Published:Updated:

``ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்!" ஸ்டாலின் அறிவிப்பு எடுபடுமா?

``ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்!" ஸ்டாலின் அறிவிப்பு எடுபடுமா?
``ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்!" ஸ்டாலின் அறிவிப்பு எடுபடுமா?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேகத்தைக் கூட்டியிருக்கிறது என்றே சொல்லலாம். சிலைத் திறப்பு, பதவியேற்பு விழாக்களின் மேடைகளை கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மேடையாக காங்கிரஸ் கட்சி மாற்றி வருகிறது.

``ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்!" ஸ்டாலின் அறிவிப்பு எடுபடுமா?

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது காங்கிரஸ். நாடு முழுவதும் போட்டியிட்டு வெறும் 44 இடங்களையே அந்தக் கட்சி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. 2017-ம் ஆண்டு நடந்த உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலும் காங்கிரஸுக்கு மிகப்பெரிய தோல்வியாகவே அமைந்தது. வெறும் ஏழு இடங்களிலேயே அக்கட்சி வெற்றிபெற்றது. அதன் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து, பல கட்சிகள் அதிகாரபூர்வமாக வெளியேறின. சில கட்சிகள், 'இருக்கிறோமா? இல்லையா?’ என்பதை அறிவிக்காமல் தொடர்ந்து அமைதியாகவே இருந்தன. 

ஆனால், இப்போது நாடு தழுவிய அளவில் காட்சிகள் மாறுகின்றன. குஜராத் தேர்தலில் 'வெற்றிகரமான தோல்வி’, கர்நாடகத்தில் 'கூட்டணி ஆட்சி’ என்று, காங்கிரஸ் ஏறுமுகத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கும் காலம் இது. அண்மையில் முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும், காங்கிரஸ் கட்சியின் மீதான கூட்டணிக் கட்சிகளின் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கின்றன. இதனால், வெளியேறிய கட்சிகள் மீண்டும் காங்கிரஸ் அணிக்கே திரும்பிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், ``கூட்டணி விஷயத்தில் கறார்த்தன்மையைக் காட்ட காங்கிரஸ் விரும்பவில்லை” என்கிறார்கள், காங்கிரஸ் அரசியலை கவனிப்பவர்கள். அவர்கள், ``வட இந்தியாவில் வலுவான வாக்குவங்கியை வைத்திருக்கிறது பி.ஜே.பி. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தல்களில் பி.ஜே.பி தோற்றிருந்தாலும், அதன் வாக்கு சதவிகிதத்தில் பெரியளவுக்கு வீழ்ச்சி ஏற்படவில்லை. எனவே, 'பி.ஜே.பியை வீழ்த்த வேண்டுமானால், மாநிலக்கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவை’ என்று காங்கிரஸ் இப்போதே கணக்குப் போடுகிறது. அதனால், சில சமரசங்களைச் செய்தாவது, வலுவான கூட்டணியை அமைத்துவிட வேண்டும் என்பதில் சோனியாவும், ராகுல் காந்தியும் உறுதியாக இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

கர்நாடகத் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெற முடியாமல் பின்னடைவைச் சந்தித்தபோது, `கூட்டணி’யின் அவசியத்தை காங்கிரஸ் உணர்ந்தது எனலாம். அந்தத் தேர்தலுக்கு முன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ``காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டால் மட்டுமே, பி.ஜே.பி-யை வீழ்த்த முடியும்” என்று அறிவுறுத்தினார். ஆனால், காங்கிரஸ் அதைப் பொருட்படுத்தவில்லை. அப்புறம், மம்தா வாக்கே பலித்தது. காங்கிரஸ் 78 இடங்களையும், ம.ஜ.த 37 இடங்களையும் பெற, பி.ஜே.பி 104 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அப்போதுதான், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் அவசியத்தை உணர்ந்தனர் காங்கிரஸ் தலைவர்கள் பலர். உடனடியாக, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவர் குமாரசாமியை முதலமைச்சராக்க ஒப்புக்கொண்டார்கள். இப்போது காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி கர்நாடகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

``ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்!" ஸ்டாலின் அறிவிப்பு எடுபடுமா?

சமீபத்திய ஐந்து மாநிலத் தேர்தல்களில், மாநிலக் கட்சிகளின் பங்களிப்பென்று பெரியளவில் எதுவுமில்லை. மூன்று மாநிலங்களில், காங்கிரஸும், பி.ஜே.பி-யும் நேரடியாக மோதின. தெலங்கானாவில் மட்டும் சந்திரசேகர் ராவை எதிர்க்க, சந்திரபாபு நாயுடுவைத் துணைக்கு அழைத்துக்கொண்டது காங்கிரஸ். அங்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் அணியில் இணைந்தது. ஆனால், முடிவுகள் வேறு மாதிரி அமைந்தன. மத்தியப்பிரதேசத்தில் சொற்ப எண்ணிக்கையில், தனிப்பெரும்பான்மையை இழந்தது காங்கிரஸ். அங்கே மாயாவதி, அகிலேஷ் யாதவின் ஆதரவைப் பெற்று, இப்போது ஆட்சியமைத்திருக்கிறது காங்கிரஸ்.

இந்த நிலையில் தி.மு.க., தெலுங்குதேசம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி போன்ற கட்சிகள் வெளிப்படையாகவே காங்கிரஸை ஆதரிக்கின்றன. காங்கிரஸ் கட்சி நடத்தும் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள். இவையெல்லாம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பழைய ஃபார்முக்கு திரும்புவதை உணர்த்துகின்றன. ஆனால், அந்தக் கூட்டணியில் சிக்கல்களும், குழப்பங்களும் நீடிக்கின்றன. `மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது’ என்ற கருத்தில் உறுதியாக இருப்பவர்கள், ‘ராகுல் பிரதமராக வேண்டும்’ என்ற கருத்தில் உடன்படாதவர்களாக இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், கூட்டணி குளத்தில் முதல் கல்லை எறிந்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். டிசம்பர் 16-ம் தேதி, சென்னையில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய அவர், ``ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன்” என்று பகிரங்கமாகவே அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியினரோ, ``தேர்தல் முடிந்த பிறகு அறிவித்திருக்கலாம்” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், ``ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தன்னை பிரதமர் வேட்பாளர் எனக் கூறிக் கொள்வதில் ராகுலுக்கே விருப்பமில்லை” என்று சொல்லியிருக்கிறார்.

``ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்!" ஸ்டாலின் அறிவிப்பு எடுபடுமா?

இதையெல்லாம் குறிப்பிட்டுப் பேசும் அரசியல் நோக்கர்கள், ``கூட்டணியில் சலசலப்பு ஏற்படுவதை ராகுல் விரும்பவில்லை. மோடியையே எங்களுக்கு ஜூனியர் என்று சொன்னவர்கள் மம்தாவும், சந்திரபாபு நாயுடுவும். இப்போது ராகுலையும் ஜூனியர் என்று சொல்லி ஏற்க மறுக்கலாம். இதுபோல பல முரண்பாடுகள் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கின்றன. தேர்தலுக்கு முன்பாக, `ராகுல்தான் எங்கள் அணியின் பிரதமர் வேட்பாளர்’ என்று சொல்ல, மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு போன்றோர் தயாராக இல்லை. தற்போதைய நிலவரங்களும் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், இவர்களைத் தவிர்த்துவிட்டு கூட்டணி அமைக்கவும் ராகுல் விரும்பவில்லை. வருபவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறார் ராகுல்” என்று சொல்கிறார்கள். அதோடு, ``ஸ்டாலின் முந்திக்கொண்டு `ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்’ என்று அறிவித்தது, ராகுலுக்கு பயனளிக்கிறதோ, இல்லையோ, ஸ்டாலினுக்குப் பயனளிக்க ஆரம்பித்திருக்கிறது. அவர் சொல்லிய கருத்து, வட இந்திய ஊடகங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. ஆக, ஒரு விவாதத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் ஸ்டாலின். அந்த விதத்தில், ஸ்டாலினுக்கு தேசிய அளவில் ஒரு கவனத்தை கொடுத்திருக்கிறது, இந்த அறிவிப்பு” என்கின்றனர்.

கர்நாடகத் தேர்தலின்போது, ``பிரதமராவேன்” என்று சொன்னார் ராகுல். ஆனால், அதற்குப் பிறகு, எந்த இடத்திலும் பிரதமர் பதவி குறித்து அவர் பேசவில்லை. இது ஒருபுறம் இருந்தாலும், கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் பல படிகள் முன்னோக்கி நகர்ந்திருக்கிறது என்றே கூற வேண்டும். ஆனால், மத்தியில் ஆளுங்கட்சியான பி.ஜே.பி. அமைதியாக இருக்கிறது. அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சிகளென்றால், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் போன்ற மிகச்சில கட்சிகளே கண்ணுக்குத் தெரிகின்றன. ஆனால், ``5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கூட்டணியின் அவசியத்தை பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவும் உணர்ந்திருக்கிறார். விரைவில் நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்” என்கிறார்கள் பி.ஜே.பி. வட்டாரத்தில்.

இவர்களுக்கு இடையே, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ``காங்கிரஸ், பி.ஜே.பி. இல்லாத இந்தியா” என்ற முழக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். ``வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளே பெரும்பங்கு வகிக்கப்போகின்றன” என்பது அவரது கணக்கு. மூன்றாவது அணி அமைக்கும் முடிவில் இருக்கிறார், அவர். ஆனால், அவருடைய அறிவிப்புக்கு மாநிலக்கட்சிகள் தரப்பில் இருந்து பெரியளவில் ஆதரவு கிடைக்கவில்லை. ஆக, மூன்றாம் அணி என்பது நிகழமுடியா கனவாகவே நீடிக்கிறது. இதுவரையிலான காட்சிகளை வைத்துப் பார்த்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக்  கூட்டணி மட்டுமே, ஆட்டத்தில் இருக்கின்றன.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையேதான் நாடாளுமன்றத் தேர்தல் என்கிற 'இறுதி ஆட்டம்’!