Published:Updated:

`மதச்சார்பற்ற ஆட்சி அமையும்போது ஸ்டாலின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்!’ - கே.பாலகிருஷ்ணன்

`மதச்சார்பற்ற ஆட்சி அமையும்போது ஸ்டாலின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்!’ - கே.பாலகிருஷ்ணன்
`மதச்சார்பற்ற ஆட்சி அமையும்போது ஸ்டாலின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்!’ - கே.பாலகிருஷ்ணன்

`பா.ஜ.க எதிர்ப்பு ஆட்கள் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வரும் தேர்தலில் பா.ஜ.க-வை விரட்டிவிட்டு மதச்சார்பற்ற ஆட்சி அமையும்போது ஸ்டாலின் கோரிக்கையை மதச்சார்பற்ற கட்சிகள் பரிசீலிக்கும்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி சிறு ஆலைகள் அமைத்து குமரி மாவட்ட மக்களுக்கு  வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``குமரி மாவட்ட லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையை முன்வைத்து போராட்டம் நடத்துகிறோம். குமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக நொறுங்கிக் கிடக்கிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 5 ஆண்டுகளாக இருந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தவில்லை. மத்திய அமைச்சர், மீனவர்கள் மற்றும் இளைஞர்களுக்காகச் சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை. இரண்டு பாலங்கள் கட்டியுள்ளார் அது எத்தனை நாள் எனத் தெரியவில்லை. மக்களைப் புறக்கணித்தால் தொடர் போராட்டம் நடத்துவோம்.

உள்ளாட்சித் தேர்தலைப் பற்றி அரசுக்குக் கவலை இல்லை. உள்ளாட்சி நிர்வாகத்தை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு, அதையும் சேர்த்து வருமானம் பார்க்கலாம் என்ற முறையில் தேர்தலை நடத்தவில்லை. மேக்கேதாட்டூவாக இருந்தாலும் சரி முல்லைப் பெரியாறு அணையாக இருந்தாலும் சரி இரண்டு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும். குட்கா விவகாரம் உள்ளிட்ட பல ரெய்டுகளை நடத்திய பிறகும், மத்திய அரசு கைது நடவடிக்கையில் இறங்கவில்லை. இதில் என்ன மூடு மந்திரம் உள்ளது. ஊழல் பேர்வழிகளான விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அமைச்சர்களாக இருப்பது ஒரு பக்கம். அவர்களைப் பாதுகாக்கும் விதமாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசை வீழ்த்த வேண்டும் என்ற கருத்தோடு அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பா.ஜ.க எதிர்ப்பு ஆட்கள் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

வரும் தேர்தலில் பா.ஜ.க-வை விரட்டிவிட்டு மதச்சார்பற்ற ஆட்சி அமையும்போது ஸ்டாலின் கோரிக்கையை மதச்சார்பற்ற கட்சிகள் பரிசீலிக்கும். பல கட்சிகள் சேரும்போது எல்லா கட்சிகளுக்குள்ளும் கொள்கை வேறுபாடு இருக்கும். கட்சிகள் இணைந்து பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவு பிறப்பித்தது மக்களுக்கு எதிரானது. தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். பசுமைத் தீர்ப்பாயமா அல்லது ஸ்டெர்லைட் ஆலையின் ஊதுகுழலா என்ற கேள்வி எழுந்துள்ளது" என்றார்.