சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“தி.மு.க-வுடன் கூட்டணி நிச்சயம்!”

“தி.மு.க-வுடன் கூட்டணி நிச்சயம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தி.மு.க-வுடன் கூட்டணி நிச்சயம்!”

“தி.மு.க-வுடன் கூட்டணி நிச்சயம்!”

மிழகம் வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் சீதாராம் யெச்சூரியைச் சந்தித்தேன். கொதிநிலையில் உள்ள சபரிமலை தொடங்கி கூட்டணி வரை பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் யெச்சூரி.

“தி.மு.க-வுடன் கூட்டணி நிச்சயம்!”

“சபரிமலை விவகாரத்தில் கேரள கம்யூனிஸ்ட் கட்சி அரசு குறித்துப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படு கின்றனவே. பொதுமக்களின் எதிர்ப்பு கடுமையாக இருக்கும் நிலையில் அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்காமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த நினைப்பது சரியானதுதானா?”

“நிச்சயமாக மக்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், போராடுபவர்கள் இந்துத்துவச் சக்திகளின் தூண்டுதலால்தான் போராடுகிறார்கள். இப்போது அதில் காங்கிரஸ்காரர்களும் சேர்ந்து கொண்டார்கள். பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிக்காரர்களும் ஆரம்பத்தில் ஏன் இதை வரவேற்றார்கள்; இப்போது ஏன் எதிர்க்கிறார்கள்? முத்தலாக் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த பா.ஜ.க என்னவெல்லாம் செய்தது? முஸ்லிம் பெண்களுக்குச் சம உரிமை என்றால் இந்துப் பெண்களுக்கும் அதே உரிமை தரப்பட வேண்டும்தானே! இந்துக்கள் என்றால் ஒருவிதமாகவும் முஸ்லிம்கள் என்றால் வேறு விதமாகவும் ஏன் நடத்த வேண்டும்? மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைத்து, பெரும்பான்மை வாக்குவங்கி அரசியலைக் கவரவேண்டும் என்கிற நோக்கத்துக்காகத்தான் பா.ஜ.க இதைச் செய்கிறது.”

“நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை சி.பி.எம் எந்த உத்தியின் அடிப்படையில் எதிர்கொள்ளப்போகிறது?”

“மோடியின் நான்காண்டுக்கும் மேலான ஆட்சியை இந்திய மக்கள்மீது  நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய  பேரழிவு என்றுதான் சொல்ல வேண்டும்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து, சிறுதொழில் செய்வோரும் பாதிக்கப்பட்டு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் நிலை சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளாகியிருக்கிறது. இதனால் உணவு உற்பத்தியும் குறைந்திருக்கிறது. இன்னொருபுறம் பெருமுதலாளிகளுக்குக் கடன்கள் வாரி வாரி வழங்கப்படுகின்றன. அவர்கள் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டே ஓடிவிடுகின்றனர்.

ஒருபுறம் பொருளாதாரப் பின்னடைவு, இன்னொருபுறம் மதவாத அரசியலைத் தூண்டுவதன் மூலம் சமூக ஒழுங்கும் சீர்குலைக்கப்பட்டுள்ளது. ‘ஊழலற்ற ஆட்சி’ என்று மார்தட்டிக்கொள்ளும் மோடி ஆட்சியில் ரபேல் ஊழல் வெளிவந்துள்ளது. ஆனால் இவை எவற்றுக்கும் மோடி பதில் சொல்வதில்லை. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. மோடி நாடாளுமன்றத்துக்கு வந்தாலும் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பான பதில் அளிப்பதில்லை. 

“தி.மு.க-வுடன் கூட்டணி நிச்சயம்!”

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்துவது, நீதித்துறையிலும் தலையீடு என்று எல்லா முறைகேடுகளிலும் ஈடுபடுகிறது மோடி அரசு. மோடி என்றால் முறைகேடு என்றாகிவிட்டது.

இப்படிப்பட்ட பாசிச அரசு மீண்டும் அமையாமல் தடுப்பதற்காக, ‘மாற்று அரசை மத்தியில் அமைத்தல்’ என்னும் முழக்கத்துடன் மக்களைச் சந்திக்கவிருக்கிறோம்.”

“நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறீர்கள்?”

“ தமிழ்நாடு, பீகார், கேரளா, மத்தியப்பிரதேசம் என ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கே உரிய தனித்துவங்களைக் கொண்டவை. இப்போது மாநிலக் கட்சிகள் தங்கள் மாநிலப் பிரச்னைகளில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருக்கின்றன. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் சிந்திக்க வேண்டிய ஒன்று. ஆனால், இந்தியாவின் மிக முக்கியமான மாநிலக் கட்சிகள் அனைத்தின் ஆசையும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அகற்றப்பட வேண்டும் என்பதுதான். அப்படியான சிந்தனையில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரளும் என்று உறுதியாக நம்புகிறேன்.”

“தி.மு.க-வுடன் கூட்டணி நிச்சயம்!”“இடதுசாரிக் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியையே சந்தித்துவருகின்றனவே? கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, மாநிலக் கட்சிகளின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கின்றனவே?”

“உண்மைதான். 2004-ல் 44-ஆக இருந்த எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2014-ல் 9-ஆகக் குறைந்தது. தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்குப்பின் இடதுசாரிகளே இல்லாத சட்டமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். மீட்டெடுப்போம். ஆனால், விவசாயிகள் மும்பையிலும் தொழிலாளர்கள் தில்லியிலும் நடத்திய பேரணியை நாங்கள்தான் முன்னெடுத்தோம். ஆண்டுதோறும் பல லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்பது மோடியின் வாக்குறுதிகளில் ஒன்று. அவர் கொடுத்த இந்த வாக்குறுதி மூலம் இப்போதைக்கெல்லாம் இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதை மையப்படுத்தி, வரும் நவம்பர் 3-ல் டெல்லியில் ‘மோடி அவர்களே, எங்களுக்கான வேலைவாய்ப்பு எங்கே?’ என்ற முழக்கத்தோடு இளைஞர்கள் மிகப்பெரிய பேரணி நடத்தவுள்ளனர். அதற்கான முன்னெடுப்புகளையும் நாங்கள்தான் செய்துகொண்டிருக்கிறோம். இத்தகைய தொடர் செயற்பாடுகள் மக்களிடம் எங்கள்மீதான நம்பிக்கையை ஏற்படுத்தி, தேர்தல் வெற்றியையும் ஈட்டித்தரும் என்று நம்புகிறேன்.”

“தமிழ்நாட்டில் ஸ்டாலினின் செயல்பாட்டைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி இருக்குமா?”


“கலைஞருக்கு அடுத்து தலைமை தாங்கும் பொறுப்பு ஸ்டாலினிடம் கொடுக்கப் பட்டுள்ளது. அவருக்குத் திராவிட இயக்கப் பாரம்பர்யத்தின் முக்கியத்துவம் தெரியும். அவர் முன்னைவிட இப்போது இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்று உறுதியாக நம்புகிறேன். இப்போது தி.மு.க பி.ஜே.பி எதிர்ப்பு மனநிலையில் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் சமயத்திலும் இதே மனநிலையில் தி.மு.க இருக்குமானால் நிச்சயம் கூட்டணி வைத்துக்கொள்வோம். ஆனால், கூட்டணிபற்றி இவ்வளவு சீக்கிரம் பேசுவது என்பது எந்தளவு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. தேர்தல் நெருங்கும்போது அதை முடிவு செய்துகொள்ளலாம்.”

#MeToo மற்றும் #UrbanNaxals என்பவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“#MeToo மூலம் எம்.ஜே.அப்துல் மீது தொடுக்கப்பட்ட பாலியல் புகாரை நாங்கள்தான் வெளியில் கொண்டுவந்தோம். அதன் விளைவாக இப்போது அவர் பதவி விலகிவிட்டார். இன்னும் இந்த வரிசையில் சிலர் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். தவறு செய்தவர் நிச்சயம் சட்டத்தின்முன் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். அதுதான் அடிப்படை. அதைச் சட்டம் பார்த்துக்கொள்ளும். தலித்துகள் பிரச்னை சார்ந்து  குரல் கொடுக்கும் வழக்கறிஞர்களை  #UrbanNaxals என்று முத்திரை குத்துகிறார்கள். தலித்துகள்மீது கட்டுக்கடங்காத தாக்குதல்கள்  கட்டவிழ்க்கப்படுகின்றன. அதற்காக அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள்.  பீமா கோரேகான் வன்முறையில் தாக்கப்பட்டவர்கள் தலித்துகள். ஆனால், உ.பி அரசு, தாக்கியவர்கள் மீதான வழக்குகள் எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக்கொண்டு பாதிப்புக்குள்ளானவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது. அதேபோல,  கத்துவாவில் ஒரு குழந்தை கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். ஆனால், அந்த வன்முறை நிகழ்த்தியவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி பாதிக்கப் பட்டவர்களுக்காகக் களம் இறங்குபவர்களைத் தடுக்கும் விதத்தில் பி.ஜே.பியால் கொண்டுவரப்பட்டதுதான் இந்த #UrbanNaxals என்ற சொல்லாடல்.”

 ச.அழகுசுப்பையா / படம்: ப.சரவணக்குமரர்