Published:Updated:

"யார் புள்ளையைவெச்சு இவங்க அரசியல் பண்றாங்க...!" - கலங்கும் அற்புதம்மாள்

"எனக்கு 71 வயசாகுது. மிகவும் சிரமத்துல இருக்கிறேன். இத்தனை வருஷமா அறவழியில் பொறுமையாப் போராடிக்கிட்டு இருக்குறோம். இப்போ அறிவு விடுதலைக்காக நாங்க செய்ற விஷயம் எதுவும், அவனோட விடுதலையைப் பாதிச்சுடக் கூடாதுனு ரொம்ப கவனத்துடன் இருக்கோம். பயமா இருக்கு."

"யார் புள்ளையைவெச்சு இவங்க அரசியல் பண்றாங்க...!" - கலங்கும் அற்புதம்மாள்
"யார் புள்ளையைவெச்சு இவங்க அரசியல் பண்றாங்க...!" - கலங்கும் அற்புதம்மாள்

நீதி வெல்வதெப்போ..?
விடுப்பில் வந்தான், மகிழ்ந்தோம்!
விடைபெற்றுச் சென்றான், உடைந்தோம்!
வழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம்...
அவன் விடுதலைக்கு!

மேற்கண்ட உணர்ச்சிபூர்வமான வரிகள், அற்புதம்மாளின் உதட்டிலிருந்து வரவில்லை. உள்ளக் குமுறலின் வெளிப்பாடு. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேரின் விடுதலை  தொடர்பான வழக்கில், கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், `7 பேரையும் விடுதலை செய்கிறோம். மேற்கொண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பு வெளியாகி 100 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், அற்புதம்மாள் நெகிழ்ச்சியோடு நேற்று மேற்கண்ட வரிகளை வெளியிட்டிருந்தார். 

சிறையில் வாடும் தன் மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக, 27 ஆண்டுகளாகப் போராடிவருபவரை வயோதிகம் வாட்டுகிறது. ஆனாலும், அற்புதம்மாளின் போராட்ட குணம் தளரவில்லை. அவரிடம் பேசினோம். 

``இவங்க ஏன்பா இப்படிப் பண்றாங்க? இதுவரைக்கும் நடந்ததெல்லாம் போகட்டும். `7 பேரையும் விடுதலை செய்வதாகச் சொன்ன உச்ச நீதிமன்றம், 161-வது பிரிவைப் பயன்படுத்தி 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம். அம்முடிவை ஆளுநர் ஒப்புதல் பெற்று நிறைவேற்றலாம்'னு தீர்ப்பு சொல்லிடுச்சு. ஆட்சியாளர்கள் எங்களின் உணர்வுக்குத்தான் இதுவரை மதிப்பு கொடுக்காம இருந்தாங்க. இப்போ, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், சட்டத்துக்கும் மதிப்புக் கொடுக்கலாம் அல்லவா? 

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு முதலமைச்சரைச் சந்திச்சேன். `எங்க தரப்பில் 7 பேர் விடுதலைக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறோம். அவர் ஒப்புதல் கிடைத்தால் உடனே 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்'னு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். `எனக்காக, என்னைப் போன்ற மற்ற ஆறு பேரின் குடும்பத்தினருக்காக, ஆளுநருக்கு நீங்க அழுத்தம் கொடுக்கலாமே'னு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்கிட்ட கேட்டேன். `சட்டத்தில் அதற்கு இடமில்லை'னு சொல்லிட்டார்.

பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களைச் சந்திச்சு, என் வேதனைகளைச் சொன்னேன். `உரிய நடவடிக்கை எடுக்கிறேன்'னு சொன்னார். பிறகு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படலை. இந்நிலையில, இந்த விஷயத்துல விரைந்து நடவடிக்கை எடுக்க ஆளுநரை வலியுறுத்தும் வகையில போராட்டங்களை நடத்தினால், அதற்கும் தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டு முடக்கப்பார்க்குறாங்க. 7 பேரின் விடுதலை உட்பட பல வழக்குகள் ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கு. அதனால, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு கால வரையறை இருக்கணும். அப்போதான் விரைவில் உரிய நடவடிக்கை கிடைக்கும். இதற்கு என் புள்ளையின் வழக்கு முக்கியமான உதாரணம். 

2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, `7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருக்கு'னு தைரியமா குரல் கொடுத்தாங்க. ஒருவேளை ஜெயலலிதா இப்போ உயிரோடு இருந்திருந்தால், நிச்சயம் 7 பேரையும் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுத்திருப்பாங்க. ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்திருப்பாங்க. என் புள்ளை வெளிய வரணும். அதுக்காக மேற்கொண்டு என்ன செய்யணும்னு ஒண்ணுமே புரியலை. உடம்பு ரொம்பச் சோர்வாகிட்டே இருக்கு. அறிவுக்கு 47 வயசாகிடுச்சு. அவனுக்கு உடல்நிலை சரியில்லை. இந்நிலையில அவன் சிறையிலிருக்கும் ஒவ்வொரு நாளும், அவனுடைய உடல்நிலை மேலும் மோசமாகும். இந்த வருஷமாவது என் புள்ளை சிறையிலிருந்து வெளிய வந்துடுவான்னு நினைச்சேன். ஆனா, 2018-ம் ஆண்டு முடியப்போகுது. வர்ற பொங்கல் பண்டிகைக்குள்ளாவது என் புள்ளை வெளிய வந்துடணும். எங்க வாழ்க்கையில 28 வருஷத்துக்குப் பிறகு, அவனுடன் சேர்ந்து ஒரு பண்டிகையைக் கொண்டாடணும்னு தவிப்பில் இருக்கேன்" என்கிறார் உருக்கமாக.

``மனசாட்சிக்கு உட்பட்டு, இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கணும்னு நினைச்சிருந்தா மத்திய, மாநில அரசுகள் எப்போதே நடவடிக்கை எடுத்திருப்பாங்க. அதைவிட இந்த வழக்கில் பல அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இருக்கு. இந்த வழக்கைவெச்சு பெரிய அரசியலே நடந்துகிட்டு இருக்கு. இதுவே ஒரு பிரபலமான அரசியல்வாதி தப்பே பண்ணியிருந்தாலும், அவர் மட்டும் ஜாமீன்ல அல்லது விடுதலையாகி சீக்கிரம் வெளியே வந்திடுறாரே... அது எப்படி? அப்போ இங்க எல்லோருக்கும் ஒரே நீதி இல்லைதானே? யார் வீட்டுப் பிள்ளையை வெச்சுகிட்டு அரசியல் பண்றாங்க? என் புள்ளைப்பா! ஒரு தாயா இருந்துபார்த்தால்தான் என் வலி புரியும். அரசியல்வாதிகளுக்குச் சொல்றேன்... என் புள்ளையைப் போல உங்க புள்ளை தப்பே பண்ணாம சிறையில 27 வருஷமா இருந்திருந்தால்தான், என் வலி உங்களுக்குப் புரியும். `தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி'னு சொல்வது என் புள்ளை விஷயத்தில் உண்மையாகிடுச்சு. என்னதான் செய்றது? எங்களுக்கான நீதியை யார் பெற்றுத்தருவது? ஆனாலும் நம்பிக்கை இழக்காமக் காத்துக்கிட்டிருக்கேன். 

இப்போ சென்னை வண்டலூர்ல தங்கியிருக்கிறேன். எனக்கு 71 வயசாகுது. மிகவும் சிரமத்துல இருக்கிறேன். இத்தனை வருஷமா அறவழியில் பொறுமையாப் போராடிக்கிட்டு இருக்குறோம். இப்போ அறிவு விடுதலைக்காக நாங்க செய்ற விஷயம் எதுவும், அவனோட விடுதலையைப் பாதிச்சுடக் கூடாதுனு ரொம்ப கவனத்துடன் இருக்கோம். பயமா இருக்கு. 

அறிவு வேலூர் சிறையில் இருந்தவரை வாரம்தோறும் அவனைப் பார்த்திடுவேன். இப்போ அவனைப் புழல் சிறைக்கு மாற்றின பிறகு அவனை மூணு வாரத்துக்கு ஒருமுறைதான் சந்திக்க முடியுது. அதுவும் காலையில 10 மணி முதல் 12 மணிவரைதான் அனுமதி கடிதம் வாங்குறாங்க. நிறைய கூட்டம் இருக்கும்; எல்லோருக்கும் ஒரே வரிசைதான். அதுவும் நிறைய கெடுபிடிகள் இருப்பதால், கொஞ்சநேரம்தான் மகனுடன் பேச முடியுது. இப்படிச் சிரமப்படுறதால, என் உடல்நிலை ரொம்ப சோர்வாகுது. அதனால, `நீங்க ரொம்ப சிரமப்படாதீங்க. நான் சொல்லியனுப்பும்போது மட்டும் வாங்க'னு சொல்றான். 

எப்படியாச்சும் என் புள்ளையை சீக்கிரம் எங்கிட்ட கொடுத்துடுங்கப்பா... எல்லோருக்கும் கோடிப் புண்ணியமாப் போகும்!" - கண்ணீருடன் வேண்டுகோள் விடுக்கிறார், அற்புதம்மாள். 

அற்புதம்மாளின் அழுகை, ஆட்சியாளர்களின் செவிக்குக் கேட்குமா?