Published:Updated:

`ஐ.எஸ் அமைப்பை வீழ்த்திவிட்டோம்!' - ட்ரம்ப்பின் அறிவிப்பும் உலக நாடுகள் எழுப்பும் சந்தேகமும்

`ஐ.எஸ் அமைப்பை வீழ்த்திவிட்டோம்!' - ட்ரம்ப்பின் அறிவிப்பும் உலக நாடுகள் எழுப்பும் சந்தேகமும்
`ஐ.எஸ் அமைப்பை வீழ்த்திவிட்டோம்!' - ட்ரம்ப்பின் அறிவிப்பும் உலக நாடுகள் எழுப்பும் சந்தேகமும்

`சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுகிறோம்’ என்ற ட்ரம்ப்பின் அறிவிப்பு உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உத்தரவின்பேரில் 2015-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் சிரியாவில் கால்பதித்தன. அங்கு ஐ.எஸ் அமைப்புகளுக்கு எதிராகப் போரிட்டு வந்த உள்ளூர் குர்தீஷ் போராளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டன அமெரிக்க படைகள். குர்தீஷ் போராளிகள், அரபுப் படை, அமெரிக்கப் படை ஆகியவை இணைந்து சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியா ஜனநாயகப் படை என உருவாக்கிச் செயல்பட்டு வந்தனர். சிரியாவில் தற்போது 2,000 அமெரிக்கப் படைகள் உள்ளன. இன்றளவும் சிரியாவின் சில பகுதிகளில் தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது.


 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் `சிரியாவில் ஐ,எஸ்-ஸுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதால் அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுகிறோம்’ என்று அறிவிப்பு வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

இது தொடர்பாக ட்ரம்ப் பதிவிட்ட ட்வீட்கள் பின்வருமாறு...

“சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைத் தோற்கடித்துவிட்டோம். இது என் ராஜ்ஜியத்தில் நடந்துள்ளது. அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து வெளியேற உள்ளது. இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. நான் இதைக் கடந்த ஓராண்டாகவே கூறி வருகிறேன். ரஷ்யா, இரான், சிரியா ஆகிய நாடுகள்தான் ஐ.எஸ்-ஸின் உண்மையான எதிரிகள். அவர்களின் வேலையை நாங்கள் செய்துகொண்டு இருந்தோம். இப்போது நாங்கள் எங்கள் வீடு திரும்ப வேண்டிய நாள் வந்துவிட்டது. அமெரிக்கா மத்திய கிழக்கின் காவல்காரனாக இனி இருக்காது. அப்படியிருந்து எங்கள் வீரர்களை இழந்ததுதான் மிச்சம். மற்றவர்களைப் பாதுகாப்பதற்காக டிரில்லியன் கணக்கான டாலர்களை விரயம் செய்துவிட்டோம். ஆனாலும், எங்கள் செயல்பாடுகளை ஒருவரும் பாராட்டவில்லை. அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைச் சிரியா, ரஷ்யா, இரான் உள்ளிட்ட நாடுகள் விரும்பவில்லை என்பதை அறிவேன். காரணம் உலகிலேயே சக்தி வாய்ந்த ராணுவத்தை நான் உருவாக்கி இருக்கிறேன். ஐ.எஸ் எங்களை வீழ்த்த நினைத்தது. நாங்கள் அதைச் சுக்குநூறாக்கிவிட்டோம். எங்கள் அமெரிக்க இளம் வீரர்கள் நாடு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது” என இவ்வாறு ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.  


 

ட்ரம்ப்பின் முடிவுக்கு செனட் சபையில் சிலர் ஆதரவு தெரிவித்திருந்தனர். அவர்களின் கருத்தையும் ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். `சிரியாவில் அமெரிக்காவின் வெற்றியைக் கேட்கும்போது அமெரிக்க அதிபரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்’ என்று செனட் உறுப்பினர் ராண்ட் பால் தெரிவித்துள்ளார். `ட்ரம்ப்பின் முடிவை நான் ஆமோதிக்கிறேன். இந்த முடிவு ஒபாமாவின் முடிவுக்கு முரணானது’ என்று செனட்டர் மைக் லீ குறிப்பிட்டுள்ளார். ஆனால், உலகம் முழுவதும் பல்வேறு தரப்புகளில் இருந்து ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. காரணம் இன்றளவும் சிரியாவின் சில பகுதிகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  

பிரிட்டன் அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், `சிரியாவில் ஐ.எஸ் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை. ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை அமெரிக்கா, குர்தீஷ் கூட்டுப்படை கைப்பற்றியிருந்தாலும், ஐ.எஸ் அமைப்பிடம் இருந்து அச்சுறுத்தல் இருக்கும். சிரியாவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் அமெரிக்கா கூறுவதுபோல் கூட்டுப்படை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அடையாளம் அல்ல. இதற்குப் பிறகும்  ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான கூட்டுப்படைகள் இணைந்து செயல்பட வேண்டும்’ எச்சரித்துள்ளார்.


 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதுகுறித்து ஊடகங்கள் மத்தியில் பேசுகையில் `சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது அமெரிக்காவின் தனிப்பட்ட உரிமை. ஆனால், ஒரு சந்தேகம். அமெரிக்கா 17 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் படைகளை நிலைநிறுத்தியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஆப்கானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறோம் என்று அறிவித்து வருகிறது. ஆனால், நடந்தபாடில்லை. எனவே, சிரியாவிலும் அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான அறிகுறிகள் இல்லை’ என்று விமர்சித்திருக்கிறார். 
‘அமெரிக்கா சிரியாவில் வேறு வழியில் செல்வாக்கு செலுத்தத் திட்டமிட்டு வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது’ என்று இஸ்ரேல் சந்தேகித்துள்ளது. 


 

பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ட்விட்டர் பதிவில், `ட்ரம்ப் முடிவில் எனக்கு கருத்து வேறுபாடுள்ளது. சிரியாவில்  ஐஎ.ஸ் அமைப்பு முழுமையாக வீழ்த்தப்படவில்லை’ என்று கூறியுள்ளார். 

சிரியாவை பொறுத்தவரை அங்கு உள்நாட்டுப் போர் நடப்பது ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்கா, ரஷ்யா, இரான் உள்ளிட்ட உலக நாடுகள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொள்ளும் மைதானமாகவும் சிரியா பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் திடீர் முடிவு அனைத்துத் திசைகளிலும் அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளது. இந்த அரசியல் நாடகங்களுக்கு மத்தியில் சிரியாவுக்கு விடிவுகாலம் வருமா என்ற ஏக்கத்தில் உலகம் முழுவதும் அகதிகளாக சிதறிக் கிடக்கும் மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.