Published:Updated:

அமைச்சர் பதவியிலிருந்து விஜயபாஸ்கர் விலகலா? சி.பி.ஐ. விரிக்கும் வலை!

விஜயபாஸ்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தலைமைச்செயலக வட்டாரத்தில் செய்தி தீயாக பரவிவருகிறது. 

அமைச்சர் பதவியிலிருந்து விஜயபாஸ்கர் விலகலா? சி.பி.ஐ. விரிக்கும் வலை!
அமைச்சர் பதவியிலிருந்து விஜயபாஸ்கர் விலகலா? சி.பி.ஐ. விரிக்கும் வலை!

குட்கா ஊழல் வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. மிகவும் ஜரூராக விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, தற்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரை, கடந்த 2 நாள்களாக சி.பி.ஐ. அலுவகலகத்துக்கு வரச் சொல்லி விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை முடிந்த நிலையில், இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர் நேராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது முக்கியமான சில விஷயங்கள் குறித்து இருவரும் பேசியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, சி.விஜயபாஸ்கர் தன்னுடைய அமைச்சர் பதவியை விரைவில் ராஜினமா செய்வார் என்று தலைமைச்செயலக வட்டாரத்தில் செய்தி தீயாக  பரவிவருகிறது. 

அமைச்சர் பதவியிலிருந்து விஜயபாஸ்கர் விலகலா? சி.பி.ஐ. விரிக்கும் வலை!

சி.பி.ஐ. பிரிவைக் கவனிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சி.பி.ஐ-யின் இயக்குநர் பொறுப்பு வகிக்கும் நாகேஸ்வர ராவ் மற்றும் உயர் அதிகாரிகள், குட்கா ஊழல் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவசரமாகக் கூடி விவாதித்தனர். இந்த வழக்கை துரிதப்படுத்தும்படி, பிரதமர் நரேந்திர மோடியும், பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு அரசியல் பின்னணியும் உண்டு.

டெல்லியில் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் மாநிலப் பிரச்னைகளுக்காக  உரத்த குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஐந்து மாநிலத் தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு பி.ஜே.பி-யின் பின்னடைவைக்  கருத்தில்கொண்டு அ.தி.மு.க.தரப்பில் மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர் அவர்கள். நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, மாநில அமைச்சர்கள் சிலர், மத்திய பி.ஜே.பி. அரசுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இவற்றையெல்லாம் கவனித்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், டெல்லி மேலிடத்துக்கு அவசரக் குறிப்புகளை அனுப்பினர். இதையடுத்தே, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும் குட்கா ஊழல் வழக்கை முதல்கட்டமாகக் கையில் எடுத்துள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள். மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழக அரசின் மேலிடத்தைத் தொடர்புகொண்டு, மிகவும் காட்டமாகப் பேசியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அமைச்சர் பதவியிலிருந்து விஜயபாஸ்கர் விலகலா? சி.பி.ஐ. விரிக்கும் வலை!

"டெல்லியில் '#MeToo' புகாரில் பெயர் அடிபட்டவுடன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த எம்.ஜி.அக்பர், அவருடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 'வழக்கைச் சந்தித்து தன் மீதான குற்றச்சாட்டு பொய்ப் புகார் என்று நிரூபித்துவிட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டு அவர் ராஜினாமா செய்தார். அவருக்கு ஒரு நீதி; குட்கா ஊழலில் பெயர் அடிபடும் உங்கள் மாநில அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு இன்னொரு நீதியா? முதலில் அவரை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். இல்லாவிட்டால், விபரீதங்களைச் சந்திக்க நேரிடும். குட்கா ஊழல் விவகாரத்தில் அவருக்கு எதிராக வலுவான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அமைச்சரின் உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகிய இருவரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் வேறு முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்த வேண்டியுள்ளது. அதற்கு முன்பு, விஜயபாஸ்கர் அவருடைய அமைச்சர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சட்டம் தன் கடமையை செய்யும்'' என உள்துறை அமைச்சக அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.

இதனால், என்ன செய்வதென்று புரியாமல் குழம்பிப் போன முதல்வர் எடப்பாடி, இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் வரச் சொல்லி, நடந்ததைச் சொல்லியிருக்கிறார். அதையடுத்து, தற்போதுள்ள எடப்பாடி தலைமையிலான அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்வது பற்றி, அ.தி.மு.க. சீனியர் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே, தமிழக அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கர் ராஜினாமா செய்வதுடன், மேலும் சில அமைச்சர்களின் இலாக்காகளும் மாற்றப்படலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் தெரிவிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.