Published:Updated:

தினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு!? எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்

``யாரும் எதிர்பாராதவிதமாக, ஜனவரி 26 அன்று, குடியரசுத் தினத்தை மேற்கோள்காட்டி, சசிகலா விடுதலை ஆகலாம். அதற்கான சூழ்நிலைகள் கனிந்து வருகின்றன.

தினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு!? எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்
தினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு!? எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்

புத்தாண்டில் புதிய அரசியல் அதிரடிகளை காணப்போகிறது தமிழகம். எடப்பாடி அதற்கான திட்டம் தீட்டி வருகிறார். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஏற்பாடுகள் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், ஒன்றுபட்ட அ.தி.மு.க-வை உருவாக்கினால் மட்டுமே, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை துணிச்சலாக எதிர்கொள்ள முடியுமென்ற நிலைக்கு, பி.ஜே.பி. மேலிடம் வந்துள்ளது.

டி.டி.வி. தினகரனையும், செங்கோட்டையனையும் முன்னிறுத்தி, தி.மு.க. –அ.ம.மு.க. இணைப்பு என்ற திட்டத்தை டெல்லி முன்வைத்தது. அதற்கு, முதலில் சம்மதித்த தினகரன், பிறகு மறுத்துவிட்டார். அவரின் எதிர்பார்ப்பு, எடப்பாடியை நீக்கிவிட்டு, தன்னை முதல்வராக்க வேண்டும் என்பதுதான். இதைக்கேட்டுக் கடுப்பான எடப்பாடி, வேறு திசையில் காய் நகர்த்த ஆரம்பித்தார். அதையடுத்து, எடப்பாடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, பரோலில் சென்னை வந்திருந்த இளவரசியை ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.

`சசிகலாவை கட்சியை விட்டு நீக்கவேண்டும்' என்று டெல்லிதரப்பில் கடுமையான அழுத்தம் கொடுத்தபோதும், ஓ.பன்னீர்செல்வம் நச்சரித்தபோதும், எடப்பாடி அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. சசிகலாவை எதிர்த்து அவர் இதுவரை ஏதும் செய்யவுமில்லை. இவற்றையெல்லாம் இளவரசியிடம் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார் தூது சென்ற பெண்மணி. பரோல் முடிந்து பெங்களூரு சிறைச்சாலைக்குச் சென்ற இளவரசி, கட்சியின் நிலவரம் குறித்து பல விஷயங்களை சசிகலாவிடம் பேசியிருக்கிறார். அவைதான், இப்போது நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. அதன்படி, `அ.ம.மு.க. என்கிற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்த தினகரன் தனித்துவிடப்படுவார். அவரது கோஷ்டியில் இருப்பவர்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்குத் திரும்பவேண்டும்' என்று தூதுவர்கள் சந்தித்துப் பேசி வருகிறார்கள். அவர்களுடன் சேர்த்து, ஒரு எம்.எல்.ஏ. என்கிற வகையில் தினகரனும் கட்சியைக் கலைத்துவிட்டு அ.தி.மு.க-வுக்கு வரலாம். அல்லது, வராமல் இருக்கலாம். சசிகலா ஆலோசனையின்பேரில், தினகரனுக்கு உரிய மரியாதை தரப்படும்' என்று தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், தினகரன் `நோ’ சொல்லி விட்டதாகத் தகவல்.

கன்னட மொழி கற்றுக்கொள்ளும் சசிகலா!

`இதற்குப் பின்பு, சசிகலாவின் திட்டமென்ன?' என்று கட்சி வி.ஐ.பி. ஒருவரிடம் பேசினோம். ``யாரும் எதிர்பாராதவிதமாக, ஜனவரி 26 அன்று, குடியரசுத் தினத்தை மேற்கோள்காட்டி, சசிகலா விடுதலை ஆகலாம். அதற்கான சூழ்நிலைகள் கனிந்து வருகின்றன. இப்போது கன்னட மொழியை சிறைச்சாலையில இருந்தபடி, சசிகலா தீவிரமாகப் படித்து வருகிறாராம். அதுதொடர்பான தேர்வு ஒன்றையும் அவர் எழுதப்போகிறார். இதெல்லாம் சம்பிரதாயம்தான். இந்தத் தேர்வு ரிசல்ட் சர்டிஃபிகேட் கிடைத்தால் போதும். அவரின் தண்டனைக் காலத்தை ஒரு வருடம்வரை குறைக்க வாய்ப்புகள் அதிகமாகும். இதற்குமேல் இப்போது சொல்லமுடியாது. 

கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் அவர் அமர்த்தப்படுவார். எடப்பாடி, முதல்வராகத் தொடர்ந்து நீடிப்பார். இருவரும் ஆலோசனை நடத்தி, ஊழல் அமைச்சர்கள் சிலரை கழற்றி விடுவார்கள். இதுவரை பதவி கிடைக்காத வேறு சில புதியவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்படும்’’ என்றார். 

திரிசங்கு நிலையில் ஓ.பி.எஸ்...

தினகரன், அவருடைய உறவினர்களைத் தள்ளிவைத்துவிட்டார். திவாகரன், இளவரசி மற்றும் நடராஜன் குடும்பத்தினர் அனைவரும் ஓரங்கட்டப்பட்டு விட்டனர். அவர்கள் அனைவரும் தினகரனுக்கு எதிராக, சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அவர்கள், `சசிகலா பெயரை எப்படியெல்லாம் தினகரன் இருட்டடிப்பு செய்கிறார்' என்பதை தெளிவாக விளக்கிச் சொன்னார்களாம். `அ.தி.மு.க-வை கபளீகரம் செய்யப் பார்க்கிறார் தினகரன். அவரின் சர்வாதிகார மனப்போக்கை இனியும் அனுமதிக்கமுடியாது' என்று சொன்னார்களாம். அதை சசிகலாவும் ஏற்றுக்கொண்டாராம். சிறைச்சாலையில் உள்ள நிலையில், வெளியில் தன்னுடைய பிரதிநிதியாகத் திவாகரனை களம் இறக்கி விட்டிருக்கிறார் சசிகலா. தினகரனுக்கு எதிரான நடவடிக்கைகளில் தற்போது பிஸியாகி விட்டார் திவாகரன். அவர்தான், இந்த இணைப்புப் படலத்தின் ஒருங்கிணைப்பாளர். இதில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் நிலை திரிசங்கு நிலை! சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியவர். தினகரனை மேடைக்குமேடை எதிர்த்துப் பேசி வருகிறார். அவர் என்ன செய்வார் என்பது நாளாவட்டத்தில் தெரியவரும். சசிகலாவின் தலைமையை ஏற்காவிட்டால், அவரும் தினகரனைப் போலவே தனித்து விடப்படுவார். 

தினகரன், ஓ.பி.எஸ்-க்கு செக் வைக்கத் திட்டம்?!

இந்த விவரங்களை அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர் ஒருவரிடம் சொன்னோம்.

``தமிழக மக்களும் சரி! கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்...என்று அனைத்து தரப்பினரும் தினகரனின் தலைமையை விரும்புகிறார்கள். இக்கட்டான சூழ்நிலையில், கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். டிசம்பர் 17-ம் தேதி அவரும், பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் பெங்களூருவில் போய் சசிகலாவைச் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். அப்போது ஊடகங்களிடம் தினகரன் பேசும்போது, ``எடப்பாடி, முதல்வர் பதவியிலிருந்து விலகவேண்டும். சில ஊழல் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். இரண்டும் நடந்தால், இணைப்புக்கு ரெடி’’ என்று சொல்லியிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தை மீறி சசிகலா நடந்தால், அது அவருக்குப் பாதகமாக முடியும். அரசியல்ரீதியாக தோற்றுப்போவார். தமிழக மக்கள் மத்தியில் தினகரனுக்கு உள்ள அதே இமேஜ், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இருக்கிறது. இருவருக்கும் அரசியல்ரீதியான கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆனால், அதுவே காலத்தின் கட்டாயத்தால் ஒரே அணியில் வரலாம். அப்படி வந்தால், எது உண்மையான அ.தி.மு.க. என்பது தெரியவரும். இந்த இருவரும், தமிழகத்தில் புதிய மாற்றத்தை உண்டாக்குவார்கள்’’ என்றார் அவர்.

டெல்லி பி.ஜே.பி.யின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் தினகரனோ, ஓ.பன்னீர்செல்வமோ முரண்டு பிடித்தால் அவர்கள் மீதுள்ள வழக்குகள் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், தினகரன் மீண்டும் முடக்கப்படலாம். தமிழகத்தின் சில பிசினஸ் புள்ளிகளிடம் நடந்த ரெய்டில் சிக்கிய ஆவணங்களை வைத்து ஓ.பன்னீர்செல்வமும் சிக்கலைச் சந்திக்க வேண்டிவரும். இருவரின் அரசியல் இமேஜை, டேமேஜ் செய்யும் வேலைகளை கனகச்சிதமாய் அரங்கேற்ற மத்திய அரசு அதிகாரிகள் ரெடியாகிவிட்டனர் என்றே கூறப்படுகிறது.

அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழ வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், தொண்டர்கள், மக்கள் என்ன நினைக்கிறார்கள், யாரை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதெல்லாம், அடுத்தடுத்த நிகழ்வுகளுக்குப் பின்னர்தான் தெரியவரும். ஆனால், 2018-ம் ஆண்டில், எந்தவோர் அரசியல் பரபரப்பையும் கண்டிராத தமிழக மக்களுக்குப் புத்தாண்டில் பல `பிக் பிரேக்கிங் நியூஸ்’கள் காத்திருக்கின்றன என்பது மட்டும் உறுதி.