Published:Updated:

` நீங்கள் ஏன் பதவியில் நீடிக்கிறீர்கள் தெரியுமா?!' - தமிழிசை தவற்றை சுட்டிக் காட்டிய ராம் மாதவ்

முதலமைச்சர் பதவிக்கு வரும் வரையில் ஸ்டாலினுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் தேவைப்படும். அதன்பிறகு அவர் நம்மோடு வரக் கூடிய சூழலும் உருவாகலாம். சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப அவரை விமர்சனம் செய்யுங்கள்.

` நீங்கள் ஏன் பதவியில் நீடிக்கிறீர்கள் தெரியுமா?!'  - தமிழிசை தவற்றை சுட்டிக் காட்டிய ராம் மாதவ்
` நீங்கள் ஏன் பதவியில் நீடிக்கிறீர்கள் தெரியுமா?!' - தமிழிசை தவற்றை சுட்டிக் காட்டிய ராம் மாதவ்

மிழக பா.ஜ.க-வின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று வந்திருந்தார் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ். ` ஜனவரி இறுதிக்குள் கூட்டணி உறுதியாகிவிடும். தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து தேர்வாகும் எம்.பி-க்களில் பலர் நம்மை ஆதரிப்பார்கள்' எனவும் தமிழிசையிடம் பேசியிருக்கிறார் ராம் மாதவ். 

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு நேற்று வந்திருந்தார் ராம் மாதவ். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் கட்சியின் செயல்பாடுகளைப் பற்றி அவர் விரிவாக ஆராய்ந்தார். சோனியா காந்தியின் வருகைக்குப் பிறகு ராம் மாதவ் வந்திருப்பதால், தேர்தல் பிரசார வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்ற பேச்சு, பா.ஜ.க வட்டாரத்தில் வலம் வந்தது. அதற்கேற்ப செய்தியாளர்களிடம் பேசிய ராம் மாதவ், ` ஊழல் கட்சியான காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்போது, நாங்களும் வலுவான கூட்டணி அமைக்க முடியும். வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியின்போது பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணியில் இருந்தது. அப்போது முரசொலி மாறன் உட்பட நல்ல அமைச்சர்கள் இருந்தனர். அவர்கள் மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் கிடையாது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது தி.மு.க அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றார்கள். இப்போது, மீண்டும் ஊழலும் ஊழலும் இணைந்து ஊழல் கூட்டணி அமைந்துள்ளது. திகார் ஜெயிலுக்குப் போக வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?' எனக் கூறியிருந்தார். 

இதன்பிறகு, பா.ஜ.க நிர்வாகிகளுடன் தமிழக சூழல்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். அப்போது பேசிய ராம் மாதவ், ` காங்கிரஸ் கட்சிக்கு எந்த செல்வாக்கும் இல்லை. கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகள் மட்டுமே அவர்களிடம் உள்ளன. அந்த வாக்குகளுக்காகத்தான் நம்மை விமர்சனம் செய்தார் ஸ்டாலின். கடந்த தேர்தலில் தமிழகத்தில் 4.3 சதவிகித வாக்குகளைத்தான் காங்கிரஸ் எடுத்துள்ளது. இங்கு ஸ்டாலினை எதிர்த்துப் பேசுவதைவிட காங்கிரஸ் கட்சியை அதிகம் விமர்சனம் செய்யுங்கள். ஸ்டாலின் நமக்கு எதிரியல்ல. தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து பல எம்.பி-க்கள் நம்முடன் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது' எனக் கூற, இதை ஆமோதித்துப் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், ` எங்களுக்குக் கிடைத்த புள்ளிவிவரத்தின்படி, காங்கிரஸ் மீது நாடார் சமூகத்தினர் அதிருப்தியில் உள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் ஓரளவு செல்வாக்கு அவர்களுக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சியை விட்டு நாடார் சமூகம் விலகிச் சென்று கொண்டிருக்கிறது. மத்தியில் அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் அந்த சமூகத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை' எனக் கூறியிருக்கிறார். 

இதற்குப் பதில் கொடுத்த ராம் மாதவ், ` நாம்தான் அந்த சமூகத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். இதை அந்தச் சமூக மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள். இந்த அடிப்படையான பணியைச் செய்ய வேண்டியது தமிழிசையும் பொன்னாரும்தான். எவ்வளவோ பிரச்னைகள் இருந்தபோதும் தகுதியின் அடிப்படையில் இஸ்ரோ தலைவராக சிவன் நியமிக்கப்பட்டார். இதேபோல், பல்வேறு உயர் பதவிகளில் அந்த சமூகத்தின் பிரதிநிதிகளை மோடியே நேரடியாக அமர்த்தினார். காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை வெளியில் பேசுங்கள். சாதிரீதியாக நீங்கள் பேசுவதைவிடவும் மற்ற சமூக அமைப்புகள் மூலமாகப் பேச வையுங்கள். சென்னைக்கு வந்த சோனியா, காமராஜர் நினைவிடத்துக்குக்கூட வரவில்லை என்பதை பிரசாரமாகக் கொண்டு செல்லுங்கள்' என்றவர், 

`` சிறுபான்மையினர் வாக்குகளுக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி செயல்படுவதை வெளிக்காட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். முதலமைச்சர் பதவிக்கு வரும் வரையில் ஸ்டாலினுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் தேவைப்படும். அதன்பிறகு அவர் நம்மோடு வரக் கூடிய சூழலும் உருவாகும். சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப அவரை விமர்சனம் செய்யுங்கள். ஜனவரி இறுதியில்தான் யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்படும். எனவே, ஒரு மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள். நம்மோடு கூட்டணி சேருவதற்கு அ.தி.மு.க-வும் கமிட் ஆகவில்லை. நாமும் அவர்களுடன் கமிட் ஆகவில்லை. அதற்காக, அண்ணா தி.மு.க ஆப்ஷனை நாம் மூடவும் இல்லை. அதைப் பற்றியே பேச வேண்டாம். முடிந்த வரையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகளை தாக்கிப் பேசுங்கள்' என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய ராம் மாதவ், ` கடந்த தேர்தலில் நமக்குத் தஞ்சாவூரில் கிடைத்தது 5 சதவிகித ஓட்டுக்கள்தான். சிவகங்கையில் இந்துத்துவ லீடர் ராஜாவுக்கு 11 சதவிகித ஓட்டுக்கள் வந்தன. சமூகச் சூழலில் சரியாக ரிப்போர்ட் செய்யாதது உங்கள் தவறு. நீங்கள் விசுவாசியாக இருப்பதால், உங்களை நீக்காமல் இன்னும் பதவியில் வைத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர். நிறைய விஷயங்களில் மாநிலத் தலைமையிடம் தவறு இருக்கிறது' எனக் கூற, ` நான் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன்' எனப் பதில் கூறியிருக்கிறார் தமிழிசை.

இதன்பிறகு பேசிய ராம் மாதவ், ` வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததும் சட்டரீதியாக அதைத் தொடர வைத்தது மோடி அரசுதான். விசாரணையில்லாமல் கைது செய்யலாம் என்ற  நிலையை உருவாக்கினோம். இதை எஸ்.சி மக்கள் மத்தியில் நாம் கொண்டு செல்லவில்லை. இதனால்தான் ம.பி., ராஜஸ்தானில் எஸ்.சி ஓட்டுக்கள் நம்மை விட்டுப் போய்விட்டது. நமது செயலால் பாதிப்படைந்த கட்சிகள், நமக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார்கள். இதை எஸ்.சி மக்கள் புரிந்துகொண்டார்களா?' எனக் கேட்டார். ` நாங்க பண்றோம் ஜி. எஸ்.சி வீட்டில் சாப்பிடறோம் ஜி. இதெல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வந்திருக்கிறது ஜி' எனக் கூறியிருக்கிறார். இந்தப் பதிலில் திருப்தியடையாதவர், அடுத்துச் செய்ய வேண்டிய விஷயங்களை விவரித்துவிட்டுக் கிளம்பினார்.