Published:Updated:

ஒரு லட்சம் பேரை தி.மு.க-வில் இணைக்க இலக்கு! - செந்தில் பாலாஜியின் விஸ்வரூபம்

ஒரு லட்சம் பேரை தி.மு.க-வில் இணைக்க இலக்கு! - செந்தில் பாலாஜியின் விஸ்வரூபம்
ஒரு லட்சம் பேரை தி.மு.க-வில் இணைக்க இலக்கு! - செந்தில் பாலாஜியின் விஸ்வரூபம்

தி.மு.க-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வரும் 27-ம் தேதி கரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் ஒரு லட்சம் பேரை தி.மு.க-வில் இணைக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இன்று அந்தப் பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்காக பந்தற்காலை நட்டு பூஜை செய்தார்.

இந்நிகழ்ச்சியில், தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ம.சின்னசாமி, செந்தில் பாலாஜி, கே.சி.பழனிசாமி, கரூர் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் கனகராஜ், கோல்டுபாட் ராஜா, பூவை ரமேஷ்பாபு உட்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தார். ஆனால், சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சிக்கி, தனது எம்.எல்.ஏ பதவியை இழந்தார். டி.டி.வி.தினகரனிடம், `உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்' என்று செந்தில் பாலாஜி தொடர்ந்து வலியுறுத்தி வந்தாராம். ஆனால், டி.டி.வி.தினகரன் அதற்குச் சம்மதிக்கவில்லை என்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், `அ.தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது' என்ற தகவல் கிளம்பியது. இதனால், தன் ஆதரவாளர்களைக் கடந்த வாரம் கூட்டிய செந்தில் பாலாஜி, தனது அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசித்தார்.

அதை வைத்து, 'செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சரும், தி.மு.க மாநில விவசாய அணி செயலாளருமான கரூர் சின்னசாமி மூலமாகத் தன் ஆதரவாளர்கள் 2,000 பேரோடு சென்னைக்குப் போய் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் ஐக்கியமானார். இரு தினங்களுக்கு முன்பு கரூர் வந்த அவர், மாவட்டம் முழுக்க உள்ள தி.மு.க நிர்வாகிகளைச் சந்தித்தார். இந்நிலையில், வரும் 27-ம் தேதி கரூர் ராயனூர் பெட்ரோல் பேங்குக்கு முன்பாக உள்ள திடலில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்தப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார். அந்த விழாவில் வைத்து கரூர் மாவட்ட அ.ம.மு.க-வினர், கொங்கு மண்டலத்தில் உள்ளவர்கள், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பா.ம.க கட்சியைச் சேர்ந்தவர்கள் என ஒரு லட்சம் பேரை தி.மு.க-வில் இணைக்கும் வகையில், பிரமாண்டமாகப் பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரம் சொல்கிறது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், இதுபோல் பிரமாண்டமாகப் பொதுக்கூட்டம் நடத்துவதில் முன்னோடியான திருச்சி கே.என்.நேருவை அழைத்து வந்தார் செந்தில் பாலாஜி. அவரை வைத்து வரும் 27-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் ராயனூர் பகுதியில் பந்தற்கால் நட்டு, தொடங்கி வைத்தார். இதனால், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தனக்கு அரசியல் நெருக்கடி கொடுத்து வரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பை ஆடிப்போகச் செய்யும்விதமாக இந்தப் பொதுக்கூட்டத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளாராம் செந்தில் பாலாஜி. "செந்தில் பாலாஜியின் விஸ்வரூபத்தை இனிமேல்தான் பார்ப்பீர்கள்" என்று கண்சிமிட்டுகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.