Published:Updated:

`மதுரையின் பெருமைகளுள் ஒன்றாக எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும்!’ - பிரதமர் மோடி

`மதுரையின் பெருமைகளுள் ஒன்றாக எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும்!’ - பிரதமர் மோடி
`மதுரையின் பெருமைகளுள் ஒன்றாக எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும்!’ - பிரதமர் மோடி

மீனாட்சி அம்மன் கோவில் போல், வரும் காலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையும் மதுரையின் பெருமைகளில் ஒன்றாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தெலங்கானா,சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநில தேர்தல்கள் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், தங்களது வெற்றி வாய்ப்பை பலப்படுத்திக்கொள்ளவும், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் முயற்சியிலும் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.

தேர்தலுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகளின் பங்கு முக்கியமானது என அக்கட்சி கருதிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். அதேபோல அவர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அந்தவகையில், இன்று மத்திய சென்னை, வட சென்னை, திருச்சி, மதுரை, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது பேசிய அவர், ``இன்று  அரசியல் கட்சியினர் மெகா கூட்டணி அமைப்பது குறித்து பேசி வருகின்றனர், அந்த கூட்டணி என்பது தனிப்பட்ட லாபத்திற்கானதே தவிர, கொள்கைசார்ந்து அமைக்கப்படுவதல்ல. மேலும், அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றவே நினைக்கிறார்கள்.மற்றபடி மக்கள் நலனுக்கான கூட்டணி இல்லை. இந்தியா இன்று அதிவேக வளர்ச்சியை கண்டு வருகிறது. பொருளாதார மாற்றங்களால் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்கள் வளர்சியை அடைந்துள்ளன. 2018-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். 6 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை கிடைத்துள்ளது.

முன்னர் காங்கிரசின் அராஜகத்தை வீழ்த்துவதற்காகவே மறைந்த ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆனால், அக்கட்சியின் இப்போதைய தலைவர் காங்கிரஸ் கட்சியுடன் கைகோக்க துடிக்கிறார்.யாரையும் விட்டு வைத்ததில்லை. மக்களின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெற்று  தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியை 1980-ம் ஆண்டு கலைத்த கட்சிதான் காங்கிரஸ் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பெயர் போனது. மதுரையின் அடையாளமாக மீனாட்சியம்மன் கோயில் விளங்குகிறது. அங்கு பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த வகையில் எதிர்காலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையும் மதுரையின் பெருமைகளில் ஒன்றாக இருக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.