Published:Updated:

ரஃபேல் - உண்மையான பொய்களும்... பொய்யான உண்மைகளும்!

ரஃபேல் - உண்மையான பொய்களும்... பொய்யான உண்மைகளும்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரஃபேல் - உண்மையான பொய்களும்... பொய்யான உண்மைகளும்!

ரஃபேல் - உண்மையான பொய்களும்... பொய்யான உண்மைகளும்!

மீபத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் உருவாக்கிய பரபரப்புகளையும் தாண்டி, மீண்டும் மீண்டும் மேலெழும்பி நிற்கிறது ரஃபேல் விமான பேர விவகாரம். காங்கிரஸ், பி.ஜே.பி... இரண்டு பக்கங்களிலிருந்தும் புறப்படும் புகார் ஏவுகணைகளில் எது உண்மை, எது பொய்?

ரஃபேல் - உண்மையான பொய்களும்... பொய்யான உண்மைகளும்!

 * ‘ரஃபேல் பேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைத்தது காங்கிரஸ்தான்’ என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சொல்கிறார். உண்மை என்ன?

2007-ம் ஆண்டு புதிய போர் விமானங்களை வாங்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவெடுத்தது. பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்து, இந்திய விமானப்படையின் தேவைகள் கேட்கப்பட்டன. அவர்கள் கேட்டபடி விமானங்கள் தரும் தகுதியில், பிரான்ஸ் நாட்டின் டஸோ ஏவியேஷன் நிறுவனமும், ஜெர்மனியின் யூரோஃபைட்டர் நிறுவனமும் இறுதிச்சுற்று வரை வந்தன. டஸோ ஏவியேஷன் தனது ரஃபேல் விமானத்தை விற்க ஆர்வம் காட்டியது; யூரோஃபைட்டர் தனது டைஃபூன் விமானத்தை விற்க முன்வந்தது. இவர்களில் டஸோ ஏவியேஷன் விலைகுறைவாக விற்கச் சம்மதித்ததால், அவர்களே டெண்டரை வென்றனர். இதற்கு 2012 டிசம்பர் வரை ஆகிவிட்டது.

மொத்தம் 126 விமானங்கள் வாங்குவது திட்டம். இந்திய விமானப்படை திறமையான போர் விமானங்கள் இல்லாமல் தடுமாறுவதால், 18 விமானங்களை பிரான்ஸிலேயே தயாரித்து உடனடியாகத் தர வேண்டும் எனவும், மற்ற 108 விமானங்களை இந்தியாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்) நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உருவாக்கித் தரவேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. வாங்கும் விமானங்களில் இந்தியாவுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனவும், ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்குத் தொழில்நுட்பப் பரிமாற்றத்தைச் செய்யவேண்டும் எனவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கேட்டது. எல்லாவற்றுக்கும் டஸோ ஏவியேஷன் சம்மதித்தது.

அதன்பின் டஸோ ஏவியேஷன் நிறுவனமும் ஹெச்.ஏ.எல் நிறுவனமும் பேச்சுவார்த்தையில் இறங்கின. இதற்கிடையே 2012 பிப்ரவரி 13-ம் தேதி சில நாளிதழ்களில், ‘டஸோ ஏவியேஷன் நிறுவனமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துகொண்டன. ரஃபேல் பேரம் இறுதி செய்யப்பட்ட சூழலில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது’ என ஒரு செய்தி வெளியானது. இதைத்தான் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பி.ஜே.பி தலைவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரஃபேல் - உண்மையான பொய்களும்... பொய்யான உண்மைகளும்!

ஆனால், இந்தச் செய்திக்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை. இரண்டு நிறுவனங்கள் சார்பிலும் யாரும் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்கவில்லை. அதைவிட முக்கியம்... இது அனில் அம்பானியின் நிறுவனம் அல்ல; அவரின் அண்ணன் முகேஷ் அம்பானியின் நிறுவனம். ‘ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கிய முகேஷ் அம்பானி, போயிங் நிறுவனத்துடன் இணைந்து சில தயாரிப்பு வேலைகளைச் செய்ய ஆசைப்பட்டார். ஆனால், எதிர்பார்த்த விதத்தில் செயல்படாததால், இந்த நிறுவனம் சீக்கிரமே மூடப்பட்டுவிட்டது. இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக டஸோ ஏவியேஷன் நிறுவனம் ஒருமுறைகூடச் சொன்னதில்லை என்பதே உண்மை.

ரஃபேல் தயாரிப்பு தொடர்பாக டஸோ ஏவியேஷன், ஹெச்.ஏ.எல் நிறுவனத்துடன்தான் பேச்சுவார்த்தை நடத்தினர். மோடி பிரதமராக வந்தபிறகும் இது தொடர்ந்தது. 2015 மார்ச் 25-ம் தேதி, மேம்படுத்தப்பட்ட மிராஜ் போர் விமானங்களை இந்திய விமானப்படைக்கு அளிக்கும் விழா பாரிஸ் நகரில் நடந்தது. இந்த விழாவில் இந்திய விமானப்படை மற்றும் ஹெச்.ஏ.எல் நிறுவன அதிகாரிகளின் முன்னிலையில், டஸோ ஏவியேஷன் தலைமைச் செயல் அதிகாரி எரிக் ட்ராப்பியர் பேட்டி அளித்தார். ‘‘இந்தியாவுக்கு 126 ரஃபேல் விமானங்களை விற்கும் ஒப்பந்தம் தொடர்பாக 95 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டன. ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஒப்பந்தத்தை இந்திய அதிகாரிகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றார் அவர்.

* பிரான்ஸ் சுற்றுப்பயணம் போன மோடி, அங்கே திடீரென ரஃபேல் ஒப்பந்தம் பற்றி அறிவித்தது சரி என்று பி.ஜே.பி-யில் பலரும் சொல்கிறார்கள். சரிதானா?

2015-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி நரேந்திர மோடி பிரான்ஸ் போனார். அப்போதுதான் இந்த அறிவிப்பைச் செய்தார். அதற்கு 15 நாள்களுக்கு முன்பாகத்தான், ‘ரஃபேல் ஒப்பந்தம் 95 சதவிகிதம் முடிந்துவிட்டது’ என டஸோ ஏவியேஷன் சொல்லியிருந்தது. 95 சதவிகிதம் முடிந்திருந்த ஒரு பேச்சுவார்த்தையைக் குப்பைத் தொட்டியில் தூக்கிப்போட்டுவிட்டு மோடி ஏன் இதை அறிவித்தார்?

 போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக, பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூடி முதலில் முடிவெடுக்க வேண்டும். அதன்பின் கொள்முதல் கமிட்டி அமைக்க வேண்டும். அவர்கள் பல்வேறு நிறுவனங்களின் விலைக்குறிப்பை வாங்கி, விவாதிப்பார்கள். இறுதியில்தான் முடிவு எடுக்கப்படும். பாதுகாப்பு தொடர்பான எல்லா கொள்முதல்களும் இப்படித்தான் செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் மோடி பாரிஸில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு இந்தியா திரும்பிய அடுத்த மாதம்தான் அமைச்சரவைக் குழு கூடி ஒப்புதலே தந்தது. 

ரஃபேல் - உண்மையான பொய்களும்... பொய்யான உண்மைகளும்!

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். 2015 மார்ச் 25-ம் தேதி, ‘‘இந்தியாவுக்கு 126 ரஃபேல் விமானங்களை விற்கும் ஒப்பந்தம் தொடர்பாக 95 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டன’’ என டஸோ ஏவியேஷன் அறிவித்தது. அதற்கு மூன்று நாள்கள் கழித்துத்தான் மார்ச் 28-ம் தேதி ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துப் பதிவு செய்தார் அனில் அம்பானி. ஏப்ரல் 10-ம் தேதி மோடி பிரான்ஸ் சென்றபோது அவருடன் சென்றிருந்த தொழிலதிபர்கள் குழுவில் அனில் அம்பானியும் இருந்தார். இந்தச் சம்பவங்களைக் கோத்துப் பார்க்கும்போது எழும் கேள்விகள்... அனில் அம்பானியைப் பாதுகாப்புத் தொழில்துறையில் இறங்கச் சொன்னது யார்? அவரை நிறுவனம் ஆரம்பிக்கச் சொன்னது யார்? பிரதமருடன் அவர் சென்றிருந்த நேரத்தில் ரஃபேல் அறிவிப்பு வந்தது தற்செயலானதா?

* ‘‘ஒவ்வொரு விமானமும் 526 கோடி ரூபாய் என நாங்கள் பேசினோம். ஆனால், ஒவ்வொன்றின் விலையும் 1,670 கோடி ரூபாய் என வாங்குகிறார் மோடி. நாங்கள் பேசியதைவிட மூன்று மடங்குக்கும் மேல் அதிகம்’’ என்கிறது காங்கிரஸ்.  பி.ஜே.பி சார்பில் வாதிடுபவர்களோ, ‘‘காங்கிரஸ் காலத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெறுமனே விமானத்துக்கு மட்டும்தான். நாங்கள் அதில் கூடுதல் வசதிகள் மற்றும் ஆயுதங்களையும் சேர்த்துப் பேசியிருக்கிறோம். இதனால்தான் விலை அதிகம் போலத் தெரிகிறது’’ என்கிறார்கள். ‘‘சமீபத்தில் கத்தார் விமானப்படை வாங்கியதைவிடவும் நாம் குறைந்த விலைக்கு வாங்கியிருக்கிறோம். எகிப்து வாங்கிய அதே விலைக்கு வாங்கியிருக்கிறோம்’’ என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் ராணுவ நிபுணர்களை மேற்கோள் காட்டி, ‘‘அணு ஆயுதங்களை ஏவும் வசதிகளுடன் இந்த ரஃபேல் விமானங்கள் வருகின்றன. எனவே, விலை தொடர்பான ரகசியத்தை வெளியில் சொல்ல முடியாது’’ என்று வெளியில் சொல்கிறார்கள்.

ரஃபேல் சர்ச்சை பெரிதாக வெடித்ததும், ‘‘ரஃபேல் விமானங்களை என்ன விலைக்கு வாங்கினோம் என்று வெளிப்படையாகச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. இது மக்கள் வரிப்பணம். இதை மக்கள் அறிந்துகொள்வதில் தப்பில்லை’’ எனப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பேட்டியில் சொன்னார். சில மாதங்களில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பாகக் கேள்வி எழுந்தபோது, ‘`இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இருக்கும் விதி 10-ன் படி இவையெல்லாம் ரகசியங்கள்’’ என்றும் அவரே சொன்னார். ஆனால், அடுத்த சில நாள்களில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ‘‘இந்த ஒப்பந்தத்தில் இருக்கும் விஷயங்களில் எதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்லலாம் என்பதை இந்தியாவின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்’’ என்றார். அதன்பிறகும் விலையைச் சொல்ல மத்திய அரசு தயாராக இல்லை.

‘‘காங்கிரஸ் காலத்தில் பேசியதைவிட 20 சதவிகிதம் குறைவான விலையில் வாங்கியிருக்கிறோம்’’ என்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. ‘‘ஒன்பது சதவிகிதம் குறைவான விலை’’ என்கிறார் நிர்மலா சீதாராமன். விமானப் படைத் துணைத் தளபதி ஆர்.நம்பியார், ‘‘40 சதவிகிதம் குறைவு’’ என்கிறார். எல்லோரும் ஒரே ஒப்பந்தம் பற்றித்தான் பேசுகிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

* காங்கிரஸ் வாங்க நினைத்த விமானமும், பி.ஜே.பி வாங்குவதும் ஒன்றா, வேறு வேறா?

‘பாதுகாப்பு நிபுணர்கள்’ என்ற பெயரில் சுயேச்சையான மனிதர்கள் பலர் இப்போது எல்லா நாடுகளிலும் நடமாடுகிறார்கள். ரஃபேல் பேரம் பற்றி அவர்கள் சொல்வதை வைத்து சில ரகசியங்கள் கசிந்துள்ளன. இதன்படி, ரஃபேல் விமானங்களில் இந்தியாவுக்குத் தேவையானபடி 13 மாற்றங்கள் செய்யப்படுகின்றன. வானிலிருந்தே வானில் இருக்கும் இலக்குகளைத் தாக்கும் வகையில் வசதிகள் செய்யப்படுகின்றன. ரேடார் கண்காணிப்புக் கருவிகள் நவீனமாக மாற்றப்படுகின்றன.

இவையெல்லாம் பழசா, புதுசா என்று சந்தேகம் எழுப்புபவர்கள், 2015-ம் ஆண்டு மோடியும், அப்போதைய பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஹோலாந்தும் வெளியிட்ட கூட்டுப் பிரகடனத்தை கவனிக்க வேண்டும். ‘விமானமும், அதன் துணைக்கருவிகளும் மற்றும் ஆயுதங்களும், இந்திய விமானப்படை ஏற்கெனவே பரிசோதனை செய்து அங்கீகரித்த அதே வடிவமைப்பில் டெலிவரி செய்யப்படும்’ என்கிறது அந்த அறிக்கை. காங்கிரஸ் ஆட்சியில் வாங்க நினைத்ததும், பி.ஜே.பி ஆட்சியில் வாங்கியதும் ஒன்றே. அதன்பிறகு சில ஆயுதங்களை மட்டும் கூடுதலாகச் சேர்த்துக் கேட்டார்கள். இதற்கு 36 விமானங்களுக்கும் சேர்த்தே 9,022 கோடி ரூபாய்தான் கூடுதலாக ஆகிறது என்பதே உண்மை.

மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஹோலாந்த் அங்கு ஒரு கூட்டத்தில் பேசினார். ‘‘புதிய ஒப்பந்தத்தின்படி, இந்த 36 விமான விற்பனையில் நமக்கு மிகப்பெரிய சாதகம் எல்லா விமானங்களும் பிரான்ஸில் தயாராகின்றன என்பதுதான்’’ என்றார் அவர்.

எது எப்படியோ மூச்சுக்கு முந்நூறு முறை ‘மேக் இன் இண்டியா’ என்று முழங்கும் மோடி ஆட்சியில்,  ‘மேக் இன் இண்டியா’ திட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு மகத்தான வாய்ப்பை இழந்துவிட்டோம் என்பது மட்டும் உண்மை.

தி.முருகன்