Published:Updated:

ராஜினாமா கடிதம்; டெல்லி விசாரணை! - குட்கா ஊழலில் விஜயபாஸ்கருக்கு முற்றும் நெருக்கடி

ராஜினாமா கடிதம்; டெல்லி விசாரணை! - குட்கா ஊழலில் விஜயபாஸ்கருக்கு முற்றும் நெருக்கடி
ராஜினாமா கடிதம்; டெல்லி விசாரணை! - குட்கா ஊழலில் விஜயபாஸ்கருக்கு முற்றும் நெருக்கடி

குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாவார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

விஜயபாஸ்கரை போட்டுக்கொடுத்தாரா சசிகலா? 

பெங்களூரு சிறைச்சாலையில் இருக்கும் சசிகலாவிடம் கடந்தவாரம் ஐ.டி (மத்திய வருவாய்துறை) அதிகாரிகள் இணை கமிஷனர் வீரராகவராவ் தலைமையிலான டீம் இரண்டு நாள்கள் விசாரணை நடத்தினர். அடுத்து, சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி இரண்டு நாள்கள் விசாரணை நடத்தினர். இருவரிடமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுதிக்கொடுத்து, பதிலைக் கேட்டுப்பெற்றனர். அவர்களின் பேச்சுகளை வீடியோ பதிவு செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை பதிவு செய்து அவர்களிடமே கையெழுத்தும் பெற்றுக்கொண்டனர. இந்த இரண்டு விசாரணைகளை வெளியில் இருந்து பார்த்தால், தொடர்பில்லாதது போல் காட்சியளித்தாலும் இந்த இரண்டு விசாரணைகளுக்கும் நிறைய தொடர்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். 

விஜயபாஸ்கரை நெருக்கும் க்ளைமாக்ஸ்

`அமைச்சர் விஜயபாஸ்கர், குட்கா ஊழல் விவகாரம் தொடர்பான சி.பி.ஐ விசாரணையைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல், ராஜினமா கடிதத்தை முதல்வர் பழனிசாமியிடம் கொடுத்துவிட்டார். கடிதத்தை வாங்கி வைத்திருக்கும் எடப்பாடி, எந்த நேரமும் அதை கவர்னருக்கு அனுப்புவார் எனகிறார்கள் ஒரு தரப்பினர். விஜயபாஸ்கர் அடுத்தகட்ட விசாரணையை டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்தான் எதிர்கொள்ளவேண்டிவரும். அவரை அப்படியே பிடித்து வைக்கும் திட்டத்துடன் சி.பி.ஐ. அதிகாரிகள் காய் நகர்த்தி வருகிறார்கள் என்கிறது இன்னொரு தரப்பினர். அ.தி.மு.க. வட்டாரத்தில் இவைதான் லேட்டஸ்ட் டாக்.

வாக்கிங் போகிற வழியில் தினகரனிடம் விஜயபாஸ்கர் ரகசியமாகப் பேசியதை முன்கூட்டியே அறிந்த எடப்பாடி பழனிசாமி, தனக்கு வேண்டிய அமைச்சரவை சகாக்களிடம், `அவர் விஷயத்தில் உஷாராக இருங்கள்’ என்று எச்சரித்தாராம். அடுத்த சில நாள்களில், தினகரனே சந்திப்பை போட்டு உடைத்துவிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு, விஜயபாஸ்கர் மீது பலவித புகார்கள் எழுந்தும், ஏனோ எடப்பாடி பழனிசாமி மௌனமாகவே இருக்கிறார். மத்திய அரசு அழுத்தம் கொடுக்கட்டும். கவர்னர் தலையிடுவார். அந்தக் கட்டத்தில் விஜயபாஸ்கரிடம், `எல்லாம் தலைக்கு மேல் போய்விட்டது. ராஜினமாவை தவிர வேறு வழியில்லை’ என்று சொல்லி கைவிரிக்கும் மூடில் எடப்பாடி இருக்கிறாராம். 

அ.தி.மு.கவில் உள்ள விஜயபாஸ்கர் எதிர் கோஷ்டியினரிடம் இதுபற்றி கேட்டபோது, `குட்கா முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. அதிகாரிகள் விஜயபாஸ்கரிடம் இந்த முறை விசாரித்தது சம்பிரதாயமானது. ஆனால், கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு வகையில் கேஷுவலாக பேசியிருக்கிறார்கள். நாங்கள் வெறும் அம்புதான். எங்களை எய்தவர்கள் சசிகலா வகையறாக்கள்தான். நாங்கள் வாங்கியதெல்லாம் அவர்களிடம்தானே’ என்றாராம் விஜயபாஸ்கர். இதை கேள்வியாக சசிகலாவிடம் சுட்டிக்காட்டி ஐ.டி. அதி அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். அதைக்கேட்ட சசிகலா அதிர்ந்து போய்விட்டாராம். 

விஜயபாஸ்கர் பற்றி சசிகலா என்ன சொன்னார்?

சசிகலா கோஷ்டியினரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது, `விஜயபாஸ்கர் சொன்னதெல்லாம் பொய்’ என்று சொன்னாராம் சசிகலா. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, சில விவகாரங்களில் விஜயபாஸ்கர் நடந்துகொண்டதை உளவுத்துறை மூலம் கேள்விப்பட்டு கடும் அதிருப்தியில் இருந்தராம். அவை எந்தெந்த விஷயங்கள் என்பதை ஐ.டி அதிகாரிகளிடம் சசிகலா சொல்லிவிட்டாராம். குட்கா ஊழல் தொடர்பான முக்கியமான கடிதம் ஒன்று தலைமைச் செயலகத்தில் காணாமல் போனதே?.. அதை ஐ.டி. ரெய்டில் உங்கள் அறையில் இருந்து கைப்பற்றினோம். அது எப்படி உங்கள் அறைக்கு வந்தது?. விஜயபாஸ்கரை காப்பாற்றுவதற்காக அதை மறைத்து வைத்திருந்தீரா?.. அல்லது, டி.ஜி.பியாக டி.கே.ராஜேந்திரனை நியமனம் செய்ய அது இடைஞ்சலாக இருக்கும் எனறு நினைத்து பதுக்கி வைத்திருந்தீரா என்று கேட்டார்களாம்.

அதற்கு சசிகலா, `இது முக்கியமான ஆவணம். பத்திரமாக வை’ எனறு அக்கா (ஜெயலலிதா) சொல்லிக்கொடுப்பார். அதில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்கமாட்டேன். பத்திரப்படுத்தி வைப்பேன். அப்படி அவர் கொடுத்ததில் ஒன்றுதான் அந்த கடிதமாக இருக்கும்’ என்றாராம். அதை அப்படியே பதிவு செய்துகொண்டனர் ஐ.டி. அதிகாரிகள்.

விஜயபாஸ்கர் பற்றி சசிகலா சொன்ன விவகாரங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து வருகிறது ஐ.டி. அதிகாரிகள் டீம். அதுதொடர்பான சில ரகசியங்களை விசாரித்து கேள்விகளாக தொகுத்து வருகிறார்கள். அவைகளை கையில் வைத்துக்கொண்டு டெல்லிக்கு விஜயபாஸ்கரை அழைத்து விசாரணை நடத்தும் திட்டத்தில் இருக்கிறார்கள் ஐ.டி. அதிகாரிகள்.