Published:Updated:

அ.தி.மு.க-வில் கட்டம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தம்பி! - பின்னணியில் 2 அமைச்சர்கள்

அ.தி.மு.க-வில் கட்டம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தம்பி! - பின்னணியில் 2 அமைச்சர்கள்
அ.தி.மு.க-வில் கட்டம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தம்பி! - பின்னணியில் 2 அமைச்சர்கள்

துரை மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தேர்தலில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காலையில் தலைவரான ஓ.ராஜா, மதியம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். 

தேனி மாவட்டம் பெரியகுளத்தின் முன்னாள் சேர்மேனாக வலம் வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவின் நீண்ட நாள் கனவு, மதுரை மாவட்ட ஆவின் தலைவர் ஆக வேண்டும் என்பது. இந்தப் பதவியைக் கைப்பற்றுவதற்காக அரசியல்ரீதியாக காய்களை நகர்த்தி வந்தார். இதற்கு எதிராக தேனியைச் சேர்ந்த அம்மாவாசி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், `ஆவின் தலைவர் தேர்தல் நேர்மையாக நடத்த வேண்டும்' என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், மதுரை மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய தலைவர், துணைத்தலைவர்களின் எண்ணிகையை விட அதிகமாக இல்லாத நிலையில், ஓ.ராஜா தலைவராகவும் கே.சி.தங்கராஜன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின் பின்னணியில் ஓ.ராஜா இருப்பதாக வெளியான தகவலையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாக தேனி மாவட்ட அ.தி.மு.கவினர் தெரிவிக்கின்றனர். 

மேலும், மதுரை மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவராக ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் சிலர் தயாராகி வந்தனர். தவிர, ஆவின் விவகாரத்துக்குள் ராஜா நுழைவதைக் கூட்டுறவுத்துறை அமைச்சரும் வருவாய்த்துறை அமைச்சரும் விரும்பவில்லை. இந்தச் சூழலில், மதுரையிலிருந்து கோட்டைக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஓ.ராஜா நீக்கப்பட்டார் என்ற தகவலும் மாவட்டத்தில் வலம் வருகிறது. இந்த நீக்கம் ஓ.பன்னீர்செல்வம் மீதான எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பதாகவும் விவாதம் கிளம்பியுள்ளது.