Published:Updated:

ஓரம்கட்டப்பட்ட மா.செ.; ஆட்டத்தைத் தொடங்கிய செந்தில் பாலாஜி! - கலங்கும் கரூர் தி.மு.க-வினர்

ஓரம்கட்டப்பட்ட மா.செ.; ஆட்டத்தைத் தொடங்கிய செந்தில் பாலாஜி! - கலங்கும் கரூர் தி.மு.க-வினர்
ஓரம்கட்டப்பட்ட மா.செ.; ஆட்டத்தைத் தொடங்கிய செந்தில் பாலாஜி! - கலங்கும் கரூர் தி.மு.க-வினர்

தி.மு.க-வில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். ஆனால், அவர் தி.மு.க மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனை அழைத்துப் போகாமல் தனியாகச் சென்று சந்தித்து வருவதாக சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தார். ஆனால், சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்த வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்பில் சிக்கி, தனது எம்.எல்.ஏ பதவியை இழந்தார். டி.டி.வி.தினகரனிடம், 'உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்' என்று செந்தில் பாலாஜி தொடர்ந்து வலியுறுத்தி வந்தாராம். ஆனால், டி.டி.வி.தினகரன் அதற்கு சம்மதிக்கவில்லை என்பதாக தெரிகிறது.  இந்நிலையில், 'அ.தி.மு.கவும், அ.ம.மு.கவுடன் இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது' என்ற தகவல் கிளம்பியது.

இதனால், தனது ஆதரவாளர்களை கடந்த வாரம் கூட்டிய செந்தில் பாலாஜி, தனது அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசித்தார். அதை வைத்து, `முன்னாள் அமைச்சரும், தி.மு.க மாநில விவசாய அணி செயலாளருமான கரூர் சின்னசாமி மூலமாக செந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைய இருக்கிறார்' என்ற தகவல் கிளம்பியது. ஆரம்பத்தில், `இது வெறும் வதந்தி' என்ற அளவில் பேசப்பட்டாலும், அடுத்தடுத்த நாள்களில், 'தகவல் உண்மைதான்' என்ற நிலைக்கு மாறியது. செந்தில் பாலாஜியை சமாதானம் செய்ய முயன்றார் டி.டி.வி.தினகரன். முடியவில்லை. இதனால், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கட்சியின் பொருளாளர் தஞ்சை ரெங்கசாமி உள்ளிட்டவர்களை கரூருக்கு அனுப்பி வைத்து, செந்தில் பாலாஜியை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவர்களைச் சந்திக்காமல் டிமிக்கி கொடுத்தார் செந்தில் பாலாஜி.

அதோடு, தனது ஆதரவாளர்கள் 2000 பேரோடு சென்னைக்குப் போய் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் ஐக்கியமானார். இந்த நிலையில், நேற்று காலை கரூர் வந்த செந்தில் பாலாஜி, தி.மு.க-வின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சிக் கழக நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து வருகிறார். ஆனால், அப்படி சந்திக்கப் போகும்போது மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனை அழைத்துப் போகாமல், கழட்டி விட்டுச் செல்வது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி, நம்மிடம் பேசிய கரூர் மாவட்ட தி.மு.க-வினர் சிலர், ``கரூர் தி.மு.க ஜாம்பவான் கே.சி.பழனிச்சாமி அரசியலில் துறவறம் பூண்டநிலையில், மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லைதான். அவரால் கரூரில் தி.மு.க தேய்ந்துதான் உள்ளது. `அவரை மாற்ற வேண்டும்'ன்னு நாங்களே தலைமைக்கு தொடர் கோரிக்கை வச்சுக்கிட்டு வர்றோம்தான். ஆனா, மாவட்டச் செயலாளரை கழட்டிவிட்டுட்டு, செந்தில் பாலாஜி எல்லா நிர்வாகிகளையும் சந்திப்பது முறையல்ல. வேறு கட்சிகளில் இருந்து முக்கியமானவர்கள் தி.மு.கவுக்கு வந்தால், அவர்களை அறிமுகப்படுத்த மாவட்டச் செயலாளர் தலைமையில் அறிமுக நிகழ்ச்சி நடத்தணும். இதுதான் தி.மு.க-வில் உள்ள வாடிக்கை.

அதேபோல், ஒரு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் இல்லாமல் எந்த நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது என்பதும் நடைமுறை. ஆனால், இவ்வளவு நடைமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டுட்டு, ஏதோ இப்போதே மாவட்டச் செயலாளர் ஆகிவிட்டதுபோல் தனித்தே நிர்வாகிகளை போய் செந்தில் பாலாஜி சந்தித்து வருவது கட்சிக்கு விரோதமான செயல். இவர் இப்போதே இந்த ஆட்டம் ஆடுறார்ன்னா, பதவி கிடைத்தால் என்ன ஆட்டம் ஆடுவார். அதை நினைத்தாலே பயமா இருக்கு. ஸ்டாலின்தான் செந்தில் பாலாஜிக்கு ஆரம்பத்திலேயே கடிவாளம் போடணும்" என்றார்கள்.