Published:Updated:

`உங்கள் முயற்சி என்றுமே பலிக்காது!’ - நிதின் கட்கரி காட்டம்

`உங்கள் முயற்சி என்றுமே பலிக்காது!’ - நிதின் கட்கரி காட்டம்
`உங்கள் முயற்சி என்றுமே பலிக்காது!’ - நிதின் கட்கரி காட்டம்

பா.ஜ.க தலைமைக்கும், தமக்கும் இடையில் கருத்து வேறுபாடை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் சில திட்டமிட்டே செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார். 


ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க தலைமையை அசைத்துப் பார்த்திருக்கின்றன. இது, வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், வரும் மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்களுடன் அவர் கடந்த சில நாள்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். 


இந்தநிலையில், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்குப் பதிலாக தற்போதைய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரியை முன்னிறுத்துங்கள் என்று கூறி ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு விவசாயிகளுக்குப் பயிர்க்கடன்கள் வழங்குவதற்காக மகாராஷ்டிரா அரசால் ஏற்படுத்தப்பட்ட  வி.என்.எஸ்.எஸ்.எம் என்ற அமைப்பின் தலைவர்  கிஷோர் திவாரி எழுதிய கடிதம் பா.ஜ.கவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நிதின் கட்கரியை முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்ததாகச் சொல்லப்பட்டது.

ஆனால், அப்படி எந்த எண்ணமும் தமக்கு இல்லை என்று நிதின் கட்கரி விளக்கமளித்து வருகிறார். சமீபத்தில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், `அரசியல்வாதிகள் ஊடகங்கள் முன் குறைவாகப் பேச வேண்டும் என்பதுதான் என் கருத்து. அதுதான் தற்போது தேவைப்படுகிறது. அதிலும் பா.ஜ.க-வுக்கு சற்று அதிகமாகவே தேவைப்படுகிறது’ என்று கூறியிருந்தார். பா.ஜ.கவைச் சேர்ந்த சிலர் ஊடகங்களில் தெரிவிக்கும் கருத்து சர்ச்சைகளுக்கு வித்திட்டு வரும் நிலையில், நிதின் கட்கரியின் இந்த பேச்சை பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களே ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.  இதனால், பா.ஜ.க தலைமை குறித்து நிதின் கட்கரி விமர்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த தகவல்கள் வெறும் ஊகமே என்று தற்போது விளக்கமளித்திருக்கிறார் நிதின் கட்கரி. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``கடந்த சில நாள்களாக நான் கூறும் கருத்துகளைத் திரித்து பா.ஜ.க தலைமைக்கும் எனக்கும் இடையில் சிண்டு முடியும் வேலைகளில் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களில் ஒரு பகுதியினரும் ஈடுபட்டு வருகிறார்கள். இது அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்படுவது. ஆனால், எனக்கு அதுபோன்ற எந்த எண்ணமும் இல்லை. அதுபோன்ற செயல்பாடுகளை நான் மீண்டும் ஒருமுறை வன்மையாகக் கண்டிக்கிறேன். கட்சித் தலைமைக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்த முயலும் இதுபோன்ற முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது. என்னுடைய நிலையை நான் எப்போதும் தெளிவாக உணர்த்தியிருக்கிறேன். பல்வேறு தளங்களில் அதைத் தெளிவுபடுத்தியிருக்கிறேன்; தொடர்ந்து அந்த செயலில் ஈடுபட்டு, அதுபோன்று திரித்துப் பேசுபவர்களின் உண்மையாக முகத்தை வெளிப்படுத்துவேன்’’ என்று கூறியிருக்கிறார்.