Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆயிரம் பக்க ஃபைல்! - அதிரடி சுவாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மிஸ்டர் கழுகு: ஆயிரம் பக்க ஃபைல்! - அதிரடி சுவாமி
மிஸ்டர் கழுகு: ஆயிரம் பக்க ஃபைல்! - அதிரடி சுவாமி

மிஸ்டர் கழுகு: ஆயிரம் பக்க ஃபைல்! - அதிரடி சுவாமி

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: ஆயிரம் பக்க ஃபைல்! - அதிரடி சுவாமி

‘‘இனி சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பக்கத்தை கவனமாகப் பாரும். தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்ப சுவாமி ரெடி!’’ என்றபடி வந்தார் கழுகார்.

‘‘சுவாமி டெல்லியில் பி.ஜே.பி-காரர்களை அல்லவா திட்டிக் கொண்டிருக்கிறார்’’ என்றோம்.

‘‘ஆமாம். சொந்தக் கட்சியினரையே திட்டித் திட்டி போர் அடித்திருக்கும். காரணம், அது மட்டுமல்ல. தமிழக அமைச்சர்கள்மீதான ஊழல் பட்டியலை சுப்பிரமணியன் சுவாமிக்கு அ.தி.மு.க எதிர் கோஷ்டியினர் பக்கம் பக்கமாக அனுப்பி வருகிறார்களாம். இப்படி கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஃபைல் ஒன்று சுவாமியிடம் இப்போது இருக்கிறது. திட்டங்கள் வாரியாக, ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் ஊழல்கள்... அந்தப் பணம் யார் யார் கைகளுக்குப் போகிறது... பினாமிகள் யார் யார்... எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்ற எல்லா விவரங்களும் அந்த ஃபைலில் உள்ளனவாம். இதை வைத்துக்கொண்டு சுவாமி அடுத்து என்ன செய்வார் என்பதுதான் இப்போது கேள்வி.’’

‘‘ஏற்கெனவே ஆளும்கட்சிக்கு எதிராக தி.மு.க ஊழல் புகார்களை கிளப்பிவருகிறதே?’’

‘‘சுவாமி ஸ்டைல் எப்போதும் வேறுமாதிரி இருக்கும் அல்லவா? இப்போது அவர் நேஷனல் ஹெரால்டு விவகாரத்திலும், 2ஜி வழக்கிலும் பிஸி. டெல்லியில் அதையெல்லாம் முடித்துக்கொண்டு தமிழகம் வர உள்ளாராம். இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அதிகாரப் புள்ளியிடம் சுவாமி ஏற்கெனவே பேசியதாகவும் சொல்லப்படுகிறது. தமிழக ஆட்சியாளர்கள்மீது மன வருத்தத்தில் இருக்கும் அந்த அதிகாரப் புள்ளி, சுவாமிக்கு ஒத்துழைப்பு அளிக்க ரெடியாக இருக்கிறாராம். எனவே, ஆட்சியாளர்களுக்கு சீக்கிரமே சிக்கல் ஏற்படும் என்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: ஆயிரம் பக்க ஃபைல்! - அதிரடி சுவாமி

‘‘சபாநாயகர் தனபாலை முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் பன்னீரும் சந்தித்துள்ளார்களே?’’

‘‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்ற மறுதினமே இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தனபால் அறைக்கு முதல்வர், துணை முதல்வர் இருவரும் காலையில் சென்று அரைமணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். பிறகு, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மாலையில் சபாநாயகரைச் சந்தித்தார். இந்த ஆலோசனையில் மூன்று முக்கிய விஷயங்கள் பேசப்பட்டனவாம்.’’

‘‘என்னென்ன விஷயங்கள்?’’

‘‘தினகரன் பக்கம் உள்ள தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்..எல்.ஏ-க்கள் வழக்கின் தீர்ப்பைப் பற்றி ஆலோசனை செய்துள்ளனர். தீர்ப்பு சாதகமாக வந்தால் சரி... வராவிட்டால் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என ஆலோசனை செய்துள்ளனர். இரண்டாவதாக, கருணாஸ் விவகாரம் பற்றியும் பேச்சு எழுந்துள்ளது. கருணாஸ்மீது முதல்வர் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். என்றாலும், ‘அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என்று தனபாலிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் சபாநாயகர் இதை ஏற்கவில்லையாம். ‘இப்படிப்பட்ட கருத்துகளை அனுமதித்தால், இன்னும் நிறையப் பேர் பேச ஆரம்பித்துவிடுவார்கள்’ என்றாராம் சபாநாயகர். இதைத் தொடர்ந்து அரசு கொறடா கொடுத்துள்ள ஒரு புகாரை வைத்து, கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்கள். ‘ஆளும்கட்சி சார்பில்      எம்.எல்.ஏ ஆன நீங்கள், முதல்வருக்கு எதிராக எப்படி செயல்படலாம்’ என்று கேட்பார்களாம். ஏற்கெனவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களுக்கும் இதேபோன்ற நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. எனவே, ‘இது கருணாஸின் எம்.எல்.ஏ பதவிக்கே சிக்கலை ஏற்படுத்தக்கூடும்’ என்கிறார்கள்.’’ 

‘‘மூன்றாவது விஷயம் என்ன?’’

‘‘ஏற்கெனவே 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த லிஸ்ட்டில் இன்னும் மூவர் இடம்பெறலாம் என்கிறார்கள். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கத்துக்குப் பிறகு அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்கள் தினகரன் பக்கம் போயிருக்கிறார்கள். அவர்கள் தினகரன் கட்சியிலும் பதவி பெற்றுள்ளார்கள். ‘இவர்கள்மீது கட்சித்தாவல் தடைச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமா’ என்று சபாநாயகரிடம் கேட்கப்பட்டுள்ளது. ‘தாராளமாக எடுக்கலாம்’ என சபாநாயகர் சொல்லியுள்ளார். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே இவர்கள்மீது நடவடிக்கை எடுத்தால், தினகரன் தரப்புக்கு செக் வைத்தமாதிரி இருக்கும் என ஆலோசிக்கிறார்கள். எனவே, இந்த விஷயமும் வேகம் பிடித்துள்ளது.’’

மிஸ்டர் கழுகு: ஆயிரம் பக்க ஃபைல்! - அதிரடி சுவாமி

‘‘தி.மு.க தரப்பு செய்திகள் ஏதேனும் உண்டா?’’

‘‘2ஜி வழக்கில் அனைவரையும் டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. ஸ்வான் நிறுவனத்தின் எம்.டி சாகித் உஸ்மான் பால்வாவும் விடுதலை ஆனார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத் துறையும், சி.பி.ஐ-யும் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த நிலையில், பழைய விவகாரம் ஒன்று இப்போது பூதாகரமாகிவருகிறது. அப்போதைய மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா மர்ம மரணம் அடைந்தார் அல்லவா? அதற்குமுன், சி.பி.ஐ விசாரணையின்போது அவர் அளித்த வாக்குமூலத்தை தற்போது பூதக்கண்ணாடி வைத்து அமலாக்கத் துறையினர் பார்த்து வருகிறார்களாம். அந்த வாக்குமூலத்தில், பால்வாவும் மு.க.ஸ்டாலினும் சென்னையில் சந்தித்ததாகச் சொல்லியிருக்கிறார். இதன் பின்னணியில் என்ன நடந்தது என்று மறுபடியும் விசாரிக்க சட்ட ஆலோசனை நடந்து வருகிறதாம். ‘ஸ்டாலினும் பால்வாவும் சந்திக்கவேயில்லை’ என்பது தி.மு.க தரப்பு வாதம். ஆனால், இதை வேறு மாதிரி பார்க்கிறது அமலாக்கத் துறை. பால்வா சென்னை வந்திருந்தபோது, பெரம்பலூர்க்காரர் ஒருவர்தான் அவருக்குக் கார் ஓட்டினார். அதன் பிறகு, விசாரணைக்காக அந்த கார் டிரைவரை அமலாக்கத் துறையினரும் சி.பி.ஐ அதிகாரிகளும் தேடினர். அவர் கிடைக்கவில்லையாம். அவர் என்ன ஆனார் என்று துருவ ஆரம்பித்திருக்கிறார்கள். இதேபோல், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி, வெளிநாட்டில் இருந்து ஹம்மர் காரை இறக்குமதி செய்தபோது, வரி ஏய்ப்பு செய்ததாக சி.பி.ஐ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, உதயநிதி தரப்பில் தரப்பட்ட ஆவணங்கள்மீதான விசாரணை முடிந்துவிட்ட போதிலும், வேறு ஏதாவது பிடி கிடைக்குமா என்று குடைந்து வருகிறார்கள்.’’

“வருத்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வரப்போகிறதாமே தி.மு.க-வில்?’’

‘‘ஆமாம். தலைவர் அரியணையில் ஏறியதும், கட்சிக்குள் எந்தக் குழப்பம் இருந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். அதேபோல் தன்னை நம்பியவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். முதன்மைச் செயலாளர் பதவி டி.ஆர்.பாலு-வுக்கு வழங்கப்பட்டதில் சிலர் வருத்தத்தில் இருந்தார்கள். குறிப்பாக, ஸ்டாலினுடனே வலம்வந்த எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட சீனியர்கள் அந்தப் பதவிக்குப் போட்டி போட்டனர். பதவி கிடைக்காததால் அப்செட்டில் இருந்துள்ளார்கள். அதேபோல், ஆ.ராசாவும் ஏமாற்றத்தில் இருக்கிறார். இந்தச் செய்தி ஸ்டாலினுக்கு எட்டியுள்ளது. என்ன செய்வது என்று துரைமுருகனிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கி, வருத்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘யாருக்கெல்லாம் வாய்ப்பு என்று தெரிகிறதா?’’

‘‘ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு, ஆ.ராசா, பொன்முடி, கே.என்.நேரு ஆகிய ஐந்து பெயர்கள் இப்போது பட்டியலில் உள்ளன. துணைப் பொதுச்செயலாளர் என்பது அதிகாரமிக்க பதவியாக இல்லாவிட்டாலும், ஓர் அங்கீகாரத்துக்காவது பயன்படும் என இவர்கள் நினைக்கிறார்கள்.’’

‘‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறுவது சிக்கல் என்கிறார்களே?’’

‘‘ஏற்கெனவே தி.மு.க சார்பில் போட்டியிட்ட சரவணன், அங்கு ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு போட்டிருந்தார். ‘ஜெயலலிதாவின் கைரேகையுடன் அந்தத் தேர்தலில் போஸ் தாக்கல் செய்த வேட்புமனுவே செல்லாது’ என்பதுதான் வழக்கு. அந்த வழக்கு முடியும்முன்பே போஸ் மரணம் அடைந்து விட்டதால், அந்த வழக்கில் இப்போது சட்டச் சிக்கல் எழுந்துள்ளதாம். ‘இந்த வழக்கின் தீர்ப்புக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தக் கூடாது’ என சரவணன் நீதிமன்றம் செல்லக்கூடும் என்கிறார்கள்.’’

‘‘தமிழக போலீஸில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் இயக்குநராக ஆகப்போவது யார்?’’

‘‘லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவி ஐந்து ஆண்டுகளாக காலியாக உள்ளது. டி.ஜி.பி. அந்தஸ்தில் இதில் ஒருவரை நியமிக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் டி.ஜி.பி அந்தஸ்தில் ஐந்து பேர் உள்ளனர். கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் 1986 வருட பேட்ச் அதிகாரிகள் ஆறு பேர் உள்ளனர். இவர்களில் நம்பர் ஒன் சீனியர் ஜாபர் சேட். இவரது பழைய விவகாரம் தொடர்பாக சட்ட ஆலோசனை வாங்கிவிட்டனர். ஆக, இந்த பேட்சைச் சேர்ந்த ஆறு பேரின் ஃபைல்களும் ரெடியாகி, முதல்வர் அலுவலகத்துக்குப் போய்விட்டன. இவர்களில் யாராவது ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக விரைவில் நியமிக்கப்படலாம். அடுத்த சில நாள்களில் தமிழகத்தில் 11 டி.ஜி.பி-க்கள் இருப்பார்கள்’’ என்ற கழுகார் பறந்தார்.

மிஸ்டர் கழுகு: ஆயிரம் பக்க ஃபைல்! - அதிரடி சுவாமி

‘சிலையைத் திறந்தால் பதவி போய்விடும்!’

ன்னார்குடி கீழவீதியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்துக்கு எதிரிலேயே எம்.ஜி.ஆருக்கு சிலைவைக்க ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முடிவுசெய்தார் அமைச்சர் ஆர்.காமராஜ். பத்து லட்ச ரூபாய் செலவில் சிலை செய்துகொண்டுவந்து வைத்தனர். ஆனால், திறப்பு விழா நடத்தாமல் வெறுமனே துணியில் சுற்றியே வைத்துவிட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருவர் இந்தத் துணியை அகற்றிவிட்டு மாலை அணிவிக்க, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு யாரும் எம்.ஜி.ஆரை நெருங்க முடியாதபடி, 10 அடி உயரத்துக்கு சிலையைச் சுற்றிலும்  தகரத்தைக் கொண்டு அடைத்தனர். சிலையிலும் தார்ப்பாயைச் சுற்றிக் கயிற்றால் கட்டினர்.

இந்தச் சூழ்நிலையில் சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடக்க, ‘மன்னார்குடியில் எம்.ஜி.ஆர் சிலையை சிறைவைத்துவிட்டு, அவருக்கு நூற்றாண்டு விழாவா’ என ஃப்ளெக்ஸ்கள் மன்னார்குடியில் முளைத்தன. இதுகுறித்து அ.தி.மு.க-வினரிடம் பேசினோம். ‘‘சிலை திறப்பதற்கான ஏற்பாடுகளை முடித்துவிட்டு, கேரள ஜோதிடர் ஒருவரைப் போய்  அமைச்சர் ஆர்.காமராஜ் பார்த்தார். ‘அந்தச் சிலையைத் சிலையைத் திறந்தால் காமராஜின் அமைச்சர் பதவி பறிபோய்விடும்’ என அந்த ஜோதிடர் கூறியிருக்கிறார். அதனாலேயே ஆறு வருடங்களாக சிலை திறக்கப்படாமலேயே உள்ளது’’ என்கின்றனர். இப்போது தினகரனின் அ.ம.மு.க-வினர் அதிரடியாக எம்.ஜி.ஆர் சிலைக்கு ரகசியத் திறப்புவிழா நடத்தத் தயாராகிவருகின்றனர்.

மிஸ்டர் கழுகு: ஆயிரம் பக்க ஃபைல்! - அதிரடி சுவாமி

‘‘வெங்கடேஷ் படம் வேண்டாம்!’’

.தி.மு.க-வில், தினகரனை விடவும் டாக்டர் வெங்கடேஷின் கை ஒரு காலத்தில் ஓங்கியிருந்தது. ஆனால், தினகரனின் மைத்துனரான டாக்டர் வெங்கடேஷால் இப்போது அ.ம.மு.க-வில் எதையும் சாதிக்க முடியவில்லை. தாய் மாமா திவாகரன், அவரின் மகன் ஜெயானந்த் உள்ளிட்ட உறவுகளை ஓரங்கட்டிய தினகரன், டாக்டர் வெங்கடேஷையும் ஓரங்கட்டுகிறார் என்று புலம்புகிறார்கள் வெங்கடேஷின் ஆதரவாளர்கள். அ.ம.மு.க நிர்வாகிகளின் திருமண விழா அழைப்பிதழ்களில் ‘தினகரன் படத்துடன் மாவட்டச் செயலாளர், கட்சியின் தலைமை நிர்வாகிகள் படங்களை வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்கள். டாக்டர் வெங்கடேஷின் படத்தைப் போடாதீர்கள்’ என்று தினகரனுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இப்போது கட்சி நிர்வாகிகள் நியமனங்களிலும் டாக்டர் வெங்கடேஷின் பரிந்துரைகள் நிராகரிக்கப்படுகின்றன. ‘டாக்டர் வெங்கடேஷ் தவறான நபர்களுக்குக் கட்சியில் பதவி வாங்கிக்கொடுத்திருக்கிறார்’ என்ற கோபம் தினகரனுக்கு எழுந்துள்ளதாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு