Published:Updated:

`ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க நினைத்தார் ஓ.பி.எஸ்!' - தம்பி நீக்கத்துக்காக நடந்த 12 மணி நேர நாடகம்

`பழைய நன்றிக்கடனுக்காக தனக்குப் பதவி கொடுப்பார் பன்னீர்' எனவும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் செல்லமுத்து. ராஜாவுக்கு ஆவின் சேர்மன் பதவி கொடுக்கப்பட இருப்பதை அறிந்தவர், `அவருக்குப் பதவி கொடுத்தால் நான் கட்சியை விட்டுப் போய்விடுவேன்' என எச்சரித்தார்.

`ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க நினைத்தார் ஓ.பி.எஸ்!' - தம்பி நீக்கத்துக்காக நடந்த 12 மணி நேர நாடகம்
`ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க நினைத்தார் ஓ.பி.எஸ்!' - தம்பி நீக்கத்துக்காக நடந்த 12 மணி நேர நாடகம்

`கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் வகையிலும் நடந்து கொண்டதாலும் பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஓ.ராஜா, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்' - நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்ட இந்த அறிவிப்பு இது. கழகத்தின் இந்த அறிவிப்பு, தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர் மத்தியில் எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. `ஓ.பி.எஸ்-ஸின் நாடகங்களில் இதுவும் ஒன்று' எனக் கொதிக்கின்றனர் அ.தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகள். 

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவின் நீண்டநாள் கனவு, மதுரை மாவட்ட ஆவின் சேர்மன் ஆக வேண்டும் என்பது. இதே பதவியைப் பெறுவதற்காக தேனி மாவட்டத்தில் கட்சியின் சீனியரும் மாவட்டப் பொருளாளருமான செல்லமுத்துவும் முயற்சி செய்து கொண்டிருந்தார். இருப்பினும், ராஜாவின் செயல்பாடுகளை அறிந்துகொண்டதால் ஆவின் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. `தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும்' என நீதிமன்றமும் உத்தரவிட்டது. இறுதியில், ஆவின் தலைவர் பதவியைக் கைப்பற்றிவிட்டார் ராஜா. இதை செல்லமுத்து தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 11 மணியிலிருந்தே எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். ஒருகட்டத்தில், கட்சியைவிட்டே ராஜாவை நீக்க வேண்டும் என எடப்பாடி கூற, `அம்மா இருந்தபோது கூட ஓரம்கட்டித்தான் வைத்திருந்தார். உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமா?' எனக் கேட்டதாகத் தகவல் வெளியானது. இந்த விவாதம் மாலை நான்கரை மணியளவில் கட்சி அலுவலகத்திலும் நீடித்தது. இருப்பினும், `ராஜாவை நீக்கியே தீருவது என்ற அறிவிப்பு வெளியானது' என்கின்றனர் பன்னீர்செல்வம் தரப்பினர். 

`ராஜா விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது?' என அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``பன்னீர்செல்வம் குடும்பத்தில் நடக்கும் அனைத்து மோதல்களையும் வேடிக்கை பார்த்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, இடைக்கால முதல்வராக இருந்தார் பன்னீர்செல்வம். அப்போது கைலாசநாதர் கோயில் பூசாரி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். `என்னுடைய மரணத்துக்கு ராஜாதான் காரணம்' எனக் கைப்பட கடிதம் எழுதிவிட்டு இறந்தார் நாகமுத்து. இந்த விவகாரத்தில், ராஜாவிடம் இருந்த பெரியகுளம் சேர்மன் பதவியைப் பிடுங்கினார் ஜெயலலிதா. இதே காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மகனை பாசறையின் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தும் தூக்கினார்.

பன்னீர்செல்வத்தின் சம்பந்தி செல்லபாண்டியன் வகித்து வந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, அவரது மருமகன் காசிராஜன் வகித்து வந்த அரசு வழக்கறிஞர் பதவியும் பிடுங்கப்பட்டது. மகன், மருமகன், சம்பந்தி ஆகியோர் மீது எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையை பன்னீர்செல்வம் எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு இவர்கள் அனைவரும் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டார்கள். மகனை, பேரவை மாவட்டச் செயலாளராக ஆக்கிவிட்டார். அவரது சம்பந்தி மீண்டும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவிக்கு வந்துவிட்டார். `இவர்களுக்கெல்லாம் பதவி வாங்கிக் கொடுத்துவிட்டாய். எனக்கு சேர்மன் பதவி கொடுக்க முடியாதா?' எனச் சண்டை போட்டார் ராஜா. 

இதே பதவிக்கு தேனி மாவட்டப் பொருளாளர் செல்லமுத்துவும் ஆசைப்பட்டார். அவர் கட்சியின் சீனியராகவும் இருக்கிறார். பன்னீர்செல்வத்துக்காக தன்னுடைய ஒன்றிய பதவியை விட்டுக் கொடுத்தவர் செல்லமுத்து. `பழைய நன்றிக்கடனுக்காக தனக்குப் பதவி கொடுப்பார் பன்னீர்' எனவும் எதிர்பார்த்துக் காத்திருந்தார் செல்லமுத்து. ராஜாவுக்கு ஆவின் சேர்மன் பதவி கொடுக்கப்பட இருப்பதை அறிந்தவர், `அவருக்குப் பதவி கொடுத்தால் நான் கட்சியை விட்டுப் போய்விடுவேன்' என எச்சரித்தார். `இந்த அதிருப்தியில் செல்லமுத்து கட்சியை விட்டுப் போய்விட்டால், தேனி மாவட்டத்தில் பன்னீர்செல்வத்துக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும்' எனவும் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியும். அதனால்தான் இந்த மோதல்களுக்கு எதிராக அவர் எதுவும் செய்யவில்லை.

நேற்று காலைதான் ஆவின் தலைவர் தேர்தலுக்கான நாமினேஷன் நடந்தது. அரசு நினைத்திருந்தால் தேர்தல் அதிகாரியை விடுப்பில் போகச் சொல்லியிருக்க முடியும். தேர்தல் நடக்காமல் பார்த்திருக்க முடியும். `அனைத்தும் நடக்கட்டும்' என மௌனமாக வேடிக்கை பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. அவர் நினைத்தது போலவே, ஆவின் சேர்மனாகிவிட்டார் ராஜா. இனி இந்தப் பதவியிலிருந்து அவரை அவ்வளவு எளிதாக நீக்க முடியாது. 

செல்லமுத்துவின் கோபத்தை அறிந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ராஜாவை நீக்க வைத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இதன்மூலம், `செல்லமுத்துவின் கோபம் தணிந்துவிடும்' எனவும் அவர் கணக்குப் போட்டார். ஒரே நேரத்தில் தம்பிக்குப் பதவியும் கொடுத்துவிட்டு, செல்லமுத்து கோபத்தைத் தணிக்கவும் முயற்சி செய்திருக்கிறார் பன்னீர்செல்வம். இந்த விவகாரத்தில் அவரது சூழ்ச்சிதான் வெளிப்பட்டுவிட்டது. மாவட்டத்துக்குள்ளும் அவருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது. வெளிஉலகின் பார்வையில் கட்சிக்காக தன்னுடைய தம்பியையே நீக்கிவிட்டார் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டதாக அவர் நினைக்கிறார். தேனி மாவட்டத்தில் அவரது செல்வாக்கை உடைக்க நினைத்த எடப்பாடி பழனிசாமிதான், இந்த விவகாரத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்" என்றார் விரிவாக.