Published:Updated:

ஜெயலலிதா ஜூஸ் `டிரெய்லர்’ வந்து வருஷமாச்சு; முழுப்படம் என்னாச்சு?!

ஜெயலலிதா ஜூஸ் `டிரெய்லர்’ வந்து வருஷமாச்சு; முழுப்படம் என்னாச்சு?!
ஜெயலலிதா ஜூஸ் `டிரெய்லர்’ வந்து வருஷமாச்சு; முழுப்படம் என்னாச்சு?!

ப்போலோவில் ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ வெளியாகி இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. 

ஜெ., இறந்த பின், கடந்து போயுள்ள ஈராண்டுகளில், அரசியல் அரங்கில் பல்வேறு அதகளங்களும் அரங்கேறியுள்ளன. ஆட்சி அதிகாரங்களில் பல காட்சிகளும் மாறியுள்ளன. ஆனால், ஜெ., மரணம் குறித்த சந்தேகங்கள் மட்டும், உயிர்ப்போடு வலம் வந்துகொண்டே இருக்கின்றன. அதிகாரத்துக்குப் பயந்தும், ஆணையத்தின் விசாரணையைத் தாண்டியும், பலரும் பேச மறுக்கும் சூழல் தொடர்கிறது. அதையும் மீறி, ஜெயலலிதா குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டு, தமிழகத்தை மட்டுமன்றி, தென்னகத்தையும், தேசத்தையுமே தெறிக்க விட்டவர், வெற்றிவேல்.

தினகரனின் தீவிர ஆதரவாளரும், எக்ஸ் எம்.எல்.ஏ-வுமான வெற்றிவேல், ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது டிசம்பர் 20 அன்று, அந்த வீடியோவை வெளியிட்டார். ``ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது; அவர் சுய நினைவின்றியே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்; மருத்துவமனையில் உள்ள புகைப்படங்களோ, வீடியோவோ ஏன் வெளியிடவில்லை?" என்று பல கேள்விகளும் பரபரப்போடு எழுப்பப்பட்ட காலகட்டம் அது.

அப்போதுதான், ஆணையத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், புதுப்பட ஆடியோ ரிலீஸ் போல, அமர்க்களமாக இந்த வீடியோவை வெளியிட்டார், வெற்றிவேல். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில், படுக்கையில் சாய்ந்தநிலையில், ஜூஸ் குடித்துக்கொண்டே, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற வீடியோ காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. அந்த ரிலீஸுக்குக் கிடைத்த ரிசல்ட் அமோகம்; தினகரனின் வெற்றியில், 20 ரூபாய் டோக்கனுக்குப் பங்கு இருக்கிறதோ இல்லையோ, இந்த ஒரு நிமிட `டிரெய்லர்’க்குப் பெரும் பங்கு இருந்தது.

``சசிகலா தரப்பு, ஜெயலலிதாவின் வீடியோ காட்சிகளை இதுவரை வெளியிடாதது ஏன்?" என்று எடப்பாடி, ஓ.பி.எஸ். உட்படப் பலரும் உஷ்ணமாகக் கேள்வி எழுப்பிய நிலையில், அதைப் பொய்யாக்கும் வகையில் இந்த வீடியோ வெளியாகி, ஜெயலலிதா அப்போலோவில் உயிருடன் இருந்தார் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது. இதோ! வீடியோ வெளியாகி, ஓடியே போனது ஓராண்டு. 

ஆறுமுகசாமி ஆணையத்திடம் இந்த வீடியோவை முறைப்படி ஒப்படைக்காமல், நேரடியாக `டீடிஎச்’ல் இதை வெளியிட்ட வெற்றிவேல், ``ஜெயலலிதா மரணத்தை இந்த அரசும், ஆள்பவர்களும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த பல ஆதாரங்கள் உள்ளன. விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகுமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். 

தினகரன் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாகி ஓராண்டை நெருங்கும் நிலையில், இதற்கு இடைப்பட்ட காலத்தில் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் உட்பட 18 பேரின் எம்.எல்.ஏ. பதவி பறிபோயுள்ளது. அ.தி.மு.க.,வைக் கைப்பற்றுவதாகச் சொன்ன தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார். ``அமைப்பு தற்காலிகமானது என்றும், அ.தி.மு.க-வுடன் இணைந்ததும் அமைப்பு கலைக்கப்படும்" என்றும் சொன்னார். 

இப்போது இணைப்பும் தள்ளிப்போகிறது; 18 தொகுதிகளின் இடைத்தேர்தலும் கானல் நீராகி வருகிறது. இதற்கிடையில், செந்தில் பாலாஜி, தி.மு.க.,வுக்குப் போய் விட, தினகரனின் கூடாரமும் கலகலப்பின்றி கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதா தொடர்பான மற்ற வீடியோக்களை, தினகரன் தரப்பு ஏன் இன்னும் வெளியிடவில்லை என்ற கேள்வி, இப்போது தீவிரமாக எழுப்பப்படுகிறது. இதற்கான அவசியமும் அதிகமாகி வருகிறது. இடைத்தேர்தல் வெற்றிக்காக, ஒரு நிமிட வீடியோவை வெளியிட்ட தினகரனிடம் மேலும் பல ஆதாரங்கள் இருக்குமா என்பதும் விவாதமாகி வருகிறது. தினகரன் வெற்றிக்காக, இந்த வேலையைச் செய்த வெற்றிவேலைத் தொடர்பு கொண்டு, தகவல் அறியலாம் என்று பலமுறை தொடர்புகொண்டோம். அவரின் இணைப்பு கிடைக்கவே இல்லை. ஆணையத்திடம் ஒப்படைக்காமல், அரசியல் லாபத்துக்காக ஏதாவது வீடியோ ஆதாரத்தைத் தினகரன் தரப்பு வைத்திருக்கிறதா, அதை எப்போது வெளியிடுவார்கள் என்று கேள்விகள் பல இருக்கின்றன. விடை யாரிடம் இருக்கிறதோ?