Published:Updated:

``ரிங் மாஸ்டர்களாக இருக்காதீர்கள்!”- துணைவேந்தர்களுக்கு கிரண் பேடி அறிவுரை

``ரிங் மாஸ்டர்களாக இருக்காதீர்கள்!”- துணைவேந்தர்களுக்கு கிரண் பேடி அறிவுரை
``ரிங் மாஸ்டர்களாக இருக்காதீர்கள்!”- துணைவேந்தர்களுக்கு கிரண் பேடி அறிவுரை

``ரிங் மாஸ்டர்களாக இருக்காதீர்கள்” என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் கிரண் பேடி அறிவுரை வழங்கினார்.

அகில இந்தியப் பல்கலைக்கழக சங்கம் சார்பில் தென் மண்டல அளவிலான துணைவேந்தர்கள் மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, ``துணைவேந்தர்களின் பணி என்பது சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரக்கூடியது.

எதிர்கால இந்தியாவைக் கட்டமைக்கக்கூடிய இளைஞர்களின் சக்தி உங்களிடம்தான் இருக்கிறது. இந்திய அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆயிரம் பல்கலைக்கழகங்களின் கீழ் 36 மில்லியன் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். அந்த இளைஞர்களை ஆக்கபூர்வமான, சிறந்த குடிமகனாக மாற்ற உங்களால் மட்டுமே முடியும். வெறும் கல்வியைப் போதிப்பது மட்டுமே உங்கள்  பணி கிடையாது. இன்றைய சூழலுக்குத் தேவையான தூய்மைப் பணி, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மரம்  நடுதல் உள்ளிட்ட சமூக சேவைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது அவசியம்.

துணைவேந்தர்கள் வெறும் ரிங் மாஸ்டர்களாக இல்லாமல் அவர்களுக்கு நல்ல அறிவை போதிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். திகார் சிறைச்சாலையில் நான் பணியாற்றியபோது ஆங்காங்கே புகார்ப்  பெட்டிகளை வைத்தேன். அதில் விழும் மனுக்களை வைத்து அவர்களின் குறைகளையும், தேவைகளையும் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. எந்தவித நிதிகளும் இல்லாமல் சிறைச்சாலையை கல்விக்கூடமாக மாற்றிக்காட்டினேன்.

என்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காக இங்கே இதைச் சொல்லவில்லை. கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்களில் ஆலோசனை மற்றும் புகார்ப் பெட்டிகளை வையுங்கள். அப்போதுதான் மாணவர்களுடன் நெருங்கிப்பழக முடியும். வேலைக்கான கல்வியை மட்டும் அவர்களுக்கு அளித்தால் எதிர்காலத்தில் பிரச்னைகளைத்தான் சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களை சேவை மனப்பான்மை உள்ளவர்களாக உருவாக்கினால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்” என்றார்.