Published:Updated:

எண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி! - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு

எண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி! - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு
எண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி! - தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு

எண்பதாண்டு காலம் மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் கருணாநிதி என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமிழில் பேசி புகழாரம் சூட்டினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி திறந்துவைத்தார். தேசிய, மாநில அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த விழாவுக்குப் பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  

கூட்டத்தில் பேசிய `அனைவருக்கும் வணக்கம்’ என்று தமிழில் கூறி உரையைத் தொடங்கிய சந்திரபாபு நாயுடு, ``தென் பாரதமே மிகவும் பெருமை கொள்ளும் நாள் இது. சென்னை கடல் அலைகள் மகிழ்ச்சி கொள்ளும் தருணம். இந்திய நாட்டின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதியின் திரு உருவச் சிலையை சென்னை மாநகரில் திறந்துவைத்துள்ளோம். இப்பெரும் விழாவில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எண்பதாண்டு காலம் மக்கள் நல்வாழ்வுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் நமது கருணாநிதி. தமிழகத் திருநாடு போற்றும் அரசியல் தலைவர்.

அவரின் நீண்டகால அரசியல் அனுபவம் இன்றைய இளைய தலைமுறைக்கு வழிகாட்டி’’ என்று தமிழில் பேசி அசத்தினார். சிறந்த மொழிகளுள் ஒன்றான தமிழைக் கற்றுக்கொள்ள எனக்கு ஆர்வம் இருக்கிறது. விரைவில் தமிழில் முழுமையாகப் பேசுவேன். தமிழ், தெலுங்கு மொழிகள் இடையே ஒற்றுமை இருக்கிறது. நேரம் கருதி ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்றார். 

மேலும் அவர் பேசுகையில், `தமிழகத்தில் எப்போதும் ஒரு சார்பு அலை வீசியே நான் பார்த்திருக்கிறேன். இந்த முறை அந்த அலை தி.மு.க பக்கம் வீசுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி தமிழகத்தின் 40 இடங்களிலும் வெற்றி பெறும். அப்போதுதான், கருணாநிதியின் ஆன்மா உண்மையில் ஓய்வு கொள்ளும்’’ என்று கூறினார்.