
கிருஷ்ணகிரி: ராமதாசுக்கு ஆதரவாக வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட ஓசூர் பா.ம.க. மகளிர் அணியினர் போலீசாரை கண்டதும் போராட்டத்தை கைவிட்டு தலைதெறிக்க ஓடி தலைமறைவானார்கள்.

ஓசூரை அடுத்த அரசனட்டி கிராமத்தில் பா.ம.க. மகளிர் அணியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் இன்று காலை ராமதாசுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த திரண்டனர். அவர்கள், தமிழக அரசு தொடர்ந்து ராமதாஸ் மீது எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடத்த முயன்றனர்.

இந்தத் தகவலை அறிந்த போலீசார் அவர்களை கைது செய்ய வரவே விஷயமறிந்த மகளிர் பிரிவு நிர்வாகிகள் அனைவரும் தலைதெறிக்க ஓடி சந்துகளில் நுழைந்து தலைமறைவானார்கள். இந்த பெண் நிர்வாகிகள் தங்கள் வீட்டு குழந்தைகளையும் வாயில் கருப்புத்துணி கட்டி அழைத்துவந்து இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வைத்த சம்பவம் ஓசூர் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
-எஸ்.ராஜாசெல்லம்