Published:Updated:

தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவர்? - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதில்

தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவர்? - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதில்
தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவர்? - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதில்

தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவர்? - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதில்

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் நிலவரமும் மாறிக்கொண்டே வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மதச்சார்பற்றக் கூட்டணியாக அறிவித்துக்கொண்ட `தி.மு.க கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் அணிவகுக்கின்றன?' என்ற கேள்விக்கு விடைதேடிக் கடந்த வாரங்களில், தமிழக அரசியலில் மிகப்பெரும் பரபரப்பு கிளம்பியது. 

இந்தக் களேபரங்களுக்கு விடையாக, தி.மு.க. தரப்பிலிருந்து புது விளக்கமும் கிடைக்கப்பெற்றது. அதாவது, தி.மு.க-வோடு அணிவகுத்து நிற்கும் கட்சிகள், எதிர்காலத்தில் தேர்தலின்போது கூட்டணியாகவும் மாறலாம். ஆனால், அதுவரையில் தற்போதைய நட்பு வட்டத்தில் இருக்கும் கட்சிகள் அனைத்துமே `தோழமைக் கட்சிகள்'கள்தான் என்பதுதான் அந்த விளக்கம்!

இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற `கருணாநிதி சிலை திறப்பு விழா'வின்போது, ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, இந்திய அரசியலிலேயே மாபெரும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து, `தேர்தலுக்கு முன்னரே இதுபோல், பிரதமர் பதவிக்கான வேட்பாளரை அறிவிக்கலாமா...?' என்ற அதிருப்தி குரல்களும், `மோடிக்கு எதிரான போட்டியில், ராகுல்தான் சரியான தேர்வு' என ஆதரவுக் குரல்களும் ஒருசேர ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. 

தமிழக அரசியலிலும் இதுகுறித்த பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவு, உச்ச நீதிமன்றத்தின் ரஃபேல் தீர்ப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதான ஹெச்.ராஜாவின் விமர்சனம்...எனத் தற்போதைய அரசியல் பரபரப்புகளுக்கு விடைதேடி, தமிழகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் ஒரு மினி பேட்டி...

தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், சமீபத்திய தேர்தல் முடிவுகளை `வெற்றிகரமான தோல்வி’ என்கிறாரே?’’

``தேர்தல் முடிவு என்றால், ஒன்று வெற்றியாக இருக்க வேண்டும் அல்லது தோல்வியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் நடுவில் என்றால் எனக்குப் புரியவில்லை, யாருக்காவது புரிந்தால் சொல்லுங்கள்.”

``பி.ஜே.பி வெற்றி பெறும்போதெல்லாம், வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விமர்சிக்கும் காங்கிரஸ், இப்போது எதுவும் பேசவில்லையே?’’

``ஆம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகச் செயல்பட்டிருந்தால், இன்னும் மிகப்பெரிய வெற்றியைக் காங்கிரஸ் பெற்றிருக்கும். பி.ஜே.பி-க்கு வெற்றிகரமான தோல்வியைவிட அவமானகரமான தோல்வி கிடைத்திருக்கும்’’.

``ஹெச்.ராஜா, `திருமாவளவன் தொட்ட கட்சியை, மக்கள் தொடமாட்டார்கள்’ என்று விமர்சித்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``ஹெச்.ராஜா, எப்போதுமே தவறான கருத்துகளைச் சொல்கிறார். அவரைத் தமிழக மக்கள் முழுமையாக நிராகரித்து விட்டார்கள். இனிமேலும் இப்படியே அவர் பேசிக்கொண்டிருந்தால், வேறுவழிகளில் பாடம் கற்றுக்கொடுப்போம்.’’

`` `அ.ம.மு.க கட்சியைவிட்டு அனைவருமே வெளியேறும் முடிவில்தான் இருக்கிறார்கள்’ என்று எப்படிச் சொல்கிறீர்கள்?’’

``என்னைப் பொறுத்தவரை, தினகரனின் கட்சி, சசிகலாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் கட்சி. ஊழல் செய்து சிறையில் இருக்கிற குற்றவாளியைக் கொண்டாடுகிற கட்சியில், தொண்டர்கள் அதிக நாள் நீடிக்கமாட்டார்கள். எனவே, விரைவில் அந்தக் கட்சி கரைந்துவிடும் என்று சொல்லியிருந்தேன். மற்றபடி, தினகரன் மீது தனிப்பட்ட வெறுப்பு கிடையாது.’’

``ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் காங்கிரஸ் கூறிவந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நேர்மாறாக இருக்கிறதே?’’ 

``உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். ஆனால், `நீதிபதிகள் பரவலாக ஆளுங்கட்சியின் கைப்பாவைகளாகத்தான் இருக்கிறார்கள்’ என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இந்தத் தீர்ப்பைப் பார்த்த பிறகு, அது உண்மைதான் என்று தோன்றுகிறது.’’

``தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்திலும் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் இடத்துக்கு காங்கிரஸ் வரவிரும்புவதாகப் பேசப்படுகிறதே?’’

``கூட்டணியில் யார் பெரியவர், யார் சிறியவர் என்பதெல்லாம் கிடையாது. மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுசேர்ந்து,
 `பி.ஜே.பி-யை வீழ்த்த வேண்டும்’ என்பதுதான் முக்கியமான நோக்கம். இதில் யாரையும் ஒதுக்கவும் மாட்டோம்; வேறுபடுத்திப் பார்க்கவும் மாட்டோம்!’’

``தமிழகக் காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவர் நியமிக்கப்படப்போகிறார் என்று பேச்சு அடிபடுகிறதே?”

``அதை ராகுல் காந்தி முடிவு செய்வார்.”

அடுத்த கட்டுரைக்கு