Published:Updated:

“விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தான் தூண்டுகிறார்களா!” - முத்தரசன் காட்டம்

“விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தான் தூண்டுகிறார்களா!” - முத்தரசன் காட்டம்
“விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தான் தூண்டுகிறார்களா!” - முத்தரசன் காட்டம்

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் நடைபெற்றுவரும் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று நேரில் சென்று ஆதரவளித்துப் பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக ஈரோட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய முத்தரசன், “ விவசாய விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதால் சிறு, குறு விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையைப் பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி, மிரட்டி ஒரு சர்வாதிகார நாட்டில் என்னவெல்லாம் நடக்குமோ அதைப்போன்ற காரியங்கள் இங்கு உயர்மின் கோபுரம் அமைப்பதில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பலமுறை இதுகுறித்து அரசிடம் முறையிட்டும் பயனளிக்காத காரணத்தினால், தற்போது பல்வேறு இடங்களில் காத்திருக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து விவசாயிகள் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இதில் அரசியல் கிடையாது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் தான் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறதே தவிர, அமைச்சர்கள் குறிப்பிடுவதைப் போல, எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டு இந்த போராட்டம் நடைபெறுகிறது என்று சொல்லி, அந்த போராட்டத்தை இழிவுப்படுத்துவதை அமைச்சர்கள் கைவிட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறது அதானி நிறுவனம். அங்கு விவசாயிகளிடம் இருந்து நிலங்களை ஏஜெண்டுகள் மூலமாக அடிமாட்டு விலைக்குப் பறிமுதல் செய்துள்ளனர். அங்குத் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தைப் பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, இந்த மாவட்ட விவசாயிகளை நிலத்தை விட்டு விரட்டியடிக்கும் முறையில் மின்கோபுரங்களை அமைத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த முயற்சியை அரசு கைவிட்டு, கேபிள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயமும், நிர்பந்தமும் ஏற்படும். கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும் போது, ஏன் தமிழகத்தில் செய்ய முடியாது.ஏது தடையாக உள்ளது. யார் தடையாக இருக்கிறார்கள்.தமிழகத்தில் மட்டும் முடியாது என்று சொல்வதற்கு என்ன காரணம். யார் நிர்ப்பந்திக்கின்றனர்” எனக் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்தவர், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரு மாதம் கடந்த நிலையிலும் இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. கஜா புயல் சீரமைப்பில் அரசு செயல்படவே இல்லை என்று சொல்ல முடியாது. ஆமை வேகத்திற்கும் சற்றும் குறைவில்லாமல் மாநில அரசின் செயல்பாடு உள்ளது” என்று கூறினார்.