Published:Updated:

கருஞ்சட்டைப் பேரணி... பி.ஜே.பி-க்கு எதிராக ஒன்றிணையும் பெரியார் இயக்கங்கள்! #Periyar

கருஞ்சட்டைப் பேரணி... பி.ஜே.பி-க்கு எதிராக ஒன்றிணையும் பெரியார் இயக்கங்கள்! #Periyar
கருஞ்சட்டைப் பேரணி... பி.ஜே.பி-க்கு எதிராக ஒன்றிணையும் பெரியார் இயக்கங்கள்! #Periyar

இது பெரியாரின் பூமி என்ற உணர்வை வெளிக்கொணர வேண்டும். பெரியாரிய உணர்வாளர்கள் ஒன்றுகூடி ஓரணியில் திரண்டு, பெரியார் என்பவர் தமிழ்நாட்டின் சக்தி என்பதை இந்தக் கருஞ்சட்டைப் பேரணி நிரூபிக்க வேண்டும்".

சுயமரியாதை, மத மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்பு, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, சமூகநீதி போன்றவற்றுக்காகப் போராடிய தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி, திருச்சியில் டிசம்பர் 23-ம் தேதி பேரணியும் மாநாடும் நடைபெறவிருக்கிறது. பெரியார் கொள்கைகளைப் பின்பற்றிவரும் அமைப்புகள் ஒன்றிணைந்து `கருஞ்சட்டை’ அணிந்து இந்தப் பேரணியை நடத்தவுள்ளனர். கருஞ்சட்டைப் பேரணியின் அவசியம் குறித்தும் பெரியார் கொள்கைகளின் இன்றைய தேவைகள் குறித்தும் இந்தப் பேரணியை முன்னெடுக்கும் பெரியார் கூட்டமைப்பினரிடம் பேசினோம்.

திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்:

``இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வகுடிகள் திராவிடர்கள் என்பது ஆய்வுப்பூர்வமான உண்மை. திராவிடர்களில் தொன்மையானவர்கள் தமிழர்கள். இவர்களின் மொழி, பண்பாடு எல்லாம் ஆரியர்களின் சூழ்ச்சியினால் கைப்பற்றப்பட்டு, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக இழிநிலையில் வைத்திருந்ததை வரலாறு நமக்குச் சொல்லியது. ஆரியர்களுக்கு எதிரான புரட்சியை திராவிடர்களிடத்திலே விதைத்தவர் தந்தை பெரியார். தமிழினத்துக்குப் பெரியாரின் பங்களிப்பு அளப்பரியது. தமிழர்களுக்கான உரிமையை மீட்டெடுக்கப் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் தந்தை பெரியார்.

மொழிவாயிலாக தமிழினத்தை அடிமைப்படுத்த நினைத்தபோது, தமிழ்மொழியின் தேவையை உணர்த்தியதும் பெரியார்தான். தற்போது மத அரசியல் மீண்டும் தலைதூக்கியிருக்கிற நேரத்தில், பெரியாரின் கருத்துகள் ஒவ்வொரு தமிழனையும் சென்றடைய வேண்டும். ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டக் குரலாகப் பெரியாரின் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். அதற்காகத்தான் பெரியாரின் நினைவு நாளில் திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணியை `பெரியார் கூட்டமைப்பு இயக்கம்’ நடத்துகிறது. பெரியாரின் கொள்கைகளை வழிமொழியும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஆதிக்கச் சக்திகளுக்கு எதிரான குரலைப் பதிவுசெய்ய வேண்டும்".

கொளத்தூர் மணி,  திராவிடர் விடுதலைக் கழகம்:

``ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே மொழி என்று இந்தியாவை ஒற்றைத்தன்மைப்படுத்துவதற்கான முயற்சிகள் மிக நீண்ட நெடியகாலமாக நடந்துவருகின்றன. படிநிலை சாதியத்தைத் தாங்கிப்பிடிக்கிற இந்து மதத்தை, வேத காலத்துக்கே திருப்புவோம் என்று இயங்கிவருகிற இந்து அமைப்புகளின் அரசியல் வடிவமான பி.ஜே.பி., மத்தியில் ஆட்சியில் அமர்ந்து உரிமைப் போராளிகள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. பகுத்தறிவு பேசுகிறவர்களை, பன்மைத்துவத்தை ஓங்கிப்பிடிப்பவர்களைக் கொல்கிற போக்குத் தொடர்ந்து நடந்துவருகிறது.

மாட்டுக்கறியை உணவாக உட்கொள்ளும் மனிதர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாவதும் சிறுபான்மையினர் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. உணவு, உடை என்று எல்லாவற்றிலும் அடக்குமுறையும் வன்முறையும் கட்டவிழ்க்கப்படுகிறது. அதைக் கண்டித்துதான் பெரியார் உணர்வாளர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து, அவரது நினைவுநாளில் கருஞ்சட்டை அணிந்து பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம்".

கு.ராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்:

``கருஞ்சட்டைப் பேரணியும் கருஞ்சட்டை மாநாடும் - இந்துத்துவ பாசிச அமைப்புகள் தமிழ்நாட்டில் இதுவரை காலூன்ற முடியவில்லை. இதற்குக் காரணம் பெரியார். அவர் மறைந்து 45 ஆண்டுகள் கடந்தும், அவரது கருத்துகள் மறையாமல் பாசிசத்துக்கு எதிராகப் போராடி வருகிறது. பெரியாரை ஒழித்தால்தான், தமிழகத்துக்குள் இந்துத்துவக் கும்பல் உள்ளேவர முடியும் என்பதை நன்கு புரிந்துவைத்துள்ளனர். அதனால்தான், பெரியாரின் கருத்துகளை அவமதித்தும், குழிதோண்டிப் புதைக்கவும் முயன்று வருகின்றனர். பெரியார் சிலையை அவமானப்படுத்துவதும் இதற்காகத்தான்.

தமிழகத்தில் சாதிச் சண்டைகளையும் மதச் சண்டைகளையும் இந்துத்துவ அமைப்புகள் கட்டவிழ்த்துவிடுகின்றனர். இதைத் தமிழ்நாட்டு மக்கள் கவனித்துக்கொண்டுதான் வருகின்றனர். மக்கள் ஒருபோதும் பாசிச அமைப்புகளைத் தமிழகத்துக்குள் அனுமதிக்கமாட்டார்கள். இது பெரியாரின் பூமி என்ற உணர்வை வெளிக்கொணர வேண்டும். பெரியாரிய உணர்வாளர்கள் ஒன்றுகூடி ஓரணியில் திரண்டு, பெரியார் என்பவர் தமிழ்நாட்டின் சக்தி என்பதை இந்தக் கருஞ்சட்டைப் பேரணி நிரூபிக்க வேண்டும்".

நடிகர் சத்யராஜ்:

``ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடந்துவரும் இந்த நேரத்தில், சாதி அரசியல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. சாதிக்கு எதிராகப் போராடிய பெரியாரின் கொள்கைகள் மக்களிடையே சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டுக்கும், இந்தியத் துணைக்கண்டத்துக்கும் பெரியார் அதிகம் தேவைப்படுகிற நேரம் இது.

பெரியாரும், அவரைப் போன்றவர்களின் கொள்கைகளும்தான் நம்மை மீட்டெடுக்கும். அதற்காகவே பெரியார் குறித்து அதிகம் பேச வேண்டியிருக்கிறது, இந்தக் கருஞ்சட்டைப் பேரணி அதற்கு ஊக்கமளிக்கும். பெரியார் தொண்டர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மக்களுமே இந்தப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும். பெரியார் இன்றைக்கு ஏன் தேவை என்பதை இந்தப் பேரணி உணர்த்தும்".

அடுத்த கட்டுரைக்கு