Published:Updated:

ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி... அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி... அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்!
ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி... அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்!

ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி... அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்!

பிரீமியம் ஸ்டோரி

‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டாலும் இன்னும்  அ.தி.மு.க-வுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை நீங்கவில்லை. காரணம், தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்து வெளிவந்திருக்கும் தகவல்கள். 

ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி... அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்!

அமாவாசை அரசியல்!

கடந்த ஆண்டு சசிகலா குடும்பத்தினரை எதிர்த்து ‘தர்ம யுத்தம்’ தொடங்கிய நாள் முதல் தனக்குப் பக்கபலமாக வந்துநின்ற 11 எம்.எல்.ஏ-க்களுக்கும்கூடத் தெரியாமலேயேதான் இந்த ரகசிய சந்திப்பை நடத்தி முடித்திருக்கிறார்  ஓ.பன்னீர்செல்வம். யாரை எதிர்த்துத் தனது அரசியல் போராட்டத்தைத் தொடங்கினாரோ அதே அரசியல் எதிரியை, யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதோடு, வந்துபோன சுவடே தெரியாவண்ணம் அதுபற்றிய எந்தவொரு செய்தியும் வெளியே கசியாமலும் பார்த்துக்கொண்ட திறமை `அமாவாசை’ அரசியலையும் மிஞ்சக்கூடியது!

‘இவரை நம்பித்தானா இத்தனை நாள்களாக நாம் சசிகலா குடும்பத்தினரை எதிர்த்துவந்தோம்..?’ என்ற அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஒருசேர... வெடித்து அழக்கூட முடியாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்துகொண்டிருக்கின்றனர்
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள்!

விவேக் ஜெயராமன் நோ!

ஆர்.கே.நகர்த் தேர்தலின்போது, சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி தினகரன், ‘`இந்தத் தேர்தலில், ஜெயித்து அ.தி.மு.க-வையும் இரட்டை இலைச் சின்னத்தையும் கைப்பற்றுவோம்’’ என்று தெருத் தெருவாக மைக்கில் அலறினார். சொன்னபடியே தேர்தலிலும் ஜெயித்தார். ஆனால், சொன்னபடி அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகள் எதையும் எடுக்காமல், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ ஆரம்பித்து தனிக்காட்டு ராஜாவாக வலம் வர ஆரம்பித்துவிட்டார். 

ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி... அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்!

காரணம்... அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதால் தனிப்பட்ட முறையில் டி.டி.வி தினகரனுக்கு எந்தவித லாபமும் இல்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாதவர் டி.டி.வி தினகரன். கட்சி விதியின்படி பொதுச்செயலாளராகப் போட்டியிடுவதற்கே குறைந்தபட்சம் 5 வருடங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். எனவே, அ.தி.மு.க-வையும் இரட்டை இலைச் சின்னத்தையும் கைப்பற்றினாலும்கூட, அவரால் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடக்கூட முடியாது.

சிறையிலிருந்து சசிகலா வெளிவருவதும் இப்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்று. இதற்கிடையில், சசிகலா குடும்பத்தில் உள்ள ஒருவர் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினராக
5 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கிறார் என்றால், அது சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயராமன் ஒருவர்தான். ஆனால், அவரைக் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலில் நிறுத்தி அரசியலை எதிர்கொள்வதில்,  டி.டி.வி தினகரனுக்குத் துளியும் விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரின் கைகளிலேயே அ.தி.மு.க-வை விட்டுவிட்டு, அ.ம.மு.க-வைப் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாகிவிட்டார்  டி.டி.வி தினகரன்!

தனிக்கட்சி ரகசியம்!

இந்நிலையில், டி.டி.வி தினகரனின் தனிக்கட்சி ஆர்வம் குறித்துப் பேசும் மன்னார்குடி தரப்பினர்,

‘`ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதே, கட்சி குறித்த அனைத்து முடிவுகளையும் சசிகலாதான் எடுத்துவந்தார். இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் சசிகலாவால் கொண்டுவரப் பட்டவர்கள்தாம். எனவே, எம்.எல்.ஏ-க்களில் ஆரம்பித்து முதல்வர் வரை அனைவருமே சசிகலா குடும்பத்தினர்மீது விசுவாசம் காட்டுவது ஒன்றும் புதிதல்ல...

சொத்துக்குவிப்பை மையப் படுத்தி மத்தியிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகத்தான் ஓ.பன்னீர்செல்வமே, சசிகலா குடும்பத்தை எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்படியொரு அழுத்தம் அடுத்துவரும் முதல்வருக்கும் வந்துவிடக் கூடாது என்றுதான், கூவத்தூர் நாள்களில், செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினார் சசிகலா. ஆனால், எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைக்கும் பண வசதி இல்லாததால் கடைசி நேரத்தில், எடப்பாடிக்கு முதல்வர் யோகம் வந்து சேர்ந்தது. ஆனால், அவரும் ஓ.பி.எஸ் வழியில் சசிகலா குடும்பத்தினரைத் தள்ளிவைக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டார். இந்த மாற்றங்கள்தான், ‘இனி அ.தி.மு.க-வை நம்பிப் பிரயோஜனம் இல்லை’ என்ற அவநம்பிக்கையை டி.டி.வி-க்குள் விதைத்தது. அதனால்தான் இப்போது ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்த ரகசியங்களை வெளியிடுவதன்மூலம் அ.தி.மு.க கூடாரத்தைக் கலகலக்க வைக்க முயல்கிறார்.

சந்திப்பின் பின்னணி...

‘சசிகலா குடும்பத்தினர், கட்டாயக் கையெழுத்து வாங்கி என்னை முதல்வர் பதவியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்’ என்று கடந்த ஆண்டு ஜெ.சமாதியில் நின்றுகொண்டு ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் வழியப் பேட்டியளித்தது முதல் இன்றைய தினம்வரை நாம் காணும் அரசியல் காட்சிகளெல்லாம் அப்பட்டமான நாடகம் என்று அடித்துச் சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் உள்விவகாரம் அறிந்தவர்கள். மேலும், இருவரது சந்திப்பின் பின்னணி குறித்துப் பேசும் இவர்கள், ‘`ஓ.பி.எஸ் - டி.டி.வி சந்திப்பு ஒருமுறை தான் நிகழ்ந்தது என்று சொல்வதே உண்மையல்ல... பிரிவுக்குப் பிந்தைய இந்த இடைவெளியில் அவர்கள் இருவரும் பலமுறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, ‘எடப்பாடியை முதல்வர் பதவியிலிருந்து இறக்கிவிட வேண்டும்... மாறாகக் கட்சியில் தனக்கு முழு அதிகாரமும் அளிக்கப் பட வேண்டும்’ என்பதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார் ஓ.பி.எஸ். கடந்த மாதம்கூட, ஓ.பி.எஸ் மகன்கள் இருவரும் டி.டி.வி-யையும் விவேக் ஜெயராமனையும் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப் பாளர், ஆட்சியில் துணை முதல்வர் என்று இரண்டு முக்கியப் பொறுப்புகளில் இருந்துவந்தாலும், இரண்டிலுமே ஓ.பி.எஸ்-ஸுக்கு துளியும் செல்வாக்கு இல்லை என்பதுதான் உண்மை.

விரக்தியில் ஓ.பி.எஸ்

தனக்கு வேண்டிய 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டரைக்கூட அவரால் வாங்கித்தர முடியவில்லை. இதுசம்பந்தமான ஓ.பி.எஸ் அனுப்பிய ஃபைல் இன்றைய தேதிவரையில் கண்டுகொள்ளப்படவே இல்லை. மாறாக, அந்தப் பட்டியலில் இல்லாத அதிகாரிகளுக்கெல்லாம் கேட்ட இடத்துக்கு மாற்றல் கிடைத்துவருகிறது.

இதுமட்டுமல்லாமல், கட்சி ரீதியாகவும் ஓ.பி.எஸ் தன் ஆதரவாளர்களுக்கு உரிய பதவிகளைப் பெற்றுத் தர முடியாதவகையில், முட்டுக்கட்டை போடப்படுகிறது. இதனால், தன் ஆதரவாளர்கள் மத்தியிலேயே பலத்த அதிருப்தியையும் சம்பாதித்துவிட்டார் ஓ.பி.எஸ்! இதற்கிடையில், மத்தியிலும் ஓ.பி.எஸ்-ஸுக்கான மரியாதைகள்  சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை.

வீடியோ வில்லங்கம்!

இந்தக் கசப்புகளையெல்லாம் சரிசெய்யும் நோக்கில்தான், டி.டி.வி-யோடு கைகோக்கும் முடிவோடு பேச்சுவார்த்தைகளைத் தொடங் கினார் அவர். ஆனால், இந்தச் சந்திப்புகளே அவருக்கு இப்போது வில்லங்கமாகி நிற்கின்றன. திரைமறைவில் நடைபெற்ற இந்தச் சந்திப்புகள் குறித்த வீடியோ ஆதாரங்கள் அனைத்தும் டி.டி.வி கைவசம் உள்ளன. அதனால்தான், சந்திப்பு குறித்த கேள்விக்கு மறுப்போ மழுப்பலோ இல்லாமல் வெளிப் படையாக ஒப்புக்கொண்டு விட்டார் ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி... அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்!

இன்றைய சூழ்நிலையில், ‘அ.தி.மு.க-வுக்கும் சசிகலா குடும்பத்தினருக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை’ என்ற ரீதியில் அரசியல் வெளிநடப்புகள் இருந்தாலும், எம்.எல்.ஏ-க்களில் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை அனைவருமே சசிகலா குடும்பத்தினரோடு நட்பில்தான் இருக்கிறார்கள். அதனால்தான், கட்சியிலிருந்து டி.டி.வி தினகரனை நீக்கியவர்கள், சசிகலாவை நீக்கம் செய்யவில்லை.

இப்போதும்கூட ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் கைகளிலிருந்து ஆட்சி - அதிகாரம் கைவிட்டுப் போகும் சூழல் வந்தால், அனைத்து எம்.எல்.ஏ-க்களும் டி.டி.வி பின்னால் அணிவகுக்கத் தயங்கமாட்டார்கள். இந்த நடைமுறை எதார்த்தமும் ஓ.பி.எஸ்-ஸை டி.டி.வி-யோடு நேரில் சந்திக்க வைத்தது’’ என்கிறார்கள் இந்த விவரப் புள்ளிகள்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற புதிதில், பிரிந்துநின்ற அ.தி.மு.க. அணியினராலேயே ‘பொம்மை முதல்வர்’ என்று வார்த்தைகளால் காயப்படுத்தப் பட்டார். அப்போது, ‘நான் பொம்மை முதல்வரா? பொறுத்திருந்து பாருங்கள்’ என்று தன் மௌனத்தையே பதிலாக்கியவர், இப்போது அடுத்தடுத்து அ.தி.மு.க-வுக்குள் அடித்துவரும் சுனாமி அலைகளை அமைதியாகக் கரையில் நின்றுகொண்டு கடலை சாப்பிட்ட படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ரத்தக் கண்ணீர்!

இந்நிலையில், எம்.ஜி.ஆரோடு இணைந்து அ.தி.மு.க-வை வடிவமைத்த மூத்த தலைவரும் அ.தி.மு.க-வில் அவைத்தலைவராகப் பொறுப்பு வகித்தவருமான புலவர் புலமைப்பித்தனிடம் அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை குறித்துப் பேசினோம்...

“ஜெயலலிதாவுக்குப் பிறகு, சந்தர்ப்பச் சூழ்நிலையால் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்களால் கட்சியின் செல்வாக்கும் மக்களிடையே சரிந்துவிட்டது. எனவே, கட்சிக்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு, எதிர்க்கட்சியான தி.மு.க-வின் பலவீனம்தான் அ.தி.மு.க-வுக்குப் பலமாக இருக்க முடியுமே தவிர... தனிப்பட்ட பலம் என்று எதுவும் இல்லை. யாரை, யார் எப்போது கவிழ்க்கலாம் என்ற சிந்தனையில்தான் இவர்கள் இருக்கிறார்களே தவிர... கட்சியைக் காப்பாற்றுவது குறித்த எந்த அக்கறையும் இல்லை” என்கிறார் ஆதங்கத்துடன்.

‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்றார் எம்.ஜி.ஆர். ஆனால் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், டி.டி.வி என்னும் மூன்றெழுத்துப் புள்ளிகள் ஆடும் ஆடுபுலி ஆட்டத்தால், அ.தி.மு.க தொண்டர்கள் வேதனை என்ற மூன்றெழுத்தில் வெம்பியுள்ளனர்.

த.கதிரவன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு