Published:Updated:

`கட்சிக்கு களங்கம் விளைவித்துவிட்டார்' - ஓ.பி.எஸ் சகோதரர் அ.தி.மு.க-விலிருந்து நீக்கம்!

`கட்சிக்கு களங்கம் விளைவித்துவிட்டார்' - ஓ.பி.எஸ் சகோதரர் அ.தி.மு.க-விலிருந்து நீக்கம்!
`கட்சிக்கு களங்கம் விளைவித்துவிட்டார்' - ஓ.பி.எஸ் சகோதரர் அ.தி.மு.க-விலிருந்து நீக்கம்!

அ.தி.மு.க.விலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அறிவித்துள்ளனர். 


அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் பதவி ஏற்றதிலிருந்து கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருபவர்களை நீக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரரும், கட்சியின் பெரியகுளம் முன்னாள் நகரமன்றத் தலைவருமான ஓ.ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,``கழகத்தின் கொள்கை- கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.ராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப்பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன் பிறப்புகள் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொளக்கக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் ராஜா முறைகேடு செய்ததாக வெளியான தகவலையடுத்து இந்த நீக்கம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.