Published:Updated:

`2004 தேர்தல் முடிவுதான் நமக்கும்!’ - அ.தி.மு.க கூட்டணியை நிராகரித்த அமித் ஷா

தமிழக பா.ஜ.க தலைவர்களுக்கு அகில இந்திய தலைமையின் வியூகம் புரிபடவில்லை. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்பதில் பா.ஜ.க-வுக்கு உடன்பாடில்லை. தமிழக சூழல்கள் குறித்தும் சில விஷயங்களை மோடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் ஐ.பி அதிகாரிகள்.

`2004 தேர்தல் முடிவுதான் நமக்கும்!’ - அ.தி.மு.க கூட்டணியை நிராகரித்த அமித் ஷா
`2004 தேர்தல் முடிவுதான் நமக்கும்!’ - அ.தி.மு.க கூட்டணியை நிராகரித்த அமித் ஷா

குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடந்து வந்த சி.பி.ஐ விசாரணையால் கடும் மனஉளைச்சலில் இருக்கிறது ஆளும்கட்சி. `அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமைவதற்கு வாய்ப்பில்லை என்பதில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் உறுதியாக உள்ளனர். அதன் ஓர் அங்கம்தான் தொடர்ச்சியான விசாரணைகள்’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார் சி.விஜயபாஸ்கர். `இந்தச் சந்திப்பில் சி.பி.ஐ விசாரணை தொடர்பாகப் பேசப்பட்டதாகவும் அதன் தொடர்ச்சியாக ராஜினாமாவை நோக்கி அமைச்சர் தள்ளப்படலாம்' எனவும் தகவல் வெளியானது. குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணனிடமிருந்து பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடமும் விசாரணை நடந்தது. அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒன்பது மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார் விஜயபாஸ்கர். 

சி.பி.ஐ விசாரணை குறித்துப் பேசும் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ``சி.பி.ஐ அமைப்புக்குள்ளேயே ஏராளமான முறைகேடு புகார்கள் உள்ளன. அரசியல் காரணங்களுக்காகத்தான் இந்தச் சோதனை நடந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசுக்கு அ.தி.மு.க எம்.பி-க்கள் சிக்கல் ஏற்படுத்தும் போதெல்லாம் இந்தச் சோதனைகள் வலுப்பெறுவது வழக்கமாகிவிட்டது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அழுத்தம் தருகிறார்கள். கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை, நெடுஞ்சாலைத்துறையில் ரெய்டு என ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனைகள் நடைபெற்றன. தற்போது நீதிமன்றத்தின் உத்தரவின்படி சி.பி.ஐ விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் எங்களால் முடிந்த அளவுக்கு ஒத்துழைப்பை அளித்து வருகிறோம். பா.ஜ.க அரசோடு நாங்கள் நெருக்கமாக இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது" என்கிறார். 

ஆனால், இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வின் அடுத்தகட்ட நகர்வுகள் வேறு மாதிரி இருக்கின்றன. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய டெல்லி வட்டார பா.ஜ.க பிரமுகர் ஒருவர், ``அ.தி.மு.க கூட்டணியை பா.ஜ.க விரும்பவில்லை என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது, `ஊழல் மிகுந்த மாநிலம்' என அமித் ஷா கூறியது அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை குறிவைத்துதான். அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் கிறிஸ்டி உட்பட அ.தி.மு.க-வினர் ஆதாயம் அடையும் நிறுவனங்களில் எல்லாம் சோதனைகள் நடைபெற்றன. ஆளும்கட்சியோடு நெருக்கம் காட்டியிருந்தால் மத்திய ஏஜென்சிகள் நடத்திய ரெய்டுகளில் தொய்வு ஏற்பட்டிருக்கும். அப்படிச் செய்யாமல், தொடர்ந்து ரெய்டு நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகின்றனர். இதற்குக் காரணம், `அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறாது' என மோடியும் அமித் ஷாவும் உறுதியாக நம்புகின்றனர். தமிழக பா.ஜ.க தலைவர்களுக்கு அகில இந்திய தலைமையின் வியூகம் புரிபடவில்லை. கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க-வுக்கு இடம் கொடுக்கும் வகையில் எந்தவொரு காரியத்தையும் மோடி செய்யவில்லை. அ.தி.மு.க கூட்டணி உறுதியாகியிருந்தால், தொகுதிகளைப் பலப்படுத்தும் பணியைக் கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைத்திருப்பார்கள். அப்படி எதுவுமே நடக்கவில்லை. 

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்பதில் பா.ஜ.க-வுக்கு உடன்பாடில்லை. தமிழக சூழல்கள் குறித்தும் சில விஷயங்களை மோடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் ஐ.பி அதிகாரிகள். அதில், 2004 தேர்தல் முடிவுகளைக் குறிப்பிட்டு நோட் அனுப்பியுள்ளனர். அந்த அறிக்கையில், `தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி பலப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், நாம் அண்ணா தி.மு.க கூட்டணியில் சேர்ந்தால் 40 இடங்களும் நம்மை விட்டுப் போய்விடும். எதிர்ப்பு வாக்குகள் பிளவுபடுவதுதான் நமக்கு நல்லது. மத்திய அரசின் எதிர்ப்பு வாக்குகளும் மாநில அரசின் எதிர்ப்பு வாக்குகளும் 2004-ம் ஆண்டுத் தேர்தலில் வாஜ்பாய், ஜெயலலிதாவுக்கு எதிராகப்போனது. அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தால் இதேபோன்ற நிலைதான் ஏற்படும். அதனால் கூட்டணி அமையாமல் இருப்பதே நல்லது' எனக் குறிப்பிட்டுள்ளனர். தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சி.பி.ஐ விசாரணை செல்லும் கோணத்தை வைத்து, மோடியின் அடுத்தகட்ட நடவடிக்கையை உணர்ந்துகொள்ளலாம்" என்றார் விரிவாக.