Published:Updated:

அரட்டையடித்த போக்குவரத்துக் காவலர்கள்; ரகசியமாகப் படம் எடுத்த கிரண் பேடி!- அதிர்ந்த அதிகாரிகள்

அரட்டையடித்த போக்குவரத்துக் காவலர்கள்; ரகசியமாகப் படம் எடுத்த கிரண் பேடி!- அதிர்ந்த அதிகாரிகள்
அரட்டையடித்த போக்குவரத்துக் காவலர்கள்; ரகசியமாகப் படம் எடுத்த கிரண் பேடி!- அதிர்ந்த அதிகாரிகள்

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றதிலிருந்து அரசு அலுவலகங்களில் அதிரடி ஆய்வை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதன்படி நேற்று பாதுகாப்பு அதிகாரிகள் யாரையும் அழைக்காமல் தனியார் கார் ஒன்றில் புதுச்சேரியின் முக்கிய சிக்னல்களில் ரகசியமாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் போக்குவரத்தைச் சரி செய்யாமல் அரட்டை அடித்துக்கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காமல் அலட்சியமாகச் சென்றனர். அதைப் பார்த்த கிரண் பேடி காரில் இருந்தபடியே பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்களை தனது கைப்பேசியில் படம் பிடித்தார்.

பின்னர் ஆளுநர் மாளிகைக்குத் திரும்பி போக்குவரத்துத்துறை அதிகாரிகளையும் உயர் அதிகாரிகளையும் அழைத்த அவர், சிக்னல் விளக்குகளை மறைக்கும் அளவுக்கு ஏன் இவ்வளவு விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியதோடு சரியாகப் பணி செய்யாவிட்டால் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும், ``போக்குவரத்து காவல்துறை தங்கள் பணிகளைச் சரி வரச் செய்யவில்லை. எப்படிச் சீரமைப்புப் பணிகளைச் செய்வது என்றே தெரியாமல் இருக்கின்றனர். போக்குவரத்து சிக்னல் அருகே நிற்காமல் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருக்கின்றனர். 

சிக்னல் விளக்குகள் மங்கலாகவே ஒளிர்வதால் தொலைவிலிருந்து பார்த்தால் சரியாகத் தெரியவில்லை. போக்குவரத்து சிக்னல்கள் அருகேயே பேனர்கள் விளம்பரத்துக்காக வைக்கப்படுகின்றன. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்னை தொடர்பாக புகார்களை ஆதாரத்துடன் 1031, 100 எண்களில் பதிவு செய்யலாம். புகைப்படம், வீடியோ இருந்தால் நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு திங்கள் முதல் புதன் வரை மாலை 5 மணிக்கு முன்னனுமதி பெறாமலேயே நேரடியாகச் சந்திக்கலாம்” என்று வாட்ஸ்-அப் மூலம் தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``போக்குவரத்து காவல் துறையினர் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும்போது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்கின்றனர். அப்போது அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கும் உரிமையாளர் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பள்ளி நேரங்களில் அதிகமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைச் சரி செய்ய வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறையினரிடம் தெரிவித்திருந்தேன். இதற்கிடையில் ஆளுநர் தன்னிச்சையாக காவல்துறை தலைமை அதிகாரி, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை அழைத்து வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லையென்றால் ஸ்பாட் பைன் வசூலிக்க வேண்டும் என்று வாய் மொழியாகக் கூறியுள்ளார்.

அதனால் கீழ்நிலை அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி சோதனை செய்யும் பணிகளில் இறங்கினர். அதனால் போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய காவலர்கள் ஸ்பாட் ஃபைன் போடும் வேலையில் இறங்கியுள்ளனர். போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் வாகனம் ஓட்டும்போது வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சிக்னல்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவுரை கூறி வருகின்றோம்.

ஓட்டுநர் உரிமம், வண்டியின் ஆதாரம், காப்பீடுக் கட்டியதற்கான ஆதாரங்களைக் கொடுப்பதற்கு மக்களுக்குக் காலக்கெடு கொடுக்க  வேண்டும். அப்படி அவர்கள் கொடுக்கவில்லை என்றால்தான் அபராதம் விதிக்க வேண்டும். துணை நிலை ஆளுநர் அவர்களின் வாய்மொழி உத்தரவாக இருந்தாலும் அது எழுத்தில் இருக்க வேண்டும். அந்த உத்தரவு முதலில் காவல்துறை தலைமை அதிகாரிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தலைமைச் செயலருக்கு அனுப்ப வேண்டும். தலைமைச் செயலர் எனக்கு அனுப்பிய பிறகே முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.