மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)

என்ன செய்தார் எம்.பி? - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)

முட்டைக்கும் பெப்பே... லாரிக்கும் பெப்பே!

#EnnaSeitharMP
#MyMPsScore

1996 - 2001 தி.மு.க ஆட்சிக் காலம். அ.தி.மு.க சார்பில் ஜெயித்து சட்டமன்றத்துக்கு வந்த நான்கே நான்கு எம்.எல்.ஏ-க்களில் அவரும் ஒருவர். சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்வரிசையில் இருந்த அ.தி.மு.க உறுப்பினர் ஒருவர், ‘‘கறுப்பு மையால் வெள்ளைப் பக்கத்தை நிரப்பியிருக்கும் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை’’ என்று சொல்லி, காலடியில் இருந்த குப்பைத் தொட்டியை எடுத்து, பட்ஜெட்டை புத்தகத்தைக் கிழித்து அதில் போட்டார். எதிரில் இருந்த முதல்வர் கருணாநிதி எழுந்து, ‘‘இந்த நிதிநிலை அறிக்கையில் ‘அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்’ பற்றிக் குறிப்பிட்டிருக்கிறோம். அண்ணாவின் பெயர் தாங்கிய கட்சியின் உறுப்பினர் அண்ணாவுக்குக் கொடுத்த மரியாதை இதுதான். பட்ஜெட்டின் ஆரம்பத்தில் திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது. அந்தத் திருவள்ளுவர் பெயரைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டியிருக்கிறார். ‘சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி’யை உயர்த்தியது பற்றி பட்ஜெட்டில் தெரிவித்திருக்கிறோம். கடைசியில் உறுப்பினர் தன்னையே குப்பைத் தொட்டியில் போட்டிருக்கிறார்’’ என விளாசியபோது பதிலடி கொடுக்க முடியாமல் திணறிப் போனார் அந்த உறுப்பினர். அவர்தான் பி.ஆர்.சுந்தரம். அப்போது ராசிபுரம் எம்.எல்.ஏ-வாக சட்டசபைக்குப் போனவர், இப்போது நாமக்கல் எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்குப் போயிருக்கிறார். அவர்தான் இந்த வார என்ன செய்தார் எம்.பி?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் பி.ஆர்.சுந்தரம்தான் ஜெயிப்பார் என முன்னணி பத்திரிகைகள் எழுதின. அந்தப் பத்திரிகைகளையே தனது தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்ட சாமர்த்தியசாலி சுந்தரம். ஜெயித்து எம்.பி ஆன பிறகு சுந்தரம் செய்தது என்ன? தொகுதியை ரவுண்ட் அடித்தோம்.

‘‘இந்தியாவுக்கே அறிமுகமான ஏரியா, நாமக்கல். தென் இந்தியாவின் முட்டை கேந்திரம் மற்றும் இறைச்சிக்கோழி உற்பத்தி மையம், லாரிகள் வாணிபத்தில் முதலிடம், இந்தியா முழுக்கப் போர்வெல் போடும் வாகனங்களை அனுப்பிவைக்கும் தொழில் நகரம் என இந்தியாவின் பொருளாதாரத்தில் நாமக்கல் மாவட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எண்ணற்ற தேவைகள் இந்தத் தொகுதிக்கு இருக்கும் நிலையில், சுந்தரம் தொகுதிக்கு எப்போதாவது வருவார்; போவார். உயர் கோபுர விளக்குகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுவார். அரசு நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டுவார். அவ்வளவுதான் அவருடைய தொகுதிப்பணி’’ என நக்கலடிக்கிறார்கள் தொகுதிவாசிகள்.

என்ன செய்தார் எம்.பி? - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)

‘‘லாரியும் முட்டையும் பிரதானத் தொழில்களாக இருக்கும் நாமக்கல்லுக்குப் போதுமான அளவுக்கு ரயில் போக்குவரத்து இல்லை. சென்னையிலிருந்து நாமக்கல் வழியாக பழனிக்கு ஒரு ரயிலும், பெங்களூரிலிருந்து ஒரு ரயிலும் என இரண்டு ரயில்கள் மட்டுமே வந்து செல்கின்றன. சேலத்திலிருந்து கரூர் வரை சில ரயில்களை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கையைக்கூட பி.ஆர்.சுந்தரம் நிறைவேற்றவில்லை. ஒரு தொழில் நகரத்துக்கு மத்திய அரசிடமிருந்து பல திட்டங்களைக் கொண்டுவந்திருக்கலாம். அப்படிப் பிரதானத் தொழில்களை மையப்படுத்திக்கூட எந்தத் திட்டத்தையும் அவர் கொண்டுவரவில்லை” என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க மாவட்டச் செயலாளருமான காந்தி செல்வன்.

‘‘நாமக்கல் தொகுதிக்குள் இருக்கும் கொல்லிமலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் இல்லை. ‘கொல்லிமலையில் நீர்மின் நிலையம் அமைக்கப்படும்’ என்று ஜெயலலிதா சொல்லி யிருந்தார். அந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப் படுகின்றன. அதற்கு மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்’’ எனக் கோரிக்கை வைத்தார்கள் அப்பகுதியினர்.
‘‘தென் மண்டலத்துடன் நாமக்கல் கோழிப்பண்ணைகளும் இணைந்திருப்பதால், கேரளாவில் கோழிகளுக்குப் பாதிப்பு என்றால் நாமக்கல் கோழிகளின் விற்பனையைப் பாதிக்கிறது. எனவே நாமக்கல் கோழி பண்ணைகளை மையமாக வைத்து, தனி மண்டலம் ஒன்றை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதுபற்றி எம்.பி-யிடம் வலியுறுத்தினோம். ‘நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன்’ என்றார். ஆனால், அதற்கான எந்தப் பணிகளும் இதுவரை நடைபெறவில்லை. இங்கு உற்பத்தியாகும் முட்டைகளை வைப்பதற்காகக் குளிரூட்டு நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை’’ என்றார் கோழிப்பண்ணை அதிபர் இளங்கோ.

‘‘எங்க எம்.பி-யை அணுகுவது எளிதுதான். ரேஷன் கடைகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அதிகம் பேசியிருக்கிறார். ஜவ்வரிசி தொழிலில் ஈடுபட்டிருக்கும் அவர், அந்தத் தொழில் மேம்பாட்டுக்காக எதையும் செய்யவில்லை. கொல்லிமலைப் பகுதியில் பாக்ஸைட் வெட்டி எடுக்கப்பட்டு, இயற்கை வளம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தடுப்பதற்கான முயற்சியை எம்.பி எடுக்கவில்லை” என்கிறார் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ்.

நாமக்கல் லாரி தொழிலில் ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது. ‘‘இந்த லாரித் தொழிலை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் எதையும் எம்.பி கொண்டு வரவில்லை’’ என்று புலம்பல்கள் கேட்கின்றன. ‘‘லாரிகள் உற்பத்தி மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த மையம், லாரி ஓட்டுநர்கள் பயிற்சி மையம் ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். நிறைவேறவில்லை. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அது முதலில் எங்களைத்தான் பாதிக்கிறது. எங்களின் குரலை நாடாளுமன்றத்தில் எம்.பி ஒலித்திருக்க வேண்டும். லாரிகள் அதிகம் இருக்கும் சங்ககிரி பகுதிக்கு அவர் வருவதே அரிதாகத்தான் இருக்கும். லாரிகளுக்கு ஒரு பக்கம் பாதிப்பு என்றால், திருச்செங்கோடு பகுதியில் செயல்படும் போர்வெல் தொழிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. அதற்கும் எம்.பி தீர்வு தேடவில்லை’’ என்கிறார் லாரி உரிமையாளர் கண்ணன்.

சங்ககிரியைச் சேர்ந்த தூரன் நம்பி, ‘‘நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் லாரி உரிமையாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேண்டிய வசதியை அரசு செய்து தரவில்லை. ஒரு முறை மும்பைக்குச் சென்று திரும்ப, டோல் கட்டணம் மட்டும் 25,000 ரூபாய் செலவாகிறது. டோல்கேட் பிரச்னையில் எம்.பி குரல் கொடுப்பார் என எதிர்பார்த்தோம். ஏமாற்றிவிட்டார்’’ என்கிறார்.

பரமத்தி வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ மூர்த்தி “மேட்டூர் உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுத்து உபரிநீரைத் திருப்பிவிடும் மேட்டூர் காவிரி - சரபங்கா ஆறு - திருமணிமுத்தாறு - அய்யாறு இணைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டும் செயல்படுத்தப்படவில்லை. திருச்செங்கோடு ராஜவாய்க்கால் திட்டத்துக்கு உலக வங்கி நிதி அளிக்க முன்வந்தது. ஆனால், அதற்கான திட்டவரவை இதுவரை அனுப்பாததால் அந்தத் திட்டமும் செயல்படுத்தப்படாமல் உள்ளது” என்றார்.

திருச்செங்கோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராயப்பனிடம் பேசினோம். ‘‘தேர்தலில் வாக்குறுதிகளை வாரி வழங்கினார் பி.ஆர்.சுந்தரம். ‘திருச்செங்கோடு நகரில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காக ரிங் ரோடு கொண்டு வருவேன். திருச்செங்கோட்டில் 20 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. நான் வெற்றி பெற்றால் சீரான குடிநீர் வசதி கிடைக்க ஏற்பாடு செய்வேன். திருச்செங்கோட்டில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வருவேன். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக விரிவாக்கம் செய்வேன்’ என வாக்குறுதிகள் அள்ளி வீசினார். ஜெயித்து எம்.பி ஆனபிறகு, திருச்செங்கோட்டுக்கு எம்.பி நிதியிலிருந்து ஒரு குப்பைத் தொட்டிகூட வாங்கி வைக்கவில்லை” எனக் கொதித்தார்.

கொல்லிமலையில் இருக்கும் திண்ணனூர், பிறைகரைநாடு ஆகிய இரண்டு கிராமங்களை பி.ஆர்.சுந்தரம் தத்தெடுத்திருக்கிறார். அவற்றின் நிலை என்ன? கொல்லிமலையைச் சேர்ந்த முருகனிடம் பேசினோம். ‘‘சாலை, தெருவிளக்கு போன்ற சில பணிகள் தவிர பெரிய அளவில் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தத்தெடுத்த நேரத்தில் மட்டுமே சில பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தன்னிறைவு பெறும் அளவுக்கு இந்த கிராமங்கள் மேம்படவில்லை. மலைப் பகுதியில் உள்ள சில கிராமங்களுக்கு இன்னும் சரியான சாலை வசதி கிடையாது. இரண்டு முறை மட்டும் எம்.பி இங்கே வந்து போனார்’’ என்றார். 

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பி.ஆர்.சுந்தரம் என்ன சொல்கிறார். ‘‘திருச்செங்கோடு ரிங் ரோடு பணிகள் ஆய்வில் உள்ளன. நாமக்கல் கோழிப்பண்ணைகளை தனி மண்டலமாக உருவாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன். ஆட்டோ நகர் உருவாக்க வேலகவுண்டன்பட்டியில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. திருச்செங்கோடு மருத்துவமனைக்கு வாகனங்கள், அமரர் ஊர்தி வாங்கிக் கொடுத்திருக்கிறேன். மருந்து சேமிப்பு கிடங்கு கட்டிக் கொடுத்துள்ளேன். நீரூற்றுக் கிணறு, சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். ஏரி சீரமைப்புப் பணிகளைச் செய்துள்ளேன். கோடைக்காலத்தில் என் சொந்த செலவில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒரு வாகனம் ஏற்பாடு செய்து, மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து குடிநீர் சப்ளை செய்திருக்கிறேன். நான் தத்தெடுத்த கிராமங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதபோதும் மாநில அரசின் உதவியோடு பல திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறேன்’’ என்றார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- வீ.கே.ரமேஷ், அ.சையது அபுதாஹிர்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)
என்ன செய்தார் எம்.பி? - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)
என்ன செய்தார் எம்.பி? - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

நா
மக்கல் எம்.பி-யான சுந்தரத்துக்குத் தொகுதிக்குள் தனியாக அலுவலகம் கிடையாது. ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோயில் அருகே உள்ள தன் வீட்டின் ஒரு பகுதியை அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார். இங்கு சுந்தரத்தின் உதவியாளர் முருகன் என்பவர் இருக்கிறார். இவர்தான் மக்களிடம் மனுக்களைப் பெற்று எம்.பி-யிடம் கொடுக்கிறார்.

ராசிபுரம் வி.நகர் பகுதியில் குடியிருக்கிறார் நியமத்துல்லா. புற்றுநோயாளியான இவர் தனியார் துணிக்கடையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். தனது சிகிச்சைக்கும், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் 16 வயது மகன் அனஸ் சிகிச்சைக்கும் உதவி செய்யுமாறு கேட்டு எம்.பி அலுவலகத்துக்குச் சென்று முருகனிடம் மனு கொடுத்தார். வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த எம்.பி சுந்தரம், அந்த மனுவை வாங்கிப் படித்துவிட்டு, ‘‘ஆபரேஷனுக்கு முன்னாடி வந்திருக்க வேண்டியதுதானே?’’ என்று கூறி 1,000 ரூபாய் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

‘‘வட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆபரேஷன் செய்து கொண்டேன். தொடர்ந்து எந்த வேலையும் செய்ய முடியவில்லை. வாழ்வாதாரமே இல்லாமல் தவிக்கிறோம். இந்தநிலையில்தான் எம்.பி-யிடம் உதவி கேட்டேன். ஆனால், 1,000 ரூபாய்தான் கொடுத்தார்’’ என்றார் நியமத்துல்லா.

எம்.பி எப்படி?

நா
மக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியிருக்கும் ராசிபுரம், நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி வேலுார், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 586 பேரை சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:

என்ன செய்தார் எம்.பி? - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)
என்ன செய்தார் எம்.பி? - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)