Published:Updated:

``மோடி வேண்டாம்... கட்கரியைக் கொண்டு வாருங்கள்..!"- பா.ஜனதாவை அலறவைக்கும் கலகக்குரல்

``மோடி வேண்டாம்... கட்கரியைக் கொண்டு வாருங்கள்..!"- பா.ஜனதாவை அலறவைக்கும் கலகக்குரல்
``மோடி வேண்டாம்... கட்கரியைக் கொண்டு வாருங்கள்..!"- பா.ஜனதாவை அலறவைக்கும் கலகக்குரல்

தேர்தல் வெற்றிக்காக யாரையும் தூக்கி எறிய ஆர்.எஸ்.எஸ் தயங்கியதே இல்லை என்பது அதன் கடந்தகால வரலாறு. குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து எழுந்த கடும் சர்ச்சை காரணமாக, அப்போது அந்த மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை...

`வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற வேண்டுமானால், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதிலாக கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரியை முன்னிறுத்துங்கள்' என ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு மகாராஷ்டிரா மாநில அரசின் வேளாண் அமைப்பு ஒன்றின் தலைவர் கிஷோர் திவாரி என்பவர் எழுதியுள்ள கடிதம், பா.ஜனதாவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்வி, அந்தக் கட்சிக்குப் பெரும்பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வி, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் அந்தக் கட்சித் தலைவர்களிடையே நிலவுகிறது. 

அச்சத்தை ஏற்படுத்திய ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி

இதுநாள் வரை விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளுக்காக டெல்லி உட்பட நாட்டின் பல மாநிலங்களில் பேரணிகளை நடத்தியபோது, அதுகுறித்து மோடி பெரிய அளவில் கண்டுகொள்ளாதது, பா.ஜனதாவிடமிருந்து விவசாயிகளை வெகுதூரம் தள்ளிவைத்துவிட்டது. இதுதவிர, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு, சாமான்ய மக்களிடையே இன்னமும் கசப்புஉணர்ச்சியாகவே நீடிக்கிறது. இதனால், தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களைக் கவரும் விதமாக, பல்வேறு திட்டங்களை அறிவிப்பது குறித்து மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. குறிப்பாக, விவசாயக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இருப்பினும், காலம் கடந்த இதுபோன்ற நடவடிக்கைகள் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்ற சந்தேகம், அந்தக் கட்சித் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில்தான், `வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற வேண்டுமானால், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதிலாக கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரியை முன்னிறுத்துங்கள்' என ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு எழுதப்பட்டுள்ள கடிதம் ஒன்று அந்தக் கட்சியினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

விவசாயிகளுக்குப் பயிர்க்கடன்கள் வழங்குவதற்காக மகாராஷ்டிரா அரசால் ஏற்படுத்தப்பட்ட  வி.என்.எஸ்.எஸ்.எம் என்ற அமைப்பின் தலைவர்  கிஷோர் திவாரி என்பவர்தான் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். மும்பையை அடுத்த தானே மற்றும் புனேவில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்த நிலையில், கிஷோர் திவாரியின் இந்தக் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

`மோடி வேண்டாம்... கட்கரிதான் வேண்டும்'

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி ஆகியோருக்கு திவாரி எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், `மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை அமல்படுத்திய மோடி மற்றும் அமித் ஷா போன்ற `தலைவர்களின் திமிர்த்தனம்'தான் காரணம்' என்று குற்றம்சாட்டியுள்ளார். 

`தீவிரமான மற்றும் யதேச்சதிகார அணுகுமுறைகொண்ட கட்சித் தலைவர்களும், அவர்களது அரசும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் மிகவும் ஆபத்தானவை. தேசம் ஏற்கெனவே இதுபோன்ற தலைவர்களையும் அரசாங்கத்தையும் கண்டுள்ளது. வரலாறு மீண்டும் திரும்பாமல் இருக்க வேண்டுமானால், 2019-ம் ஆண்டு தேர்தலைச் சந்திக்க, ஆட்சியை நிதின் கட்கரியிடம் ஒப்படையுங்கள். 

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு முக்கியக் காரணமே விவசாயிகள் மற்றும் மக்களுக்கு விரோதமான கொள்கைகள்தாம். இத்தகைய கொள்கைகளைக்கொண்டிருக்கும் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் பதவியிலிருந்து விரட்டி அடியுங்கள். மத்தியப்பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் முந்தைய பா.ஜனதா அரசுகள் செய்த நல்ல காரியங்களையெல்லாம் மோடியும் அமித் ஷாவும் நாசமாக்கிவிட்டார்கள். அவர்கள் இருவரும் பெரிய பெரிய புல்லட் ரயில் திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்கள் மீது மட்டும்தான் அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறார்கள். 

மோடி மற்றும் அமித் ஷாவின் சர்வாதிகார அணுகுமுறை, நாட்டில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நிதின் கட்கரி போன்ற மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க மென்மையான ஒரு தலைவரை மோடிக்குப் பதிலாக முன்னிறுத்துங்கள். கட்கரி போன்ற தலைவர்தான் கட்சியினர் மற்றும் தோழமைக் கட்சியினரின் கருத்துகளையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டு, ஒருமித்தக் கருத்தை ஏற்படுத்தி மக்கள் மனதிலிருந்து அச்சத்தை அகற்ற முடியும். 

61 வயதாகும் கட்கரி, பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜனதாவில் விசுவாசமுடன் இருப்பவர் என்பது மட்டுமல்ல, பா.ஜனதா தலைவராகவும், மகாராஷ்டிரா அமைச்சரவையிலும் பதவிவகித்தவர். தற்போது மத்திய அமைச்சராகவும் இருப்பதால், பிரதமர் பதவிக்கும் போதுமான தகுதியுடையவராகவும் உள்ளார்' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கிஷோர் திவாரி. 

தூக்கி எறியத் தயங்காத ஆர்.எஸ்.எஸ்

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு, டிசம்பர் 11-ம் தேதியன்றே அவர் இந்தக் கடிதத்தை ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளார். ஆனால், மோடி சமீபத்தில் மகாராஷ்டிராவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நேரத்தில் இந்தக் கடிதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது திட்டமிட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நிதின் கட்கரியின் ஆதரவாளர்கள் இந்தக் கடிதத்தைக் கசியவிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

பா.ஜனதாவைப் பொறுத்தவரை, அதற்கு எல்லாமே அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-தான். பா.ஜனதாவுக்கு யார் தலைவர் பதவிக்கு வரவேண்டும், பிரதமர் பதவிக்கு யார், பா.ஜனதா வெற்றிபெறும் மாநிலங்களில் முதலமைச்சர் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிப்பது அந்த அமைப்பின் தலைவர்கள்தாம். 

எனவே, தேர்தல் வெற்றிக்காக யாரையும் தூக்கி எறிய ஆர்.எஸ்.எஸ் தயங்கியதே இல்லை என்பது அதன் கடந்தகால வரலாறு. குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து எழுந்த கடும் சர்ச்சை காரணமாக, அப்போது அந்த மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என நாலாபுறங்களிலிருந்தும் வந்த அழுத்தங்களால், அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மோடி பதவி விலக வேண்டும் என நினைத்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் அதை கடுமையாக எதிர்த்தது. கூடவே அப்போதைய உள்துறை அமைச்சரான எல்.கே.அத்வானியும் மோடியை அந்த நெருக்கடியிலிருந்து காப்பாற்றினார். 

அன்று அத்வானி... இன்று மோடி? 

இந்த நிலையில், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானிதான் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று அந்தக் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், சற்றும் எதிர்பாராதவிதமாக மோடி, தேர்தலுக்கு முன்னதாகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் முன்னிறுத்தப்பட்டார். அதாவது, குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்த மோடி, தன் மீது ஒரு தீவிர இந்துத்வா இமேஜ் உண்டாகுமாறு பார்த்துக்கொண்டார். கூடவே, குஜராத் மாநிலத்தை வளர்ச்சி மிகுந்த மாநிலமாகக் காட்டிக்கொள்ள அவர் மேற்கொண்ட மறைமுகப் பரப்புரை உத்தியும் அவரை ஒரு பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் அளவுக்கு வளர்த்தது. 

இதனால்தான், ஆர்.எஸ்.எஸ் தலைமை சற்றும் யோசிக்காமல் அதுவரை பா.ஜனதாவின் தீவிர இந்துத்வா முகமாக அறியப்பட்ட அத்வானியைத் தூக்கி எறிந்துவிட்டு, மோடியை முன்னிறுத்தியது. எனவே, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை முன்னிறுத்தினால் ஓட்டு விழாது என்ற நிலைமை வருமானால், அவருக்குப் பதிலாக யாரை நிறுத்தினால் ஓட்டு விழுமோ அவரை முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ் தயங்காது. 

ஏற்கெனவே,  உத்தரப்பிரதேச முதலமைச்சர் பதவிக்கு யோகி ஆதித்யநாத் கொண்டுவரப்பட்டதே, மோடிக்குப் பதில் இன்னொரு தீவிர இந்துத்வா முகம் தேவைப்பட்டால் பயன்படுவாரே என்ற நோக்கத்தில்தான். ஆனால், யோகியின் கோக்குமாக்கான செயல்பாடுகள் மற்றும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளை அவர் கட்டுப்படுத்தத் தவறியது போன்றவையெல்லாம் பா.ஜனதாவுக்கு கெட்டபெயரைச் சம்பாதித்துத் தந்துள்ளன. எனவே, மோடிக்கு மாற்றாக யோகி ஆதித்யநாத்தை முன்னிறுத்துவது செல்லுபடியாகாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

இத்தகைய சூழலில், நிதின் கட்கரியோ அல்லது வேறு யாரோ நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்கிக்கொடுக்கக்கூடிய முகமாக இருக்கும்பட்சத்தில் அல்லது மோடியை முன்னிறுத்தினால் ஓட்டு விழாது என்ற நிலை ஏற்படும்பட்சத்தில் அவரைத் தூக்கி எறிய ஆர்.எஸ்.எஸ் தலைமை கொஞ்சமும் தயங்காது என்றே சொல்லலாம்.  

அதாவது, அன்று அத்வானிக்கு ஏற்பட்டது நாளை மோடிக்கு நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

அடுத்த கட்டுரைக்கு