Published:Updated:

பணக்கார வீட்டு திருமணங்களில் கலந்துகொள்ள மட்டும் நேரம் இருக்கிறதா? - திருச்சியில் ஸ்டாலின் விளாசல்

பணக்கார வீட்டு திருமணங்களில் கலந்துகொள்ள மட்டும் நேரம் இருக்கிறதா? - திருச்சியில் ஸ்டாலின் விளாசல்
பணக்கார வீட்டு திருமணங்களில் கலந்துகொள்ள மட்டும் நேரம் இருக்கிறதா? - திருச்சியில் ஸ்டாலின் விளாசல்

மோடி உலகம் சுற்றும் வாலிபன் ஆகிவிட்டார். அவருக்குப் பணக்காரர்களின் வீட்டு திருமணங்களில் கலந்துகொள்ள நேரம் இருக்கும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க நேரமிருக்காது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் திருச்சியில் வெளுத்து வாங்கினார்.

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அனைத்து திருச்சபைகளும் பங்கேற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை திருச்சி வந்த ஸ்டாலின், சமீபகாலமாக உடல்நிலைப் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. இலக்கிய வெளியிட்டு செயலாளரும் பேச்சாளருமான  திருச்சி செல்வேந்தினை அவரது வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தார். இதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசியர் காதர் மொய்தீனையும் சந்தித்துப் பேசினார்.

இறுதியாக நேற்று இரவு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் எஸ்.இனிகோ இருதயராஜ் ஒருங்கிணைத்த இந்த விழாவில், திருச்சி-தஞ்சை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், தென்னிந்திய திருச்சபையின் திருச்சி-தஞ்சை மறைமாவட்ட பேராயர் சந்திரசேகரன், சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா, இ.சி.ஐ திருச்சபைகளின் பேராயர் எஸ்றா.சற்குணம், கும்பகோணம் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் அந்தோணிசாமி, பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத் தலைவர் சார்லஸ் பின்னி ஜோசப், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு,பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த திருச்சபை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த விழாவில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேடையில் பேசிய பலரும் ஸ்டாலின் மட்டுமே சிறுபான்மையினரின் பாதுகாவலராக நினைப்பதாகவும், இனி வரும் காலங்களில் ஸ்டாலின் முதல்வராகவது உறுதி என வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

பேராயர் எஸ்.றா.சற்குணம், ”கடந்த சிலவாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் கூறிய அருள்வாக்கு என்னவென்றால், நாட்டை ஆள்பவர்கள் சாடிஸ்டுகளாக இருக்கக் கூடாது. அப்படியான ஆட்சிதான் இந்தியாவில் நடைபெறுகிறது. தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான நெருக்கடிகள் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்படுகின்றது. உழவர்கள், உழைப்பாளிகள் பயனை அனுபவிக்க முடியாமல், 50 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ஸ்டாலின் சாடிஸ்ட் ஆட்சி என அறைகூவல் விடுத்தார். அப்படி யாரும் இதுவரை அறைகூவல் விடவில்லை. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தமிழகத்தை ஆளும் தகுதி, தைரியம் ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது”  என முடித்தார்.

இறுதியாக பேசிய ஸ்டாலின், “மதங்கள் மனிதனை வேறுபடுத்தும் அமைப்புகளாக இல்லாமல், மனிதனை மனிதன் ஒன்றுபடுத்தி, உதவி செய்யக்கூடிய அமைப்புகளாகச் செயல்பட வேண்டும். மாறிட வேண்டும்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைப் பாசிச ஆட்சி, நாசிச ஆட்சி என நான் மட்டும் சொல்லவில்லை. நாடே சொல்லிக் கொண்டிருக்கிறது. கஜா புயலில் பாதித்த மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பிரதமர் மோடி தமிழகம் வந்தாரா? பல நாடுகளுக்கு உலகம் சுற்றும் வாலிபனாகச் சுற்றி வருகிறார். பெரும் பணக்காரர்கள், திருமண விழாக்களுக்கு மட்டும் செல்கிறார். குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் ஏற்பட்ட கொடுமைகளுக்கு அந்த நேரத்தில் ஓடோடி பார்வையிட செல்கிறார். அனுதாபம், இரங்கல், வருத்தம் தெரிவிக்கிறார். உடனடியாக நிதி அனுப்பி வைக்கிறார்.

தமிழகத்தில் நடந்த சோக சம்பவங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தாரா.. கஜா புயல்பாதிப்புகளை சரி செய்ய 15ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு நேரில் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் கிடைத்தது 354 கோடி. அந்தப் பணமும், தமிழகத்துக்குக் கிடைக்கும், இந்த வருடத்துக்கான மத்திய நிதி என்பது அம்பலம் ஆகியுள்ளது. தனிப்பட்ட முறையில் மோடியை நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. அதனால்தான் சாடிஸ்ட் மனப்பான்மையோடு பிரதமர் இருக்கிறார் எனச் சுட்டிக்காட்டுகிறேன். வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும், பாரபட்சமில்லாமல் மக்களுக்காக உழைக்க வேண்டிய அவர், அது முதல்வராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், எம்எல்ஏ, எம்பி-யாக இருந்தாலும் பொருந்தும்.

வரக்கூடிய காலம் நிம்மதியாக இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். தலைவர் கருணாநிதி மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், எப்போதெல்லாம் சிறுபான்மையின மக்களுக்கு அவர் குரல் கொடுத்தாரோ.. அதேபோல தொடர்ந்து குரல் கொடுக்க காத்திருக்கிறோம். ஏழை, எளிய, சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தலைவராக வாழ்ந்தவர் கருணாநிதி. அவர் மீது ஆணையிட்டுச் கூறுகிறேன். சிறுபான்மை சமுதாயத்துக்கு தி.மு.க என்றைக்கும் பக்க பலமாக இருப்போம்.

2002ல் மத மாற்றத் தடை சட்டம் வந்தது. 2006 தி.மு.க ஆட்சியில் உடனடியாக மதம் மாற்றத் தடை சட்டத்தை ரத்து செய்து உங்கள் வாழ்வில் கருணாநிதி வசந்தத்தை ஏற்படுத்தித் தந்தார். சிறுபான்மையினர் நல ஆணையம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் நல இயக்கம் ஆகியவை கொண்டுவரப்பட்டது தி.மு.க ஆட்சியில்தான். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடை சட்டம் தி.மு.க ஆட்சி வந்தபிறகே ரத்து செய்யப்பட்டது.

சிறுபான்மை மக்களுக்கு உதவுவது என்பது பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என யாரும் கருதக்கூடாது. சிறுபான்மை மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது நமது கடமை. அதைத் தான் மகாத்மா காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். நமக்குள் எந்த பேதமும் இல்லை. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க அதைத் திசை திருப்பி வருகிறது.

தமிழகத்தில் பா.ஜ.கவை தலைதூக்காமல் தடுத்து வைத்துள்ளதுபோல, இந்தியாவிலும் பா.ஜ.கவை அடியோடு ஒழிக்க உறுதி, சூளுரை எடுக்கும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. ஏனெனில் திருச்சி திருப்புமுனையாக இருக்கும்.  தி.மு.க.வுக்கு பல திருப்புமுனைகளை தந்துள்ளது திருச்சி. அதேபோல சிறுபான்மை சமுதாயத்தைக் காக்கும் திருப்புமுனையாக அமையட்டும் தமிழகத்திலும், மத்தியிலும் நல்லாட்சி மலரட்டும்” என்றார்.