
“பேஸ்புக் பாருங்க... சாதனைகள் தெரியும்ங்க!’’
#EnnaSeitharMP
#MyMPsScore
செங்கோட்டையனால் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த சத்தியபாமா, தோப்பு வெங்கடாசலத்தின் அணியில் இணைந்து கோபிசெட்டிபாளையத்தில் கோலோச்சத் தொடங்கியிருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படாத 2013-ம் ஆண்டு காலகட்டம் அது. தோப்பு வெங்கடாசலத்தின் மூலம் சசிகலா தரப்பு தொடர்புகளை சத்தியபாமா இறுகப் பிடித்துக்கொண்டார். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தன்னை எம்.பி-யாக பாவித்துக்கொண்டு வலம்வந்தார் சத்தியபாமா. அது செங்கோட்டையனுக்குக் கோபத்தை ஏற்படுத்தியபோதும், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. சத்தியபாமாவுக்கு எம்.பி சீட் பெற்றுக்கொடுத்தது சசிகலா தரப்பு. தேர்தலிலும் கரையேறினார் சத்தியபாமா. திருப்பூர் தொகுதியை அவர் முன்னேற்றினாரா? தொகுதிக்குள் புகுந்து புறப்பட்டோம்.
“திருப்பூரின் தொகுதி வரையறையே தவறு. திருப்பூர் தெற்கு, வடக்கு என இரண்டே இரண்டு சட்டமன்றத் தொகுதிகள்தான் திருப்பூர் மாவட்டத்துக்குள் வருகின்றன. மீதமுள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பெருந்துறை தொகுதிகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ளன. ‘தொழிற்சாலைகளின் நலனில் அக்கறை எடுத்து அதற்காக நாடாளுமன்றத்தில் அழுத்தமாகக் குரல்கொடுக்க திருப்பூரைச் சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும். அப்போதுதான் தொழிற்சாலைகளைச் சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு செழிக்கும்’ என்று சொன்னோம். ‘அதெல்லாம் பிரச்னை இல்லை. நீங்கள் சத்தியபாமாவை வெற்றிபெற வைத்தால், அவர் கோபிசெட்டி பாளையத்திலிருந்து திருப்பூருக்கே குடிபெயர்ந்துவிடுவார். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்’ என்று ஓட்டு கேட்க வந்த ஒவ்வொருவரும் சொன்னார்கள். ஆனால், அது நடக்கவே இல்லை. எப்போதாவது நடக்கும் விழாக்களில் திருப்பூருக்குள் தலை காட்டுவதோடு சரி. நாங்கள்தான் 50 கிலோமீட்டர் பயணித்து கோபிக்குச் செல்ல வேண்டும். குடும்பச் சண்டையைச் சமாளிப்பதற்கே அவருக்கு நேரம் சரியாக இருந்ததே ஒழிய, தொகுதியின் பிரச்னைகளை அவர் கண்டுகொள்ளவே இல்லை’’ என்று கண்ணீர் வடிக்கிறார்கள் திருப்பூர்வாசிகள்.

திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(டீமா) தலைவர் முத்துரத்தினத்திடம் பேசினோம். ‘‘இங்கு ஏழு லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது பின்னலாடைத் தொழிற்சாலைகளே. ஏற்றுமதியில் ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாயும், உள்நாட்டு வியாபாரத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாயும் இதில் புழங்குகிறது. மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தால் பின்னலாடைத் தொழில் சரிவைச் சந்தித்துவருகிறது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற முடிவுகளால் தொழில் ஸ்தம்பித்து நிற்கிறது. இப்படியான சூழலில், எம்.பி சத்தியபாமா சிறு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. ரூ.50 கோடி பிசினஸ் செய்கிறவர்களுக்கு ஐந்து சதவிகித ஜி.எஸ்.டி-யும், வெறும் ரூ.50,000 பிசினஸ் செய்கிறவர்களுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி-யும் அமல்படுத்தப்பட்டதால் சிறு, குறு நிறுவனங்கள் முடங்கிப்போயின. இதை, மத்திய ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் எடுத்துச்சொல்லி உடனே சரி செய்திருக்க வேண்டிய எம்.பி., அதைச் செய்யவில்லை.
செயற்கையாக உருவாக்கப்பட்ட நூல் தட்டுப்பாட்டால் பின்னலாடைத் தொழில் சரிவை நோக்கித் தள்ளப்படுகிறது. கரும்பு, மஞ்சளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்வதைப்போல, நூலுக்கும் அரசே விலை நிர்ணயிக்க வேண்டும். அரசே பஞ்சைக் கொள்முதல்செய்து தொழிற்சாலைகளுக்கு முறையாக விநியோகம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருக்கிறது அதிலும் எம்.பி அக்கறை செலுத்தவில்லை. தொழில் நசிவால் திருப்பூரில் 15-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்’’ என்றார்.
சத்தியபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட அப்போதைய தே.மு.தி.க வேட்பாளரும் இப்போதைய தி.மு.க உறுப்பினருமான தினேஷிடம் பேசினோம். ‘‘திருப்பூரில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ வரம்புக்குள் வருகிறார்கள். மாதம்தோறும் ஒரு கோடி ரூபாய்வரை அவர்கள் இ.எஸ்.ஐ-க்கு பங்களிப்பு செய்கிறார்கள். ஆனால், இங்கு இ.எஸ்.ஐ மருத்துவமனை சரியான வசதிகளுடன் இல்லை. திருப்பூருக்கு வேலைதேடி வரும் வெளி மாவட்ட, வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை உருவாக்கித் தர வேண்டும். அந்தக் கோரிக்கையையும் எம்.பி கண்டுகொள்ளவில்லை. ‘இ-வே பில்’ என்று ஒரு நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. 10 கிலோ மீட்டரைத்தாண்டி எந்தச் சரக்கை ஏற்றிச் சென்றாலும் அதற்கு அரசுக்கு தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கும். இங்கு ஒரு கலந்தாலோசனைக் கூட்டத்துக்கு வந்திருந்த கேரள நிதி அமைச்சரிடம் இந்தப் பிரச்னையை தொழில் அமைப்பினர் சொல்ல, அவர் மத்திய அரசிடம் பேசி, ‘50 கிலோ மீட்டருக்கு மேல் சென்றால்தான் இ-வே கட்டணம்’ என்ற சிறப்பு அனுமதியை திருப்பூருக்கு வாங்கிக்கொடுத்துள்ளார். அப்படியெனில் திருப்பூர் தொகுதி மக்கள் வாக்களித்த எம்.பி என்ன செய்கிறார்?’’ என்று கேள்வி எழுப்பினார்.
‘நாளைய திருப்பூர்’ மக்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரபாண்டியன், “திருப்பூர் ரயில் நிலையத்தில் இரண்டே பிளாட்பாரங்கள்தான் உள்ளன. இதனால், சரக்கு பார்சல்களை ரயிலில் ஏற்ற சிரமம் உள்ளது. திருப்பூருக்கு நாள்தோறும் வெளிமாநில வியாபாரிகள், தொழிலாளர்கள் வருகிறார்கள். ஆனால், பல ரயில்கள் திருப்பூரில் நிறுத்தப்படுவது கிடையாது. ஈரோடு அல்லது கோவையில் இறங்கி, 50 கி.மீ பயணம் செய்து திருப்பூர் வர வேண்டும். இதற்கும் சத்தியபாமா எந்தத் தீர்வும் காணவில்லை. கேந்திரிய வித்யாலயா பள்ளியை திருப்பூருக்குக் கொண்டுவர அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை’’ என்கிறார்.
ஈரோடு மாவட்டம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் சுபி.தளபதி, “ஃபேஸ்புக்கில் போஸ்ட்கள் போட்டு லைக் வாங்குவதையே தன் பிரதான வேலை என்று எம்.பி நினைக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லும்படி எதையும் செய்துவிடவில்லை. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் அந்தியூர், பவானி, கோபி, பெருந்துறை எல்லாம் விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட பகுதிகள். பவானிசாகர் அணையிலிருந்து பவானி கூடுதுறை வரை ஏழு இடங்களில் தடுப்பணைகள் கட்டவேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கை. அதை நிறைவேற்றி யிருந்தால் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது எட்டு டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கலாம். ஆனால், எம்.பி அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை.
சித்தோடு - கோபி வழியாக மேட்டுப்பாளையம் வரையான நான்கு வழிச்சாலைத் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. அந்தியூர், பவானியில் உள்ள சர்க்கரை ஆலைகளில், விவசாயிகளுக்கு 100 கோடி ரூபாய் பாக்கிவைத்துள்ளனர். அதையும்
எம்.பி கேட்கவில்லை. ‘கோபிசெட்டிபாளையத்தின் நகராட்சிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். அதுவும் நடக்கவில்லை. கழிவுகள் தடப்பள்ளி கால்வாயில் கலக்கின்றன.
‘பவானியில் ஒருங்கிணைந்த சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத்தருவேன்’ என்றார். ஆனால், செய்யவில்லை. சேலம், பழனிக்கு அடுத்தபடியாக கோபியும் முக்கியமான பட்டுக்கூடு உற்பத்தி மையம். ஆனால், இங்கு அதற்கு விற்பனை மையம் கிடையாது. விற்பனைக்கு கர்நாடகத்துக்குதான் செல்ல வேண்டும். பட்டுக்கூடுக்கான மதிப்புக்கூட்டுதல் மற்றும் விற்பனை மையம் கோபிக்கு வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் கிடக்கிறது. இப்படி எம்.பி செய்யாத விஷயங்கள்தான் ஏராளம்’’ என்றார் வெறுமையாக.
நஞ்சகவுண்டன் பாளையம் என்கிற கிராமத்தை எம்.பி தத்தெடுத்துள்ளார். ஆனால், அதற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. “ஊரில் ஒரு ஹைமாஸ் லைட் அமைத்துள்ளார். வேறு எதையும் செய்யவில்லை” என்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த பழனிசாமி.
இதற்கெல்லாம் சத்தியபாமாவை சந்தித்து விளக்கம் கேட்டோம், “பொதுவாகவே நான் செய்ததை எப்போதும் வெளியில் சொல்ல மாட்டேன். எங்கேயும் என்னை முன்னிறுத்திக் கொள்வதும் இல்லை’’ என்றபடி ஆரம்பித்தவர், ‘‘திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு ஜி.எஸ்.டி-யால் ஏற்பட்ட பிரச்னைகள், விசைத்தறித் தொழில், பவானி ஜமக்காளத் தொழில், ஈ-வே பில் பிரச்னை உள்ளிட்டவைக்கு நான் என்னென்ன செய்திருக்கிறேன் என்பது என் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும். இ.எஸ்.ஐ மருத்துவமனை பற்றியும் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். மருத்துவமனைக்கு கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்ட நிலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது. எனவே, அதில் சிக்கல் உள்ளது.
கோவை - பெங்களூரு இடையே ‘உதய் ரயில்’ இயக்கப்படுவதில் என் பங்களிப்பும் இருக்கிறது. கோவையிலும் திருப்பூரிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம். கோவையிலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் வகையில் புதிய ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறேன். திருப்பூர் ரயில் நிலையத்தில் பார்சல்கள் வைப்பதில் நிலவும் பிரச்னைக்கு விரைவில் முடிவுகட்டப்படும். பட்ஜெட் கூட்டம், ‘ஜீரோ ஹவர்’ என கிடைத்த தருணங்களில் எல்லாம் கோபிசெட்டிபாளையம் - சத்தியமங்கலம் இடையிலான ரயில்வே திட்டம் தொடர்பாகப் பேசியிருக்கிறேன். கொடிவேரி சுற்றுலாத் தலத்துக்கு மட்டும் சுமார் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு வசதிகள் செய்துகொடுத்துள்ளேன். சித்தோடு - மேட்டுப்பாளையம் நான்குவழிச் சாலை திட்டத்துக்கான முயற்சிகள், தனியார் சர்க்கரை ஆலை பிரச்னை போன்றவற்றை எல்லாம் அமைச்சர் செங்கோட்டையன் கவனித்து வருகிறார். மக்கள் பணியை யார் செய்தால் என்ன? நாங்கள் இருவரும் ஒரே கட்சிதானே!
நான் தத்தெடுத்த கிராமத்துக்கு இரண்டு சாலைகள் போட்டுக்கொடுத்திருக்கிறேன். அங்கு பயன்படுத்தவே முடியாத நிலையில் இருந்த பொதுக் கழிப்பிடத்தைப் புதுப்பித்துக் கொடுத்துள்ளேன். புதிதாக எல்.இ.டி தெருவிளக்குகளை அமைத்துக்கொடுத்துள்ளேன். என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் துளியும் பொருட்படுத்தாமல், எம்.பி-யாக தொடர்ந்து கடமையாற்றியிருக்கிறேன்’’ என்றார் சத்தியபாமா.
உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
- எம்.புண்ணியமூர்த்தி, தி.ஜெயப்பிரகாஷ்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி


எப்படி இருக்கிறது எம்.பி ஆபீஸ்?
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டையே அலுவலகமாக மாற்றியிருக்கிறார் சத்தியபாமா எம்.பி. நாம் சென்றபோது அலுவலகம் பூட்டியிருந்தது. பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டோம். நாம் சென்ற ஆட்டோ டிரைவரின் போன் சிறிது நேரத்தில் அடித்தது. பதற்றமாக பேசிய ஆட்டோ டிரைவர், ஆட்டோவை உடனே நிறுத்திவிட்டார். ஆட்டோ நிற்கும் இடத்தை போனில் சொன்னார். அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த இடத்துக்கு பைக்கில் பறந்து வந்த ஒரு நபர், “எதற்காக போட்டோ எடுத்தீங்க... நீங்க யார்?’’ என விசாரித்தார். விவரத்தைச் சொன்னதும், ‘‘நான் எம்.பி மேடத்தின் டிரைவர். ஆபீஸை நான்தான் பாத்துக்கறேன். சாப்பிடப் போயிருந்தேன். வந்ததும் சி.சி.டி.வி-யில பார்த்தேன். யார் என்னன்னு புரியலை. நமக்குத் தெரிஞ்ச ஆட்டோ. அதான் அவருக்கு போன் போட்டு விசாரிச்சுட்டு வந்தேன். எம்.பி ஆபீஸுக்கு என்ன லெட்டர் வந்தாலும் நான் வாங்கி வெச்சிருவேன். மேடம் வந்து பார்த்துப்பாங்க. இப்போ மேடம் ஊரில் இல்லை’’ என்றார்.

எம்.பி எப்படி?
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியிருக்கும் பவானி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 600 பேரை சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:

