன், சீர்காழி.
ஹெச்.ராஜாவின் ஆணவப்பேச்சு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறதே?

அவருக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்கும்கூட ஆணவம் கூடிக்கொண்டேதான் இருக்கிறது. ‘என்னிடம் சொல்லிவிட்டுக் கொலைசெய்யப் போ’ என்று கருணாஸும், ‘நாக்கை அறுப்பேன்’ என்று அமைச்சர் துரைக்கண்ணுவும் பேசியதற்கு ராஜா கொடுத்த தைரியமும் காரணம். இதுபோன்றவர்கள் அனைவருக்கும் வாய்ப்பூட்டு போடவில்லை என்றால், விரைவிலேயே ஏதோ ஒரு ரூபத்தில் கலவரம் வெடிக்கலாம்.

கழுகார் பதில்கள்! - அழகிரி... ஸ்டாலின்... அக்னிப் பரீட்சை யாருக்கு?

@அன்புமதி, சாத்தூர்.
தேர்தல் வியூகத்தில் கில்லாடியான பிரஷாந்த் கிஷோரின் சிஷ்யர் சஹஸ்வத் கவுதம், வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்துவாரா?


2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியின் பி.ஜே.பி கூட்டணி, பீகாரில் நிதீஷ்-லாலு கூட்டணி, பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் வெற்றிக்குப் பின்னணியில் செயல்பட்டவர் பிரசாந்த் கிஷோர். ஆனால், காங்கிரஸுக்காக உத்தரப்பிரதேசத்தில் அவர் செய்த தந்திரங்கள் பலிக்கவில்லை. பி.ஜே.பி-யே வெற்றிபெற்றது. இந்த கிஷோரின் சகாவான கவுதம், தற்போது ராகுலுடன் கைகோத்துள்ளார். இதுபோன்றவர்களின் ராஜதந்திரங்களை வைத்துமட்டுமே வென்றுவிட முடியாது என்பதுதான் உண்மை. கூட்டணி, முந்தைய ஆட்சிகளின் செயல்பாடு மற்றும் புறச்சூழல்களும் முக்கியக் காரணமாக இருக்கும். ரஃபேல் விவகாரம் வேகமெடுப்பதைப் பார்த்தால், கவுதமும் ஒரு ரவுண்டு வரக்கூடும் என்றே தோன்றுகிறது.

@ஏ.மனோகரன்.
வழக்குகளிலிருந்து காப்பாற்றுமாறு கோயில் கோயிலாகப் படியேறுகிறார்கள் ஊழல் அரசியல்வாதிகள். பல சமயங்களில் தப்பித்தும் விடுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகளைக் கடவுள் காப்பாற்றுகிறார் என்று சொல்லலாமா?

அது ஒரு நம்பிக்கைதான். மற்றபடி நாம் கேட்பதையெல்லாம் அள்ளிக் கொடுப்பதற்கு கஜானாவையும், அநியாயம் செய்தால் காப்பாற்றுவதற்கு வழக்கறிஞர் குழுவையும் கடவுள் வைத்திருக்கவில்லை. ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்கள்மீதான வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக கோயில் கோயிலாக ஏறி பல பூஜைகளையும் பரிகாரங்களையும் செய்தனர். கடைசியில் என்னவாயிற்று?

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்கிற பெயரில் தரப்படும் தகவல்கள் எத்தனை தூரம் நம்பகமானவை?

நூறு சதவிகிதம் நம்பகமானவைதான். மாற்றியெல்லாம் தரமுடியாது. ஆனால், தகவல்களை அரசுத்துறைகளில் பெறுவதுதான் வம்புபிடித்த வேலையாக இருக்கிறது.

@கோ.செழியன், கிருஷ்ணன்கோவில்.
விஜய் மல்லய்யா முன்பு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாரே... யாரால் அவருக்கு அந்தப் பதவி கிடைத்தது?


இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என்கிற கவர்ச்சிதான் மல்லய்யாவுக்கு அந்தப் பதவியைத் தேடித்தந்தது. கர்நாடக மாநிலத்திலிருந்து இரண்டு தடவை மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். முதல் முறை தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உதவியுடன் வென்றார். இரண்டாவது தடவை பி.ஜே.பி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் உதவியுடன் வென்றார். அனைத்துக் கட்சிகளுமே அவருக்கு அடிமைகள்தான், அன்று!

கழுகார் பதில்கள்! - அழகிரி... ஸ்டாலின்... அக்னிப் பரீட்சை யாருக்கு?

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு