Published:Updated:

`இப்படி அலைக்கழிக்கிறாங்களே?’ - திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் சாலையோர மக்கள் கண்ணீர்

`இப்படி அலைக்கழிக்கிறாங்களே?’ - திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் சாலையோர மக்கள் கண்ணீர்
`இப்படி அலைக்கழிக்கிறாங்களே?’ - திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் சாலையோர மக்கள் கண்ணீர்

திருப்பூர் மாவட்டத்தில் பல வருடங்களாகச் சாலையோரம் தங்கியிருந்த மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய மாற்று இடத்தை வழங்காமல் விரட்டியடித்ததால், அந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினர்.

திருப்பூர் கஜெலட்சுமி தியேட்டர் சாலையை ஒட்டியுள்ள நொய்யல் நதிக்கரையோரம் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாகக் குடில்கள் அமைத்துத் தங்கிவந்தன. பெற்றோர்கள் பினாயில் மற்றும் கயிறு கூடைகளைத் தயாரித்து விற்பனை செய்துவர, அவர்களது குழந்தைகள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வந்தனர். இந்தநிலையில், அதேபகுதியில் சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க-வைச் சேர்ந்த அன்பகம் திருப்பதி என்பவர் புதிதாக ஓர் உணவகத்தைத் திறந்தார். அதன் திறப்பு விழாவுக்கு அமைச்சர்களும், பல முக்கிய வி.ஐ.பி-க்களும் வருகை புரிந்த காரணத்தால், அப்பகுதியில் சாலையோரம் வசித்துக்கொண்டு இருந்த இம்மக்களைத் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது.

மேலும், அவர்கள் பிரச்னை எதுவும் செய்யக் கூடாது என்பதற்காக, பலவஞ்சிப்பாளையம் அருகே உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இடம் வழங்குவதாகச் சொல்லி அவர்களை அங்கிருந்து அழைத்தும் சென்றார்கள். ஆனால், அவர்களை அழைத்துச் சென்று இறக்கிவிட்ட இடம் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்ததால், அம்மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தார்கள். மேலும், மாநகராட்சிக் குப்பைகளைக் கொட்டக்கூடிய பகுதியாகவும் அந்த இடம் இருந்திருக்கிறது. இதனால் கொதித்தெழுந்த அம்மக்கள் மீண்டும் தங்களின் பழைய இடத்துக்கே வந்து போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள். பின்னர் அவர்களைச் சமாதானப்படுத்திய அதிகாரிகள், ``சில மாதங்கள் பொறுத்திருங்கள். உங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தருகிறோம்" என்று சொல்லி மீண்டும் அந்த அடிப்படை வசதிகளற்ற குப்பை மேட்டுக்கே அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில், ``தற்போது நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் முறையான தண்ணீர் வசதியும் இல்லை. கரன்ட் வசதியும் இல்லை. எங்களை இப்படி ஒவ்வோர் இடமாக அலைக்கழிப்பதை நிறுத்திவிட்டு, எங்களுக்கென்று முறையான ஓர் இடத்தை ஏற்படுத்தித் தாருங்கள்’’ என்ற கோரிக்கையுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் அம்மக்கள். மேலும், அவர்கள் பேசியபோது, ``எங்களுக்கு முதலிபாளையம் என்ற பகுதியில் ஏற்கெனவே தமிழக அரசு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கியிருக்கிறது. ஆனால், அதே இடத்தில் வேறு சிலருக்கும் பட்டாக்களைப் போட்டுக் கொடுத்து எங்களை ஏமாற்றியும்விட்டது. இதனால் எங்களால் அந்த இடத்துக்குச் சென்று வசிக்க முடியவில்லை.

இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மனுக்களை அளித்திருக்கிறோம். ஆனால், இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஹோட்டல் திறந்த காரணத்துக்காக எங்களை இப்படி அழைத்துச் சென்று அநியாயமாக அலைக்கழிக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக எங்கள் மீது இவர்களுக்கு இல்லாத கரிசனம் இப்போது மட்டும் ஏன் வருகிறது’’ என்று கண்ணீர்விட்ட அவர்கள், ``மாவட்ட ஆட்சியர் எங்களை நேரில் வந்து சந்திக்காமல் இந்த இடத்தைவிட்டுச் செல்ல மாட்டோம்’’ என்று போராட்டமும் நடத்தத் தொடங்கியதால் அப்பகுதி வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பின்னர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பில் மூழ்கியது.