Published:Updated:

சசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை! அடுத்த விக்கெட் யார்?

சசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை! அடுத்த விக்கெட் யார்?
சசிகலா முன்னிலையில் தினகரனுடன் சண்டை! அடுத்த விக்கெட் யார்?

பெங்களுரு சிறையில் சசிகலாவைச் சந்தித்தபோது டி.டி.வி. தினகரனுக்கும், தங்க தமிழ்ச் செல்வனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அதிருப்தியில் உள்ளார்.

"தினகரனுக்கு கட்டம் சரியில்லை போலிருக்கிறது. அவரது ஆஸ்தான மூக்குப் பொடிச் சாமியாரும் முக்தி அடைந்து விட்டார். அவரது கட்சிக்கு பைனான்சியராக (!?) வலம்வந்த செந்தில் பாலாஜியும் டாட்டா காண்பித்து விட்டு தி.மு.க-வுக்குப் போய் விட்டார். தினகரனை ஓரம் கட்டிவிட்டு, சசிகலாவை மட்டும் சேர்த்துக் கொண்டு, அ.ம.மு.க., கூடாரத்தைக் காலி செய்வதற்கு, எடப்பாடியும், இளவரசியும், திவாகரனும் ‘ஸ்கெட்ச்’ போட்டு விட்டனர்."

இப்படி எல்லாமே தினகரனுக்கு ‘நெகட்டிவ்’ ஆகப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த பேரிடியாக தினகரனின் தளபதியாக வலம் வந்த, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தமிழ்ச் செல்வனும், கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஏற்கனவே, அரசல் புரசலாக தினகரனுடன் உரசல் இருந்துள்ளது. டிசம்பர் 17-ம் தேதியன்று, தினகரனும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒரு பகுதியினரும் சசிகலாவைக் காண, பெங்களூரு சிறைக்குச் சென்றபோது, இது மோதலாக வெடித்துள்ளது.

சிறைச்சாலை விதிப்படி, சில நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே, அதுவும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விசிட்டர்கள் மட்டும்தான், கைதியைச் சந்திக்க முடியும். அதிலும், நேரக்கட்டுப்பாடு உண்டு. அதன்படி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒரு பகுதியினர், ஏற்கனவே சசிகலாவைச் சந்தித்துவிட, பார்க்க இயலாத மற்றொரு பிரிவினர், டிசம்பர் 17 அன்று சசிகலாவைச் சந்தித்தனர். 

சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, சிறை நுழைவாயிலில் ஆரம்பித்து, பெண்கள் சிறைச்சாலை வரை, 97 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து யாரும் தப்பிக்கவே முடியாது என்பதால், சசிகலாவைப் பார்க்க, விதிகளை மீறி யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. விசிட்டர்கள் சந்தித்து விட்டு, திரும்பும் நேரமும் தெரியும் என்பதால், கூடுதல் கால அவகாசமும் எடுத்துக் கொள்ள முடியாது.

சசிகலா வி.ஐ.பி. என்பதால், அவருக்குத் தனி அறை உண்டு. அங்கே சில பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதில்தான், விசிட்டர்கள் அமர்வார்கள். எதிரிலிருக்கும் சேர்களில் சசிகலா, இளவரசி இருவரும் அமர்ந்திருப்பார்கள். அப்படித்தான் அன்றும் நடந்தது. தினகரனும், உடன் சென்றவர்களும் பேச ஆரம்பித்ததுமே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்று பேச்சை ஆரம்பித்துள்ளார் தங்க.தமிழ்ச்செல்வன்.

உடனே, அதனைக் கடுமையாக எதிர்த்த தினகரன், ‘‘இங்கே ஒண்ணு பேசுறீங்க. வெளியே போய் வேறு ஏதோ பேசுறீங்க. நீங்க நினைக்கிறது கண்டிப்பா நடக்காது’’ என்று கடுப்பு அடித்துள்ளார். அதற்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி கொடுக்க, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியுள்ளது. சசிகலா தலையிட்டு சமாதானப்படுத்தியிருக்கிறார். தங்க.தமிழ்ச்செல்வனைப் பார்த்து, "ஏன் அவசரப்படுகிறீர்கள். பொறுமையாக இருங்க " என்று அடக்கியிருக்கிறார். 

ஆனால், எல்லோர் முன்னிலையிலும் தன்னை தினகரன் இப்படித் திட்டிவிட்டாரே என்று கோபமான தங்க.தமிழ்ச்செல்வன்,  உடனே அந்த அறையை விட்டுக் கிளம்பி, சிறைச்சாலைக்கு வெளியே போய் விட்டார். எல்லோரும் அதிர்ச்சி அடைந்தாலும், சந்திப்புக்கான நேரம் வரை, சசிகலாவுடன் பேசிய பின்பே, மற்றவர்கள் வெளியே வந்துள்ளனர். அடுத்ததாக, சசிகலா குடும்பத்தினர் அங்கு வந்தபோதும், தினகரன் மட்டும் அங்கே இருந்துள்ளார்.

தங்க.தமிழ்ச்செல்வன் வெளியேறிய வேகத்தைப் பார்த்த கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தியும் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான கதிர்காமனும் பதறிப் போய் விட்டனர். அவசரமாக ஓடிப்போய் தங்க.தமிழ்ச்செல்வனை, சமரசம் செய்து அழைத்து வந்துள்ளனர். அந்த நேரத்தில், தினகரனும் சிறைக்கு வெளியே வரவும், பத்திரிகையாளர் சந்திப்பு துவங்கியுள்ளது. உடனே, தினகரன் அருகே தங்க.தமிழ்ச்செல்வனை நிறுத்தி விட்டே, புகழேந்தி நகர்ந்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் தினகரன் பேசும்போது, ‘‘தங்க.தமிழ்ச்செல்வன் சொன்னதை நீங்கள் வேறு மாதிரி போடுகிறீர்கள். அவர் சொன்னது இதுதான்...!’’ என்று நீண்ட விளக்கம் கொடுத்தார். அருகில் பேசாமல் நின்றிருந்தார் தங்க.தமிழ்ச்செல்வன். அவரின் ரியாக்ஷனை கட்சியின் முக்கியஸ்தர்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

பெங்களூரு புகழேந்தி, கலைராஜன், வெற்றிவேல் மற்றும் தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சிலர் என்று பலரும் தங்க தமிழ்ச்செல்வனிடம் தினகரன் சீறியதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை, அவர்களின் முகபாவனைகள் வெளிப்படுத்தின. இப்போது ‘நாட் ரீச்சபிள் ஏரியா’வுக்குள் இருக்கும் தங்க.தமிழ்ச்செல்வன், அலைபேசிக்கு உயிர் கொடுக்கும்போது, தினகரன் கூடாரத்திலும் ஓர் ஆழிப்பேரலை தாக்க வாய்ப்பிருக்கிறது. பேசுங்க தமிழ்ச் செல்வன்....பேசுங்க!.

அடுத்த கட்டுரைக்கு