
‘‘நிழற்குடையில் பெயர் போட்டுக்கொண்டால் போதுமா?’’
#EnnaSeitharMP
#MyMPsScore
காங்கிரஸ் கட்சியினரைப் போல கோஷ்டி சண்டையில் வேட்டியைக் கிழித்துக்கொள்ளும் பழக்கம் திராவிடக் கட்சிகளில் இல்லை. வெளியில் தெரியாத மோதலாகவே அது இருக்கும். அதைத் தகர்த்த பெருமை, கடலூர் மாவட்ட அ.தி.மு.க-வுக்கு உண்டு.
கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் தொழில்துறை அமைச்சராகவும் இருப்பவர் எம்.சி.சம்பத். கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் கடலூர் தொகுதி எம்.பி-யாகவும் இருப்பவர் அருண்மொழித்தேவன். இருவரும் இரு துருவங்களாகச் செயல்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பாண்டியன் (சிதம்பரம்), முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி) ஆகிய மூவரும் அருண்மொழித்தேவன் அணியில் உள்ளனர். அமைச்சர் சம்பத் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியிலும் இவர்கள் பங்கேற்க மாட்டார்கள். சட்டசபையில் அமைச்சர் சம்பத் பேச்சைப் புறக்கணித்து இவர்கள் வெளியேறும் அளவுக்கு கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில் உள்ளது. இவர்களின் அதிகாரச் சண்டையால் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் முடங்கிவிட்டதாகப் புகார் வாசிக்கப்படுகிறது. கடலூருக்குக் கடமை ஆற்றியிருக்கிறாரா அருண்மொழித்தேவன்?
திட்டக்குடி நகர தி.மு.க செயலாளர் பாலகுரு, ‘‘எம்.பி., மிகவும் பின்தங்கிய பகுதியைச் சேர்ந்தவர். நிறைய நல்லது செய்வார் என ரொம்பவே நம்பினோம். ஆனால், ஏமாற்றிவிட்டார். திட்டக்குடி பேருந்து நிலையம் பள்ளத்தில் கட்டப்பட்டிருப்பதால், மழைக்காலத்தில் இடுப்பளவு தண்ணீரில் தத்தளிக்கும். பேருந்து நிலையம் இடிந்துவிழும் அபாயத்தில் இருக்கிறது. மக்களைப் போலவே எம்.பி-யும் அதை வேடிக்கைதான் பார்க்கிறார். திட்டக்குடி பைபாஸ் சாலை, பாதாளச் சாக்கடைத் திட்டம் என ஆக்கப்பணிகள் எதையும் அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தொகுதி முழுக்க பல இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைத்து, அதில் பெரிய எழுத்தில் தன் பெயரைப் போட்டுக்கொண்டார். இதுமட்டுமே சாதனையாகிவிடுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

‘‘விவசாயிகளுக்குப் பெரிதும் பலன்தரும் வகையில் வெலிங்டன் நீர்த்தேக்கத்துக்கு ஆத்தூரிலிருந்து தண்ணீர் கொண்டுவர எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் ரூ.92 கோடியில் திட்ட அறிக்கை தயாரித்தார். பல ஆண்டுகளாக அது நிறைவேற்றப்படவில்லை. சமீபத்தில்கூட சுமார் ரூ.7 கோடியில் வெலிங்டன் நீர்த்தேக்கத்தைச் சீரமைத்ததாகச் சொன்னார்கள். அதுவும் முழுமை பெறவில்லை. இங்கு, விவசாயிகளின் முக்கியப் பயிர் கரும்புதான். கரும்புக்கு அரசு அறிவித்த விலையைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆலைகள் வழங்கவில்லை. அதைப் பெற்றுத்தர எம்.பி-யிடம் வலியுறுத்தியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார் வெலிங்டன் நீர்த்தேக்கப் பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் சோமசுந்தரம்.
திட்டக்குடி அருகே போத்திரமங்களம்தான் எம்.பி தத்தெடுத்த கிராமம். அந்த ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, ‘‘கட்சிக்காரனாக இருந்தாலும் சொல்கிறேன். ஹைமாஸ் லைட் ஒண்ணு போட்டாங்க. சில மாதங்கள் மட்டுமே எரிஞ்சது. இப்போ அது பழுதாகித் தொங்குது. புதிதாகக் கட்ட ஆரம்பித்த சத்துணவுக் கூடம் அரைகுறையா நிக்குது. இடுகாடு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முழுசா முடியல. தேர்தலுக்கு ஓட்டுக் கேட்டு வந்த எம்.பி., பிறகு ஒருமுறை மட்டும் ஊருக்குள் தலைகாட்டினார். அவ்வளவுதான்’’ என்றார்.
‘‘கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவரக் கடந்த தி.மு.க ஆட்சியில் நிதி ஒதுக்கினார்கள். அந்த மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வந்திருக்கலாம். விருத்தாசலத்தில் அரசுக்குச் சொந்தமான சூரியகாந்தி எண்ணெய் பிழியும் ஆலை இயங்கி வந்தது. அந்த ஆலை மூடப்பட்டு, அதிலுள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் பாழாகி வருகின்றன. அந்த ஆலையை இயங்கச் செய்திருக்கலாம். அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் கற்குழாய் தொழிற்சாலையை மேம்படுத்தியிருக்கலாம். வெள்ளாற்றுத் தண்ணீரைத் தேக்கத் தடுப்பணைகள் கட்டியிருக்கலாம். இவற்றில் ஒன்றில்கூட எம்.பி கவனம் செலுத்தவில்லை’’ என்கிறார் விருத்தாசலம் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன்.
பண்ருட்டியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர் அசோகனிடம் பேசினோம். “வெங்கரும்பூரில் எம்.பி-யின் மாமனார் செல்வராஜ், அரசுக்குச் சொந்தமான புளிய மரத்தையும், மின் கம்பத்தையும் தனது வீட்டு காம்பவுண்டுச் சுவருக்குள் வைத்துக் கட்டியுள்ளார். இதைக் கண்டித்து எங்கள் கட்சி சார்பில் இரு முறை போராட்டம் நடத்திவிட்டோம். நடவடிக்கை இல்லை. திட்டக்குடி கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார் சத்தியன் நடவடிக்கை எடுத்தார். எம்.பி., தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை இடமாற்றம் செய்துவிட்டார். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை. சாதாரணப் பிரச்னைகளுக்கு வரும் நோயாளிகளைக்கூட விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். மணிமுத்தாறில் கதவணை கட்ட விவசாயிகள் கொடுத்த கோரிக்கை கிடப்பில் இருக்கிறது’’ என்றார் வருத்தமாக.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடர்பாக நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் பேசினார். ‘‘இங்கு பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரிப் பல்லாண்டு காலமாகப் போராடி வருகிறோம். 45 நாள்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தபோது, ‘ஒப்பந்தத் தொழிலாளர்களைப் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று 2013-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை வெறும் 234 பேரைத்தான் பணி நிரந்தரம் செய்துள்ளனர். மற்றவர்களையும் பணி நிரந்தரம் செய்வதற்கு எம்.பி உதவி செய்யவில்லை’’ என்றார்.
கடந்த தேர்தலில் அருண்மொழித்தேவனை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற தே.மு.தி.க வேட்பாளர் ஜெய்சங்கரிடம் பேசினோம். ‘‘கடலூரை ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆக்க முயற்சி செய்திருக்கலாம். கடலூர் சிப்காட் பகுதியில் ரசாயனத் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். நிலக்கரி சுரங்கத்தில் ராட்சதக் குழாய்கள் மூலம் நிறையத் தண்ணீர் எடுப்பதால், நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே போகிறது. இதற்கெல்லாம் எம்.பி தீர்வு தேடவில்லை’’ என்றார்.
‘‘கடலூருக்குக் கடல்சார்ந்த திட்டங்கள் எதையும் கொண்டுவர எம்.பி முயற்சி செய்யவில்லை. வடலூரில் வள்ளலார் சத்திய ஞான சபைக்குச் சொந்தமாக நிறைய இடம் உள்ளது. இங்கு திருமண மண்டபம், தங்கும் விடுதி போன்றவை கட்டினால் பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். வடலூரில் 11 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசனம் தருகிற ஐய்யன் ஏரி வறண்டு கிடக்கிறது. இது ஒன்று போதும், தொகுதியின் அவலத்தைக் காட்ட’’ என்றார் வடலூர் திராவிடர் கழக நகரத் தலைவர் இராவணன்.
தி.மு.க முன்னாள் அமைச்சரும், குறிஞ்சிப்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ‘‘இந்தத் தொகுதியில் ஒரு எம்.பி இருக்கிறாரா, இல்லையா என்பதே மக்களுக்குத் தெரியாது. தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வதுதான் எம்.பி-யின் ஒரே செயல்திட்டம். அதைத் தொய்வில்லாமல் செய்து வருகிறார்’’ என்றார். இதே கருத்தைத்தான் பா.ம.க மாநிலத் துணைப் பொதுச் செயலாளரான தாமரைக்கண்ணனும் தெரிவித்தார். ‘‘பல இடங்களில் சவுடு மண் குவாரிகள் அமைத்துச் சம்பாதிக்கிறார். சிப்காட்டில் உள்ள கம்பெனிகளுக்கு இடங்களை வாங்கி, விற்கிறார்” என்றார்.
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நிஜாமுதீன், “சில ரயில்கள் திருப்பாதிரிப்புலியூரில் நின்றுபோக எம்.பி நடவடிக்கை எடுத்தார். தூய அன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படிக்கிறார்கள். அவர்கள் பாரதியார் சாலையைக் கடக்கும்போது விபத்துகள் நடந்தன. அதைத் தடுக்க ரூ.1.20 கோடியில் நடைமேடை மேம்பாலம் அமைத்துத் தந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்க அதிக நிதி ஒதுக்கியிருக்கிறார். ஆனால், எம்.பி-யை மக்கள் சந்திக்கவோ, மனு கொடுக்கவோ கடலூரில் அலுவலகம் இல்லை. அவரைச் சந்திக்க, தூரத்திலுள்ள திட்டக்குடிக்குச் செல்ல வேண்டும். இது பொதுமக்களுக்குப் பெரும் சிரமமாக இருக்கிறது” என்றார்.
குற்றச்சாட்டுகளுக்கு அருண்மொழித் தேவனின் பதில் என்ன? “தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக எதையும் சொல்லவில்லை. பிரசாரத்துக்குப் போகும்போது, அங்குள்ள பிரச்னையைத் தெரிந்துகொண்டு அதை நிறைவேற்றுவதாகச் சொன்னோம். எம்.பி தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து குடிநீர்த் திட்டம், பள்ளிக் கட்டடம், நவீன நிழற்குடைகள், சாலை வசதிகள் என நிறைவேற்றியுள்ளேன். கடலூர்-சேலம் சாலையை அகலப்படுத்தியுள்ளேன். வெள்ளாற்றில் ரூ.8 கோடியில் கதவணை, பெண்ணையாற்றில் தடுப்பணை, மணிமுத்தாற்றின் குறுக்கே இலக்கியனூரில் பாலம், வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் ரூ.6.5 கோடியில் கரைகளைப் பலப்படுத்தும் பணி, திட்டக்குடியில் ரூ.22 கோடியில் குடிநீர்த் திட்டம், விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை அகலப்படுத்தும் திட்டம் செயல்படுத்தியுள்ளேன். நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். ஒவ்வோர் ஆண்டும் 17 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் அளித்திருக்கிறேன். நான் தத்தெடுத்த கிராமமான போத்திரமங்களத்தில் 100 சதவிகிதம் அனைத்துப் பணிகளையும் செய்துள்ளேன். ‘வேலை வாங்கித் தருகிறேன்’, ‘ட்ரான்ஸ்ஃபர் வாங்கித் தருகிறேன்’ என்று ஒருவரிடம் ஒரு பைசா வாங்கியதில்லை. அரசியலில் ஒரு குறிக்கோளுடன் செயல்பட்டுவருபவன் நான்” என்றார்.
உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/www.vikatan.com/special/mpsreportcard/#innerlink என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
- மு.இராகவன், ஜி.சதாசிவம்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி



எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?
திட்டக்குடியில் உள்ள தனது வீட்டின் முன் பகுதியையே அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார் அருண்மொழித்தேவன். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நீண்டகாலமாகப் பணிபுரியும் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டி எம்.பி-யிடம் மனு கொடுத்துள்ளார் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடேசன். ‘‘இதுபற்றி ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். மீண்டும் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்’’ என எம்.பி பதிலளித்திருக்கிறார்.
நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த சிவகங்கை என்பவரின் மனைவி மல்லிகா, சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்காக பிரதமர் நிதியுதவி வேண்டி மனு கொடுத்தார். எம்.பி சார்பில் மல்லிகாவை நேரில் சந்தித்த அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், ‘‘எம்.பி விரைவில் பிரதமர் நிதியுதவி பெற்றுத்தருவார்’’ என்று கூறியிருக்கிறார்.
எம்.பி எப்படி?
கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியிருக்கும் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 697 பேரைச் சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:

