Published:Updated:

`நமக்காக, ஒரு ட்வீட்டாவது போட்டாரா மோடி?!'  - பா.ஜ.க செயல்பாட்டால் தகித்த எடப்பாடி பழனிசாமி

இடைக்கால நிவாரணமாக 353 கோடி ரூபாயை வழங்கியுள்ளனர். இதைத்தவிர இன்று வரை வேறு எந்தத் தொகையும் வழங்கப்படவில்லை. மத்திய குழு ஆய்வின் அடிப்படையில் நிவாரணம் வழங்கலாம். ஆனால் தாமதப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து விளக்கங்கள் கேட்கப்படுகின்றன.

`நமக்காக, ஒரு ட்வீட்டாவது போட்டாரா மோடி?!'  - பா.ஜ.க செயல்பாட்டால் தகித்த எடப்பாடி பழனிசாமி
`நமக்காக, ஒரு ட்வீட்டாவது போட்டாரா மோடி?!'  - பா.ஜ.க செயல்பாட்டால் தகித்த எடப்பாடி பழனிசாமி

ஜா புயல் பாதிப்பை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. `புயலில் சீரமைப்புப் பணிகளில் நம்முடைய செயல்பாட்டைப் பாராட்டியிருக்க வேண்டும். அதைவிடுத்து நம் மீது பழிபோடுவதில் மத்திய அரசு குறியாக இருக்கிறது' எனப் பேசியிருக்கிறார் முதல்வர். 

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நானை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பின் சுவடுகள் இன்னும் மறையவில்லை. தமிழக அரசு தன்னால் முடிந்த அளவுக்கு நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தி வந்தாலும் மத்திய அரசிடமிருந்து போதுமான நிதி வரவில்லை. இதைப் பற்றி தன்னை சந்திக்க வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, `நாங்கள் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறோம். மத்திய அரசு உதவவில்லை' என வேதனையை வெளிப்படுத்தினார். கஜா பாதிப்பு குறித்து பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும், ``இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. கண்டனத்துக்குரியது. முதலமைச்சரே, பிரதமரை நேரில் சந்தித்து 15,000 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். இதில், முதல்கட்டமாக 5,000 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கலாம். ஆனால் 352 கோடி ரூபாய்தான் கொடுத்திருக்கிறார்கள். கேட்டது மலை அளவு, கிடைத்தது எலுமிச்சம் பழ அளவு. தமிழ்நாட்டுக்கான நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் மேற்கொள்வோம்" எனக் கூறியிருந்தார். 

இதே கருத்தை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் தெரிவித்திருக்கிறது தமிழக அரசு. கஜா புயல் பாதிப்புகளைச் சரிசெய்யும் பணியில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீது வாதிட்ட தமிழக அரசின் வழக்கறிஞர், ``மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக 353 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இதைத்தவிர இன்று வரை வேறு எந்தத் தொகையும் வழங்கப்படவில்லை. மத்திய குழு ஆய்வின் அடிப்படையில் நிவாரணம் வழங்கலாம். ஆனால், தாமதப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து விளக்கங்கள் கேட்கப்படுகின்றன" என்றார். இதற்குப் பதிலளித்த மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``மத்திய குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நிவாரணம் வழங்க இயலும். இதுதொடர்பாக தமிழக அரசு அளித்த விளக்கங்கள் நேற்று மதியம் (18-12-2018) மத்திய அரசுக்குக் கிடைத்தன" என்றார். 

``மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க அரசு நேரடியாக மோதத் தொடங்கியிருப்பதன் அறிகுறி இது" என விவரித்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``டெல்லியில் பிரதமரை சந்தித்துக் கோரிக்கை வைத்தபோது, கஜா புயல் பாதிப்பு குறித்த தன்னுடைய வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார் மோடி. கடந்த காலங்களைப் போல் இல்லாமல், மத்திய அரசு தாராளமாக நிதி ஒதுக்கும் எனவும் நம்பினார் முதல்வர். 15,000 ஆயிரம் கோடி ரூபாய் கணிசமான தொகையைக் கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. மாநில அரசை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. 

இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமியுடன் கட்சி நிர்வாகிகள் விவாதித்துள்ளனர். அப்போது பேசிய சீனியர் நிர்வாகி ஒருவர், ``புயல் பாதிப்பு குறித்து இதுவரையில் ஒரு ட்வீட்கூட மோடி போடவில்லை. அவர்கள் நம்முடன் கூட்டணி வைக்கத் தயாராக இல்லாதபோது, நாம் ஏன் அவர்களுடன் வலிந்து செல்ல வேண்டும். உண்மையில் அவர்களுக்கு நம்மோடு கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், கஜா புயலில் நம்முடைய செயல்பாட்டைப் பாராட்டியிருக்க வேண்டும். நம்மோடு அவர்கள் நின்றிருக்க வேண்டும். அதைவிடுத்து நம் மீது பழிபோடுவதில் குறியாக இருக்கிறார்கள். 

அதனால்தான், நீதிமன்றத்திலேயே மத்திய அரசு உதவி செய்யவில்லை என்பதைக் கூறிவிட்டோம். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் நிதியை முறையாக ரிலீஸ் செய்யவில்லை. மேக்கே தாட்டு உட்பட எந்த விஷயத்திலும் தமிழ்நாட்டுக்குச் சாதகமாக மத்திய அரசு இல்லை. இவர்களோடு நாம் சேர்ந்தாலும் மோசமான தோல்விதான் கிடைக்கும். எம்.பி-க்களும் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவிவல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. பா.ஜ.க-வோடு சேர்ந்தால், மக்களின் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடியாது எனப் பேசியுள்ளனர்' எனக் கூறியுள்ளனர். இந்தக் கருத்தை முதல்வரும் ஏற்றுக் கொண்டார். பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலையில்தான் எடப்பாடி பழனிசாமியும் இருக்கிறார். `நம்முடைய செயல்பாடுகளை நல்லபடியாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தால் போதும்' எனவும் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியிருக்கிறார்" என்றார் விரிவாக.