Published:Updated:

`சிகிச்சைக்காகத்தான் சரணடைந்தோம்; ஆனால்...!’ - புழல் சிறையில் போராடும் பெண் மாவேயிஸ்ட்

தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தால் பத்மாவுக்கு பிணை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதைத்தடுக்கத்தான் சிறைத்துறை, பத்மாவுக்கு சிகிச்சை கிடைக்காமல் செய்கிறதா?''

`சிகிச்சைக்காகத்தான் சரணடைந்தோம்; ஆனால்...!’ - புழல் சிறையில் போராடும் பெண் மாவேயிஸ்ட்
`சிகிச்சைக்காகத்தான் சரணடைந்தோம்; ஆனால்...!’ - புழல் சிறையில் போராடும் பெண் மாவேயிஸ்ட்

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்ட் பத்மாவுக்கு தீவிர நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முறையான மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறவில்லை என்கின்றனர் குடும்பத்தினர்.

 ஊத்தங்கரை பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது , பத்மாவை போலீஸார் சுற்றி வளைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி யில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த பத்மா 2010-ம் ஆண்டு முதல் இந்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான், கடந்த 7-ம் தேதி  நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதன் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த பத்து வருடங்களாகவே, தீவிர நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்த பத்மாவுக்கு, கடந்த 10-ம் தேதி சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறை மருத்துவர்கள் பத்மாவைப் பரிசோதித்து, அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் பத்மா அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சைப்பிரிவில் மருத்துவர்கள் குழு சிகிச்சையளித்து வந்தது. இதையடுத்து பத்மா குணமாகிவிட்டார் என்று, கடந்த 15ம் தேதி அவரை டிஸ்சார்ஜ் செய்து சிறைக்குக் கூட்டிச் சென்றது சிறைத்துறை நிர்வாகம். சிறைக்குள் அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே பத்மாவுக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்தது போலீஸ். மருத்துவமனையில் பத்மாவுக்கு முறையாகச் சிகிச்சைகள் கொடுக்கவில்லை என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

இதுகுறித்து பத்மாவின் கணவர் மாவோயிஸ்ட் விவேக்கிடம் பேசினோம். அவர் கூறுகையில், ''கடந்த பத்து வருடமாகவே பத்மாவுக்கு நெஞ்சுவலி இருக்கிறது. தலைமறைவாக இருந்துகொண்டு, சிகிச்சையைத் தொடரமுடியாத காரணத்தால்தான், நீதிமன்றத்தில் சரணடைந்தார். வெளியே இருந்தபோது, நெஞ்சுவலிக்கு எடுத்துக்கொண்ட மருந்துகளை, சிறைக்குள்ளும் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. ஆனால், போலீஸார் பத்மாவுக்கு நெஞ்சுவலி இருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. முறையான மருத்துவ சான்றும் எங்களிடம் இல்லை. தற்போது, பத்மா சிறைக்குச் சென்றபிறகு அவரது உடல்நிலை இன்னும் மோசமாகிவிட்டது. சரியான உணவும் மருந்தும் அவருக்குக் கிடைக்கவில்லை. மருந்துகள் இருந்தாலும், அவற்றை மெயின் கேட்டில் இருந்துதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்குள் வலி தீவிரமாகிவிடும். இந்நிலையில் தான், பத்மா ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதித்தபிறகு தான் எங்களுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். பத்மாவைப் பார்க்க எங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. சிறையில் சென்று அனுமதிக்கடிதம் வாங்கிவந்து பார்த்தோ. அதுவும் ஐந்து நிமிடங்களே அனுமதி கொடுத்தனர். பத்மாவிற்கு நெஞ்சு வலி ஏற்படும் போது, அவரது இதயத்துடிப்பு நிமிடத்துக்கு இருநூற்றைத்தாண்டும். அப்போது அவர் கூடவே யாராவது இருக்கவேண்டும். அதற்கும் போலீஸ் தரப்பு மறுப்புத் தெரிவித்திருக்கிறது.மருத்துவமனையில் பத்மாவை சந்தித்துப் பேசினேன். அவரது உடல்நிலை மோசமாக இருக்கிறது. இதய மருத்துவ துறையில் பத்மாவை அனுமதிக்கவில்லை. சாதாரண வார்டில் தான் அனுமதித்திருந்தனர். மருத்துவமனையில் மூச்சுவிடவே சிரமப்பட்ட அவருக்கு, ஃபேன் வசதி கூட இல்லை. இதை மருத்துவமனை நிர்வாகத்திடம் சொன்னபோது, பத்மாவை சிறைக் கைதிகள் வைத்திருக்கும் வார்டுக்கு மாற்றிவிட்டனர். அங்கு நிலைமை இன்னும் மோசம். மருத்துவமனையில் கொடுக்கப்படும் பாலும் கொடுப்பதில்லை. காலை உணவு 11 மணிக்குத்தான் கொடுக்கிறார்கள். மருத்துவமனையில் மனம் தளர்ந்துவிட்டார். 'நான் சாக வேண்டும் என நினைக்கிறார்களா..' என்று பத்மா கேட்டது இன்னும் என் காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் பத்மா குணமாகிவிட்டார் என்று டிஸ்சார்ஜ் செய்து சிறைக்கு அனுப்பினார்கள். அன்று மாலையே நெஞ்சுவலி அதிகமாகி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் பத்மா. இதுகுறித்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டதற்கு, 'தங்களுக்கு எதுவும் தெரியாது' என்று சொல்கிறார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கவேண்டிய ஒரு நோயாளிக்கு இப்படித்தான் அலட்சியமாக சிகிச்சைக் கொடுக்கிறது மருத்துவமனை நிர்வாகம். இந்நிலையில், நேற்று (15.12.18) மருத்துவமையில் இருந்து மீண்டும் டிஸ்சார்ஜ் செய்ப்பட்டிருக்கிறார் பத்மா. இன்னும் சரியாக குணமாகாத ஒருவரை மருத்துவர்கள் எப்படி டிஸ்சார்ஜ் செய்யலாம். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தால் பத்மாவுக்கு பிணை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதைத்தடுக்கத்தான் சிறைத்துறை, பத்மாவுக்கு சிகிச்சை கிடைக்காமல் செய்கிறதா?'' என்று ஆதங்கத்தோடு பேசுகிறார் விவேக்.