Published:Updated:

`விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா?’ - சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி

`விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா?’ - சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி
`விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா?’ - சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி

குட்கா ஊழல் வழக்கு விசாரணை ஜரூராக நடந்துவருகிறது. அதன் ஒரு கட்டமாக, தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை கடந்த 2 நாளாக சிபிஐ அலுவலகத்துக்கு வரச் சொல்லி விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த நிலையில், இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர் நேராக முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, முக்கியமான சில விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, விஜயபாஸ்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்வார் என்று தலைமைச்செயலக வட்டாரத்தில் செய்தி தீயாகப் பரவிவருகிறது. 

சிபிஐ பிரிவை கவனிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிபிஐ-யின் இயக்குநர் பொறுப்பு வகிக்கும் நகேஸ்வர ராவ் மற்றும் உயர் அதிகாரிகள், குட்கா வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து அவசரமாகக் கூடி விவாதித்தனர். இந்த வழக்கை பிரதமர் மோடியும், பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் துரிதப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர். இதற்கு, அரசியல் பின்னணியும் உண்டு. டெல்லியில் அ.தி.மு.க எம்.பி-க்கள் மாநிலப் பிரச்னைகளுக்காக உரக்கக் குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஐந்து மாநில தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு, பி.ஜே.பி-யின் பின்னடைவை கருத்தில்கொண்டு, அ.தி.மு.க தரப்பில் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மாநில அமைச்சர்கள் சிலர் பி.ஜே.பி-க்கு எதிரான கருத்துக்களை ஆங்காங்கே பதிவுசெய்துவருகின்றனர். இதையெல்லாம் கவனித்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், டெல்லி மேலிடத்துக்கு அவசர குறிப்பு அனுப்பினர். அதையடுத்து, குட்கா வழக்கை முதல்கட்டமாகக் கையில் எடுத்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சரகத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழக அரசின் மேலிடத்தைத் தொடர்புகொண்டு காட்டமாகப் பேசியிருக்கிறார். 

`டெல்லியில் மீ டூ புகாரில் பெயர் அடிபட்டவுடன், எம்.ஜே.அக்பர், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினமாசெய்தார். வழக்கை சந்தித்து, குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று நிரூபித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப்போனார். அவருக்கு ஒரு நீதி, உங்கள் மாநில அமைச்சர் விஜயபாஸ்கருக்கு  ஒரு நீதியா? முதலில் அவரை ராஜினமா செய்யச்சொல்லுங்கள். இல்லாவிட்டால், விபரீதங்களைச் சந்திக்க நேரிடும். குட்கா ஊழல் விவகாரத்தில் அவருக்கு எதிராக வலுவான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அமைச்சரின் உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகிய இருவரின் வாக்குமூலங்களின் அடிப்படையில், வேறு முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தவேண்டியுள்ளது. அதற்கு முன்பு, விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் குழம்பிப்போன முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கரை நேரில் வரச் சொல்லி, நடந்ததைச் சொல்லியிருக்கிறார். அதையடுத்து, தற்போதுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்ய அ.தி.மு.க சீனியர் அமைச்சர்கள் ஆலோசனை நடத்திவருவதாகவும் சொல்லப்படுகிறது.