மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)

என்ன செய்தார் எம்.பி? - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)

‘மக்களின் தொடர்பு எல்லைக்கு வெளியே!’

#EnnaSeitharMP
#MyMPsScore

2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்காகக் காத்திருந்தது தமிழ்நாடு. ‘யாருக்கு வெற்றி?’ என்கிற பல்ஸ் எகிறிக்கொண்டிருந்த அந்த இடைப்பட்ட காலத்தில், ‘காஞ்சிபுரம் அ.தி.மு.க வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்’ என காஞ்சிபுரத்தில் முளைத்த பேனர், டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையம் வரை உலுக்கியது. தேர்தல் முடிவு வரும் முன்பே வெற்றி அறிவிப்பு பேனர் வைத்த பெருமையைப் படைத்தது காஞ்சிபுரம் எம்.பி தொகுதி. 1,46,866 ஓட்டுகள் வித்தியாசத்தில் மரகதம் வெற்றி பெற்றது தனிக் கதை.

முதல் வேட்பாளராக மரகதம் குமரவேலை அறிமுகப்படுத்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்திலிருந்துதான் ஆரம்பித்தார் ஜெயலலிதா. ‘‘அப்பா சண்முகம், தலைவர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் வேலை செய்தவர்.

எம்.ஜி.ஆருக்கு அப்பா விசுவாசமாக இருந்ததுபோல, நானும் இருப்பேன்’’ என வேட்பாளர் நேர்காணலில் ஜெயலலிதாவிடம் சொன்னார் மரகதம் குமரவேல். வாக்களித்து டெல்லிக்கு அனுப்பிய காஞ்சிபுரத்துக்கு மரகதம் செய்தது என்ன?

‘‘பிரசாரத்தில் பேசிய ஜெயலலிதா, ‘நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு மரகதம் குமரவேல் ஓடோடி வருவார். உங்களையே சுற்றிச் சுற்றி வந்து உங்கள் குறைகளைப் போக்குவார்’ என்றார். ஜெயலலிதா சொன்னபடி, மரகதம் நடந்துகொள்ளவில்லை. காஞ்சிபுரம், பட்டுக்கு பிரபலம். முக்கியத் தொழில் விவசாயம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு அதிகம். இந்தத் தொழில்களுக்கும் மத்திய அரசின் மூலம் பல திட்டங்களை எம்.பி-யால் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் இவர், தொகுதிப்பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. முதல்வர், அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவதோடு சரி. எல்லா டீலிங்குகளையும் கணவர் குமரவேல் கவனித்துக்கொள்கிறார். ‘மக்களின் தொடர்பு எல்லைக்கு வெளியே’தான் இருக்கிறார் மரகதம்’’ என்று கோபக் குரல்கள் தொகுதி முழுக்கவே கேட்கின்றன.

என்ன செய்தார் எம்.பி? - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)

‘‘குமரவேல், திருப்போரூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக உள்ளார். இவர்தான், அறிவிக்கப்படாத எம்.பி-யாக உள்ளார். திருப்போரூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கோதண்டபாணி தினகரன் பக்கம் போய், தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவே, குமரவேல்தான் அந்தத் தொகுதியின் அறிவிக்கப்படாத எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் யாருமே இல்லை. எனவே அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி என எல்லாமுமாக இருப்பவர்கள் மரகதமும் குமரவேலும்தான். இந்த செல்வாக்கை வைத்து தொகுதி மக்களுக்கு பல நல்ல திட்டங்களை மரகதம் கொண்டு வந்திருக்க முடியும். அவர், எதையும் செய்யவில்லை’’ என ஆளும்கட்சியினரே கொதிக்கிறார்கள்.

தொழில் பிரமுகரான காஞ்சிபுரம் இளங்கோவிடம் பேசினோம். ‘‘ தான் அளித்த வாக்குறுதிப்படி, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஒரு எஸ்கலேட்டர்கூட எம்.பி-யால் போட முடியவில்லை. சென்னை, செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக சுற்றுவட்ட ரயில் விடப்படும் என்ற அறிவிப்பு அப்படியே உள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகளும் தனியார் பல்கலைக்கழகங்களும் நிரம்பிவழியும் இந்தத் தொகுதியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஓர் உயர்கல்வி நிறுவனத்தைக்கூட இவர் கொண்டுவரவில்லை. மக்கள் குறைகேட்புக் கூட்டங்களை நடத்தியதில்லை. மாவட்டத் தலைநகரான காஞ்சிபுரத்தில் தொகுதி அலுவலகம் இல்லை. உத்திரமேரூர், காஞ்சிபுரம், ஒரத்தி, சூணாம்பேடு, செய்யூர் போன்ற பகுதிகளில் உள்ளவர்கள் எம்.பி-யைச் சந்திக்க வேண்டுமென்றால், நான்கு பஸ்களைப் பிடித்து எம்.பி-யின் சொந்த ஊரான தையூருக்குப்போக வேண்டும். காஞ்சிபுரம் அரசுத் தலைமை மருத்துவமனை, அண்ணா அரசு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை மேம்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டார். இவைதான் இவரின் சாதனைகள்’’ என வேதனையுடன் சொன்னார்.

முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் என்ன சொல்கிறார். ‘‘அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, மத்திய காங்கிரஸ் அரசின் நிதியுதவியுடன் தொடங்கிய காஞ்சி பட்டுப் பூங்கா காணாமல் போய்விட்டது. திட்ட மதிப்பில் ஐந்தரை கோடியில் ஒன்றரை கோடியை உடனே தமிழக அரசு கொடுத்தது. அந்தப் பணியைத் தொடராமல் விட்டுவிட்டார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துகளில் சிக்குவோரைக் காப்பாற்றவும், அப்பகுதி மக்களுக்குப் பயன்படும் வகையிலும் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட முயற்சி எடுத்தேன். அதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கிய நிலையில், அதைத் தொடராமல் விட்டுவிட்டார். செய்யூரில் 24 ஆயிரம் கோடி ரூபாயில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கொண்டுவந்திருந்தால் பல ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைத்திருக்கும். எம்.பி நினைத்திருந்தால் காஞ்சிபுரத்தை முன்மாதிரித் தொகுதியாக மாற்றியிருக்க முடியும். ‘என்ன ஆதாயம் பார்த்து, யாருக்கு கான்ட்ராக்ட் கொடுப்பது’ என்பதிலேயே அவரின் கணவர் அக்கறை காட்டுகிறார். அவரின் கணவரே ஒரு கான்ட்ராக்டர் தான்’’ என்று விளாசினார்.

ம.தி.மு.க-வின் மல்லை சத்யா, ‘‘மாமல்லபுரம், காஞ்சிபுரம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆகிவற்றை இணைத்து சுற்றுலாவை மேம்படுத்த ஒரு திட்டத்தை மத்திய அரசின் மூலம் கொண்டு வந்திருக்கலாம். அதைக்கூட மரகதம் செய்யவில்லை. ஆசியாவின் மிகப் பழைமையான பாலாறு, பாழ்பட்டுக் கிடக்கிறது. அதைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காஞ்சிபுரம், மாமல்லபுரம், செங்கல்பட்டு, திண்டிவனம் பகுதி மக்கள் பயன்படும் வகையில் தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக கோவைக்கு ரயில் விட வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. ரயில்வே அமைச்சரை எம்.பி அணுகி கோரிக்கை வைத்திருந்தால் அது நிறைவேறியிருக்கும். சென்னை வேளச்சேரி முதல் புதுச்சேரி வரை ரயில் விடுவதாக அவர் கொடுத்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை’’ என்றார்.

‘‘காஞ்சியில் சிதைந்துவரும் பட்டுத் தொழிலைக் காப்பாற்ற எந்த முயற்சி எடுக்கவில்லை. ஏரி மாவட்டமான இந்தப் பகுதியில் முப்போகம் விளைந்த நிலங்கள், இன்று பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. குளங்கள், நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரவில்லை. 51 கோடி ரூபாயில் காஞ்சி பொன்னேரிக்கரையில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலப் பணி பல ஆண்டுகளாக நடக்கிறது’’ என்றார் தி.மு.க-வைச் சேர்ந்த ஜி.செல்வம்.

காஞ்சிபுரம் சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் முத்துக்குமாரிடம் பேசினோம். ‘‘விவசாயிகளின் பல்லாண்டு கோரிக்கைகளை ஏற்று பாலாற்றில் ஆறு தடுப்பணைகள் கட்டப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் சமீபத்தில் வெளியிட்டார். அதன்பிறகு, அதிகாரிகளை ஒருங்கிணைத்து தடுப்பணை கட்டும் முயற்சியை மரகதம் குமரவேல் எடுக்கவில்லை. காஞ்சிபுரம் வரும் ஆன்மிக சுற்றுலாப் பயணிகளுக்கு போதுமான வசதிகள் செய்துதரப்படவில்லை. பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் இங்கு நிறைய உள்ளன. அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. உள்ளூர் மக்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்கப்படவில்லை. காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு தினமும் இரண்டு ரயில்கள்தான் சென்று வருகின்றன. கூடுதல் ரயில் போக்குவரத்து வசதிகளைக்கூட எம்.பி-யால் செய்ய முடியவில்லை’’ என்றார்.

எம்.பி தத்தெடுத்துள்ள ஒரத்தி கிராமத்துக்குப் போனோம். தங்கள் கிராமத்தை எம்.பி தத்தெடுத்துள்ளார் என்பதே அந்த மக்களில் பலருக்கும் தெரியவில்லை. குண்டும் குழியுமான சாலைகள், குப்பைமேடுகள், புதர் மண்டிக் கிடக்கும் தெருக்கள் என்று பரிதாபமாகக் காட்சியளிக்கிறது கிராமம். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. ஒரத்தி அரசு மேல்நிலைப் பள்ளி இடிந்துவிழும் நிலையில் உள்ளது. ‘‘கழிப்பறை வசதி கிடையாது. மாணவிகள் பள்ளி சுவருக்கு பின்னால்தான் இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்க வேண்டிய அவலநிலை. விளையாட்டுத் திடல் புதர் மண்டிக் கிடக்கிறது. குடிக்க சுகாதாரமான தண்ணீர் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என எங்களிடம் மாதம்தோறும் பணம் கேட்கிறார்கள்” என மாணவர்கள் ஆதங்கப்பட்டனர். ‘‘இரண்டு உயர் கோபுரவிளக்கு, ஒரு தெருவுக்கு சிமென்ட் ரோடு... இதைத்தவிர எந்த அடிப்படை வசதிகளையும் எம்.பி செய்யவில்லை’’ என ஆதங்கப்பட்டனர் ஒரத்தி மக்கள்.

இத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதில் பெற மரகதம் குமரவேலை செல்போனில் தொடர்பு கொண்டோம். ‘‘கட்சி வேலைகளில் பிஸியாக இருப்பதால் ஒரு வாரம் கழித்து சந்திக்கலாம்’’ என்று சொன்னார். ஆனாலும், தையூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம். மரகதத்தின் கணவர் குமரவேல் நம்மை வரவேற்றார். தரை தளத்தில் இருந்த எம்.பி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். நம்மிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த குமரவேல், ‘‘வாருங்கள்,   எம்.பி-யைப் பார்க்கலாம்’’ என்று முதல் மாடிக்கு அழைத்துப் போனார். ஒரத்தி கிராமத்தின் நிலையைப் பற்றி முதலில் கேட்டோம். ‘‘ஒரத்தி கிராமத்தின் பிரச்னைகளை என்னிடம் யாரும் இதுவரை நேரில் சொல்லவில்லை. மேலையூர் கிராமத்தை இரண்டாவதாகத் தத்தெடுத்துள்ளேன். அந்த ஊர் மக்கள் அடிக்கடி வந்து கேட்பதால் நிறைய வசதிகளை செய்துகொடுத்துள்ளேன். ரயில் பிரச்னைகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு ரயில் விட நிறைய செலவாகும்; அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டனர். என் கவனத்துக்கு வந்த பிரச்னைகளை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சொல்லி சரிசெய்து வருகிறேன். அரசு விழாக்கள், கட்சி விழாக்கள், தொகுதி மக்கள் அழைக்கும் விழாக்களில் பங்கேற்கிறேன். தேர்தல் நேரத்தில் அம்மா கொடுத்த வாக்குறுதிப்படி, தொகுதியைச் சுற்றிச் சுற்றி வருகிறேன். இது மிகப்பெரிய தொகுதி. யாராவது பிரச்னைகளை என்னிடம் நேரில் சொன்னால்தானே எனக்குத் தெரியும்’’ என முடித்துக் கொண்டார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- எஸ்.முத்துகிருஷ்ணன், பா.ஜெயவேல்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)
என்ன செய்தார் எம்.பி? - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)
என்ன செய்தார் எம்.பி? - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

செ
ங்கல்பட்டு நகரத்தில் 20 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள பாதாள சாக்கடைத் திட்டம் குறித்து தமிழ் செல்வகுமார் என்பவரின் பெயரில் ஒரு கோரிக்கை மனுவை எம்.பி-யின் தையூர் விலாசத்துக்கு அனுப்பி வைத்தோம். இதுகுறித்து மரகதம் குமரவேலிடம் செல்போனில் கேட்டோம். ‘‘கட்சிப் பணியில் பிஸியாக இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன்’’ என்றார். நாள்கள்தான் கடந்தன. அந்தக் கோரிக்கை மனுமீது எந்த நடவடிக்கையும் இல்லை. மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிற தகவலும் இல்லை. ஓட்டு போட்டவனுக்கு அவ்வளவுதான் மரியாதை.

எம்.பி எப்படி?

கா
ஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 545 பேரை சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:

என்ன செய்தார் எம்.பி? - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)
என்ன செய்தார் எம்.பி? - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)