Published:Updated:

``பத்மாவின் விரல்கள் நீலம் பூக்க ஆரம்பிச்சுடுச்சு" புழல் சிறையில் என்ன நடக்கிறது?

பத்மாவின் குடும்பத்துக்கு விஷயம் தெரியவர அவர்கள் ஊடகங்களுக்குச் சொன்ன விஷயங்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியவை. பத்மாவுக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதா. மற்ற விசாரணைக் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் விதமாக சிறையில் உள்ள ஒரு மாவோயிஸ்ட் பெண் விசாரணைக் கைதியின் உறவினரிடம் பேசினேன்.

``பத்மாவின் விரல்கள் நீலம் பூக்க ஆரம்பிச்சுடுச்சு" புழல் சிறையில் என்ன நடக்கிறது?
``பத்மாவின் விரல்கள் நீலம் பூக்க ஆரம்பிச்சுடுச்சு" புழல் சிறையில் என்ன நடக்கிறது?

சென்னைப் புழல் சிறையில் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டிருக்கும் மாவோயிஸ்ட் பத்மா அலைக்கழிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது அவரின் உடல்நிலை பற்றி விசாரித்தோம். 

ருவரைக் கைது செய்து சிறைக்குக் கொண்டு செல்வது விசாரணைக்காக இருக்கட்டும் அல்லது தண்டனை கொடுப்பதற்காக இருக்கட்டும்... எதுவானாலும் அவர்களும் மனிதர்களே. அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு எந்தச் சிறைச்சாலைக்கும், எந்தக் காவல்துறைக்கும், ஏன் நீதிமன்றத்துக்கே கூட உரிமை கிடையாது. என்றாலும் பல்வேறு சிறைகளில் தொடர்ந்து கைதிகளின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது அவ்வப்போது வெளியுலகிற்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன. 

புழல் சிறையில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட பத்மாவை மருத்துவமனையில் சேர்க்கப் பரிந்துரை செய்யப்பட்டதன் பேரில், அவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், உள்ளே அடைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. பத்மாவின் குடும்பத்துக்கு இதுகுறித்த விஷயம் தெரியவர, அவர்கள் ஊடகங்களுக்குச் சொன்ன விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பத்மாவுக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதா, மற்ற விசாரணைக் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து  கொள்ளும் விதமாக சிறையில் உள்ள ஒரு மாவோயிஸ்ட் பெண் விசாரணைக் கைதியின் உறவினரிடம் பேசினோம்.  

``விசாரணைக் கைதிகளாக வருவோர் யார் என்பதைப் பார்த்த பின்னரே, அங்கே அடிப்படை உரிமைகள் கிடைக்கின்றன. உள்ளே இருக்கிறவங்க நினைக்கிற புத்தகத்தைக்கூட தர மாட்டார்கள். எதை வேணும்னாலும் எடுத்துட்டுப்போங்க சே குவரே புத்தகமெல்லாம் சிறைக்குள்ள அனுமதிக்க மாட்டோம்னு சொன்னாங்க. ஆனா, பீடி, கஞ்சாவுக்கெல்லாம் அனுமதி அளிக்கிறாங்க. அப்படிப் பார்த்தால், கைதிகளுக்கு போதைப் பொருளைக் கூட கொடுத்திடலாம். ஆனால், குறிப்பிட்ட சில புத்தகங்களைக் கொடுக்க முடியாது.

சிறையில் நைட்டி அணியக் கூடாதுன்னு சொல்றாங்க. வெயிலின் கொடுமை எப்படி இருந்தாலும் புடவையிலதான் இருக்கணும்னு சொல்வாங்க. உள்ளே இருக்கறவங்களுக்கு மாம்பழம், வேர்க்கடலை, திராட்சை, சப்போட்டா போன்றவற்றை அனுமதிக்க மாட்டாங்க. கேட்டா, `இதையெல்லாம் அனுமதிச்சா உள்ளே சாராயம் காய்ச்சுவாங்க'ன்னு சொல்லுவாங்க. கழிவறை சுத்தமாவே இருக்காது. அவ்வளவு துர்நாற்றம் அடிக்கும். சிறை வார்டன் உள்ளிட்டோரை யாராவது எதிர்த்துப் பேசினா, அவங்கள விட்டு கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்வாங்க. இன்னும் சொல்றதுக்கு நிறைய இருக்கு" என்றார். 

சிறைக் கைதிகளின் உரிமை குறித்து தொடர்ந்து பேசிவரும் வழக்கறிஞர் கேசவனிடம் பேசினோம்.

``தனக்கு இருக்கக்கூடிய உடல்நிலைப் பிரச்னைகளைப் பற்றி பத்மா, நீதிமன்றத்தில் ஏற்கெனவே சொல்லி இருக்காங்க. ஆனாலும் அவங்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவங்க இதயத்துடிப்பு ரொம்ப வேகமா துடிக்க ஆரம்பிச்சு இருக்கு. புழல் சிறையில இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்குக்  கொண்டுபோகவே ஒரு மணி நேரம் ஆகியிருக்கு. புழல் போன்ற மிகப்பெரிய சிறைச்சாலைக்கு அருகில் ஒரு பெரிய மருத்துவமனை இருக்க வேண்டாமா? சரி, மருத்துவமனைக்குத்தான் கூட்டிட்டுப் போனாங்களே, அங்கேயாவது முறையான சிகிச்சை கொடுத்தாங்களா என்றால் அதுவும் இல்லை. முதல்ல இதயநோய் சிகிச்சைப் பிரிவில் பத்மாவை அனுமதிக்கல. அரைகுறையாக சிகிச்சை கொடுத்து, மீண்டும் சிறைக்குக் கொண்டுபோனாங்க. பத்மாவை சிறை அதிகாரிகள் அணுகுற விதத்தைப் பார்க்கும்போது ஏதோ பழி வாங்கற நோக்கத்தோடு செயல்படுறாங்களோன்னு தோணுது. சிறையில் அவங்க நிலைமை இன்னும் சரி ஆகல. கை விரல்கள் எல்லாம் நீலம் பூத்து இருக்கிறதா சொல்றாங்க. சிறைச்சாலை என்பது தவறு செய்கிறவர்கள் திருந்தி வெளியேறுகிற இடமாகத்தான் இருக்கணும். ஆனா உண்மையில் அப்படியில்ல. உள்ளேயே கைதிகள் மோசமா நடத்தப்பட்டு இறந்து போறாங்க. கைதிகளின் அடிப்படை உரிமைகள் குறித்து வெளியே இருக்கிற பொதுமக்கள் எப்போ அக்கறைப்படுறாங்களோ, அப்போதான் மாற்றம் தொடங்கும். அதுவரை பல கைதிகள் சைலன்டாக இறந்துட்டுதான் இருப்பாங்க" என்றார்.