Published:Updated:

தோல்விக்குப் பின் பி.ஜே.பி.-யின் வேகமெடுக்கும் தேர்தல் வியூகம்!

தோல்விக்குப் பின் பி.ஜே.பி.-யின் வேகமெடுக்கும் தேர்தல் வியூகம்!
தோல்விக்குப் பின் பி.ஜே.பி.-யின் வேகமெடுக்கும் தேர்தல் வியூகம்!

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பி.ஜே.பி. தனது தேர்தல் வியூகத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அடுத்தாண்டு (2019) நாடாளுமன்றத் தேர்தலின் அரையிறுதித் தேர்தல் என அரசியல் விமர்சகர்களால் கருதப்பட்ட,  மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றது.

இதுவரை சந்தித்து வந்த தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் கனவுகளோடு காங்கிரஸ் நிற்கையில், சமீபத்திய தேர்தல் வெற்றிகளை மறக்கடிக்கும் விதமாக அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள் அந்தக் கட்சிக்குச் சிக்கலாகி வருகின்றன. நீதிமன்றத் தீர்ப்புகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் சதுரங்கத்தில் செக் மேட் வைத்திருக்கிறது பி.ஜே.பி.

தோல்விக்குப் பின் பி.ஜே.பி.-யின் வேகமெடுக்கும் தேர்தல் வியூகம்!

பி.ஜே.பி-யை வீழ்த்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக, பிரசாரக் கூட்டங்கள் உட்பட எல்லா மேடைகளிலும் முழங்கினார், மற்ற எதிர்க்கட்சிகளும் அதே முழக்கத்தைக் கையில் எடுத்தன. ஆனால், சமீபத்தில் ரஃபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், `ரஃபேல் ஒப்பந்தம் செய்து கொண்டதில் முறைகேடுகள் நடந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை' என நீதிபதிகள் உத்தரவில் சொல்ல, காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் வலுவிழந்து போய்விட்டன. ராகுலும் `தேர்தல் வெற்றிகள், கருணாநிதியின் சிலைத் திறப்பு விழா, அதன் பின் மூன்று மாநிலங்களில் முதல்வர்களின் பதவி ஏற்பு' எனத் தன்னுடைய பிஸி ஷெட்யூல்களுக்கு மத்தியில் ரஃபேல் தொடர்பான தீர்ப்பை மறந்தே போய் விட்டார்.

அதற்குள் அடுத்த ஆட்டத்தைத் தொடங்கி விட்டது பி.ஜே.பி. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் பதவியேற்றுள்ளனர். அதே நேரத்தில் இந்திராகாந்தி, சுட்டுக் கொல்லப்பட்டபோது, டெல்லியில் சீக்கியர்கள் மீது நடந்தப்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதுதொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் திங்கள் கிழமை அளித்தது. இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தோல்விக்குப் பின் பி.ஜே.பி.-யின் வேகமெடுக்கும் தேர்தல் வியூகம்!

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது `ஆப்ரேஷன் புளு ஸ்டார்' என்ற நடவடிக்கையை மேற்கொண்டார். அந்த நடவடிக்கையில் சீக்கியர்களின் புனித இடமாகக் கருதும் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் இரத்தக் கரையானது. பொற்கோயிலுக்குள் நிறைய தீவிரவாதிகளோடு பொதுமக்களும் இறந்தனர். அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக 1984 அக்டோபர் 31-ம் தேதி இந்திரா காந்தி, அவருடைய தனிப் பாதுகாவலர்கள் பீண்ட் சிங், சத்ந்வந் சிங் ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உடனடியாக டெல்லி உட்பட வட இந்தியா முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்தன. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதன் விளைவுகள் கடுமையானதாக இருந்தது. அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பின்படி 2,000 பேர் இறந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

தோல்விக்குப் பின் பி.ஜே.பி.-யின் வேகமெடுக்கும் தேர்தல் வியூகம்!

இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில் நீதிமன்றம் வழங்கிய இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வரவேற்று, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷா, ``1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் முழக்கங்கள் எழுப்பியும், பெண்களை மானபங்கப்படுத்தியும், ஆண்களைக் கொலைசெய்தும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். ஆனால், எத்தனை ஆணையங்கள் அமைத்தும், நேரில் பார்த்தவர்கள் சாட்சி சொல்லியும் இதுவரை அவர்கள் தண்டிக்கப்படவில்லை. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தமைக்கு பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்தத் தீர்ப்பானது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பெரும் நிம்மதியைத் தருவதாக அமையும்” எனப் பதிவு செய்திருந்தார்.

தோல்விக்குப் பின் பி.ஜே.பி.-யின் வேகமெடுக்கும் தேர்தல் வியூகம்!

1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்து கொண்டிருந்த போது அதுகுறித்து விவாதிக்க அப்போதைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங், ராஜீவ் காந்தியைத் தொடர்பு கொண்ட போது அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொலைபேசியில் அழைத்த போதும் அவர் தொலைபேசியைக் கூட எடுக்கவில்லை என ஜெயில் சிங்கின் பத்திரிகைச் செயலாளராக இருந்த தர்லோச்சன் சிங், கடந்த 2014-ம் ஆண்டு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையிலிருந்து வந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதைத் தேர்தல் அரசியலோடும் சேர்த்துதான் பார்க்க வேண்டியுள்ளது. பி.ஜே.பி என்ற உடன் முதலில் முன்வைக்கும் குற்றச்சாட்டு பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், காஷ்மீருக்கு வழங்கி வரும் சிறப்பு அந்தஸ்துக்குரிய சட்டப் பிரிவு 370 மற்றும் 35 (ஏ)-வை நீக்குவது போன்ற, முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். மதச்சார்பின்மைக்கு எதிரான கட்சி பி.ஜே.பி. என எதிர்க்கட்சிகள் எல்லாம் குற்றம்சாட்டுவதுடன், காங்கிரஸ் என்ற ஒற்றைக் குடையின் கீழ் ஒன்று திரள முடிவெடுத்துள்ளன.

சீக்கியர்களுக்கு எதிராக 1984-ல் நடந்த சம்பவங்களை மீண்டும் வெளிக்கொண்டு வந்து, காங்கிரஸின் சகிப்புத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது பி.ஜே.பி. இதன் மூலம் சீக்கியர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று கூறுவதன் மூலம் மதம் சார்ந்த அரசியலை நடத்தி ராகுலுக்குப் பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடியும், பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷாவும். 

பி.ஜே.பி-யின் புதிய தேர்தல் வியூகம் எந்தளவுக்கு எடுபடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படியோ, இறுதிப் போட்டிக்கு இரு கட்சிகளுமே தயாராகிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்...