Published:Updated:

`சிதம்பரத்தில் திருமாவளவனை ஏன் தோற்கடிக்க முடிந்தது?!' - பா.ம.க கூட்டணி பேச்சால் மிரண்ட அ.தி.மு.க.

`தி.மு.க கூட்டணியில் இருப்பதாகச் சொல்லப்படும் சில கட்சிகள், தொகுதிப் பங்கீட்டின்போது வெளியேறுவதற்கான வாய்ப்பு உருவாகும். அந்தக் கட்சிகள் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குள் வந்து சேரும்' எனவும் கணக்குப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

`சிதம்பரத்தில் திருமாவளவனை ஏன் தோற்கடிக்க முடிந்தது?!' - பா.ம.க கூட்டணி பேச்சால் மிரண்ட அ.தி.மு.க.
`சிதம்பரத்தில் திருமாவளவனை ஏன் தோற்கடிக்க முடிந்தது?!' - பா.ம.க கூட்டணி பேச்சால் மிரண்ட அ.தி.மு.க.

டப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் நடக்கும் உரசல்கள் ஒருபுறம் இருந்தாலும், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டி பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர் கட்சிப் பொறுப்பாளர்கள். `எம்.பி தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம்' எனவும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர் சிட்டிங் எம்.பி-கள் சிலர். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கடந்த டிசம்பர் 11-ம் தேதி நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், `அம்மா இல்லாமல் நாம் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். ஒவ்வொரு பகுதியிலும் நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். கட்சியின் சீனியர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்டு மாவட்டச் செயலாளர்கள் செயல்பட வேண்டும். கட்சிக்காரர்களுக்கு உரியதை செய்து கொடுத்தால்தான், அவர்கள் மூலமாக மக்களை அணுக முடியும்' என்றெல்லாம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் பன்னீர்செல்வம். 

அ.தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூத் கமிட்டி பணிகளில் மா.செக்கள் ஆர்வம் காட்டி வந்தாலும், கூட்டணி தொடர்பாக கட்சித் தலைமை என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்வதிலும் எம்.பிக்கள் சிலர் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். தி.மு.க தலைமையிலான அணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க, ம.தி.மு.க, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஆனால், தி.மு.க தலைமையிலான அணி குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமியோ, `அவர்கள் (தி.மு.க) இன்னும் கூட்டணியை அமைக்கவில்லை' என்றார். அதாவது, `தி.மு.க கூட்டணியில் இருப்பதாகச் சொல்லப்படும் சில கட்சிகள், தொகுதிப் பங்கீட்டின்போது வெளியேறுவதற்கான வாய்ப்பு உருவாகும். அந்தக் கட்சிகள் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குள் வந்து சேரும்' எனவும் கணக்குப் போடுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 

தி.மு.க தலைமையில் அங்கம் வகிக்கும் கட்சிகளைத் தவிர, பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் தனியே நிற்கின்றன. `இவர்கள் யார் தலைமையில் அணி சேருவார்கள்?' என்ற கேள்வியும் வலம் வருகிறது. குறிப்பாக, `அ.தி.மு.க தலைமையிலான அணிக்குள் பா.ம.க வருவதற்கான சூழல் ஏற்பட்டு வருகிறது' எனப் பேசத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர். இப்படியொரு கூட்டணி பேச்சு நடைபெறுவதை அறிந்த சிட்டிங் எம்.பிக்கள் சிலர், எடப்பாடி பழனிசாமியிடமும் ஓ.பன்னீர்செல்வத்திடமும் சில விஷயங்களைக் கூறியுள்ளனர். அவர்கள் பேசும்போது, `நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம். பா.ஜ.க, பா.ம.க போன்ற கட்சிகளை நம்முடன் சேர்த்துக்கொண்டு சீட் கொடுத்தால், நமக்கே அது வினையாகிவிடும். பா.ஜ.க-வுடன் கூட்டுச் சேர்ந்தால் எங்கள் பகுதியில் உள்ள கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகள் எதுவும் வந்து சேராது. பா.ம.க-வுடன் சேர்ந்தால் அவர்கள் சமூகத்தின் வாக்குகள் எதுவும் அண்ணா தி.மு.க-வுக்கு வந்து சேராது. ராமதாஸையும் குருவையும் கைது செய்து, அட்டவணைப் பிரிவு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு வளையத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் ஜெயலலிதா. அதனால்தான் சிதம்பரத்தில் திருமாவளவனை நம்மால் தோற்கடிக்க முடிந்தது. 

இப்படிப்பட்ட சூழலில், கூட்டணிக்காக பா.ம.க-வினர் நம்மிடம் பேசுகிறார்கள் எனக் கட்சி நிர்வாகிகள் பேசுகின்றனர். அவர்கள் நமது கூட்டணிக்கு வர விரும்பினாலும், நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. பா.ம.க-வுக்கு எதிராக ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளால்தான் பல தொகுதிகளில் நம்மால் வெற்றி பெற முடிந்தது. அந்த வியூகத்தையே நாம் கையில் எடுப்போம். பா.ம.க-வைச் சேர்த்தால் கையில் இருக்கும் தொகுதிகளும் போய்விடும்' எனக் கூறியுள்ளனர். பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பிக்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து பேசிய நிர்வாகி ஒருவர், 

`மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தியில் 40 தொகுதிகளையும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அடித்துக்கொண்டு போய்விடும். அதுவே, பா.ஜ.க-வை எதிர்த்து நின்றால் நம்முடைய இமேஜ்தான் வளரும். நம்மை இதுவரை எதிர்த்து அறிக்கை வெளியிட்டு வரும் பா.ம.க-வை சேர்த்துக்கொண்டால், அந்தச் சமூக வாக்குகளும் நமக்கு வந்து சேராது. எஸ்.சி வாக்குகளும் நம்மை விட்டு வெளியேறிவிடும். அந்த வாக்குகள் தி.மு.கவுக்குப் போகப் போகிறதா அல்லது தினகரனுக்குப் போகப் போகிறதா என்பது தெரியாது. எனவே, கட்சியை பலப்படுத்த தனியே நிற்பதுதான் நல்லது. கூட்டணி தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தைகளையும் நாங்கள் விரும்பவில்லை. மீண்டும் சீட் கொடுங்கள், தனித்தே போட்டியிடுவோம்' என எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.