Published:Updated:

`ஊழலற்ற ஆட்சியை தந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” - தமிழிசை!

`ஊழலற்ற ஆட்சியை தந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” - தமிழிசை!
`ஊழலற்ற ஆட்சியை தந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” - தமிழிசை!

பிரதமர் மோடி தமிழகத்தின் 5 மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பா.ஜ.க தொண்டர்களுடன் காணொலிக் காட்சி மூலம்  நேற்று  மாலை உரையாடினார்.இதில் நாமக்கல்லில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,'பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தமிழகத்தில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் உரையாடியுள்ளார். இது தமிழகத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மிகப் பெரிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. 2019 நாடளுமன்றத் தேர்தலில் மிகச் சிறப்பாகப் பணியாற்ற இது ஊக்கத்தை தரும். இப்போது 5 தொகுதிகளில் நிர்வாகிகளுடன் பிரதமர் பேசியுள்ளார். வருங்காலத்தில் அனைத்து தொகுதி நிர்வாகிகளிடனும் பிரதமர் பேசுவார்.பிரதமர் ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு ரஃபேல் ஒப்பந்தம் நேர்மையாக நடந்திருக்கிறது என உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அறிய முடியும்.ஸ்டெர்லைட் ஆலைக்கு இப்போது எதிர்ப்புத் தெரிவிக்கும் தி.மு.க, அவர்களது ஆட்சிக் காலத்தில் தான் ஸ்டெர்லைட் ஆலையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அபரிமிதமாக உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் இதில் எல்லோரும் தவறு செய்துள்ளனர்.

இப்போது மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது. இதனால் எந்த அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் ஆலை மீண்டும் இயங்க அனுமதி அளித்தது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். முதல்வர் மேல்முறையீடு செய்வோம் என்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.இந்த ஆலை விவகாரத்தில் சட்ட ரீதியாக போராடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கையெடுக்கப்படும் என்ற உறுதியை முதல்வர் அளித்து மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் அங்கு போராட்டங்களைத் தவிர்க்க முடியும்.

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழக பா.ஜ.க எதிர்க்கும். ஆனால், இங்குள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை பா.ஜ.க மீது சுமத்தி வருகின்றன.மு.க.ஸ்டாலின் சேலம் வருவதற்கு தனியார் விமானத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால், அந்த வசதி மக்களுக்கு இல்லை. இங்கு 8 வழிச்சாலை வந்தால் மக்கள் விரைவாக சேலம் வந்து செல்ல முடியும். அனைத்து தரப்பினருக்கும் நன்மை அளிக்க கூடிய திட்டங்களை தான் மத்திய அரசு செயல்படுத்துகிறது. இந்த திட்டங்களினால் மக்கள் பாதிப்படையாமல் மத்திய அரசு பார்த்துக்கொள்ளலாம்” என்றார்.

கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வுக்கு நடிகர் ரஜினிகாந்த்துக்கு தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது குறித்து கேட்ட கேள்விக்கு, ``அழைக்கப்படுகின்ற யார் வேண்டுமானலும் கலந்துகொள்ளலாம்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோதே பிரதமர் மோடி நட்புறவோடு வந்து பார்த்துவிட்டுச் சென்றார். அவர் இறந்தபோது பிரதமர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவர் கூட்டணி பார்க்கவில்லை. ஆனால் அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளைத்தான் அழைத்துள்ளது"  என்று  கூறினார்.