Published:Updated:

``நான் என்றுமே பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் பயந்ததில்லை"- மோடியை மறைமுகமாகச் சாடும் மன்மோகன் சிங்

``நான் என்றுமே பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் பயந்ததில்லை"- மோடியை மறைமுகமாகச் சாடும் மன்மோகன் சிங்
``நான் என்றுமே பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் பயந்ததில்லை"- மோடியை மறைமுகமாகச் சாடும் மன்மோகன் சிங்

முன்னாள் இந்தியப் பிரதமரான மன்மோகன் சிங் தன் பொது வாழ்க்கையைப் பற்றிய "Changing India" புத்தகத்தை நேற்று (செவ்வாய்) வெளியிட்டார். இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தான் அமைதியான பிரதமர் என்று மக்கள் மத்தியில் பெயர் எடுத்திருந்தாலும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க என்றும் பயந்ததில்லை என்று தற்போதைய பிரதமர் மோடியை மறைமுகமாகச் சாடினார். 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி பெரிதாக எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்துகொள்ளவில்லை என்றும் கேள்விகளைப் பார்த்து அவர் பயப்படுகிறார் என்றும் ராகுல் காந்தி உட்படப் பலரும்  விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது

``நான் அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் ஆள்தான். அனைத்து வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்குப் பின்னும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளேன்" என்றார் அவர். மேலும், சமீபத்தில் ராஜினாமா செய்த ரிசர்வ் வாங்கி கவர்னர் உர்ஜித் இந்தியாவுக்கு பெரிய இழப்பென்று கூறிய அவர்  ``அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்குமான உறவு கணவன் மனைவி உறவைப் போன்றது, கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அவை தீர்க்கப்பட்டு நல்ல முறையில் இருவரும் இயங்க வேண்டியது அவசியம்" என்றார்.

மேலும், இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் தனது அரசியல் பயணம் பற்றிப் பேசினார். ``எப்படி நான் பிரதமரானது ஓர் எதிர்பாராத விபத்தோ, அதேபோல்தான் நான் நிதி அமைச்சர் ஆனதும்" என்றார். இறுதியாக ``இந்த நாடு எனக்குப் பல விஷயங்களைக் கொடுத்துள்ளது, அவற்றையெல்லாம் என்றும் என்னால் முழுமையாக திரும்பித் தந்துவிடமுடியாது" என அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்தார்.