Published:Updated:

`இந்தியா போன்ற சகிப்புத் தன்மை கொண்ட நாடு உலகில் வேறு இல்லை!’ - ராஜ்நாத் சிங்

`இந்தியா போன்ற சகிப்புத் தன்மை கொண்ட நாடு உலகில் வேறு இல்லை!’ - ராஜ்நாத் சிங்
`இந்தியா போன்ற சகிப்புத் தன்மை கொண்ட நாடு உலகில் வேறு இல்லை!’ - ராஜ்நாத் சிங்

இந்தியா அளவுக்கு சகிப்புத் தன்மை கொண்ட நாடு உலகில் வேறு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். 

புலந்தேஸ்வர் வன்முறைச் சம்பவம் குறித்து சமீபத்தில் பேசிய பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா, பசு ஒன்றின் இறப்புக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த காவலரின் மரணத்துக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று கூறியிருந்தார். மேலும், சகிப்புத்தன்மை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

மகராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய ராஜ்நாத் சிங், ``இந்தியாவில் இருக்கும் அளவுக்கு சகிப்புத்தன்மை, உலகின் எந்த மூலையிலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. உலகின் பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள் அமைதியாக ஒன்றிணைந்து வாழும் ஒரு நாடு இந்தியா. நாட்டின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் அவர்களின் பங்களிப்பு சிறப்பானது. அது எதிர்காலத்திலும் தொடரும்’’ என்றார். 

உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் புலனாய்வு மற்றும் உளவு அமைப்புகளுக்கு சமீபத்தில் அளிக்கப்பட்ட அதிகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ராஜ்நாத் சிங், ``அந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே விளக்கம் அளித்து விட்டது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்  நிலையில், இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் இதற்கு மேல் என்னால் எதுவும் பேச முடியாது. நான் பேச வேண்டியதை நாடாளுமன்றத்தில் பேசுவேன்’’என்றார். 

நாட்டில் உள்ள எந்தக் கம்ப்யூட்டரிலும் சேமித்துவைக்கப்பட்டுள்ள தகவல்களைப் படிக்கவோ, அவை மூலம் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றம் குறித்து அறிந்துகொள்ளுதல் மற்றும் கண்காணிக்கும் வகையில் வானளாவிய அதிகாரத்தை 10 புலனாய்வு மற்றும் உளவு அமைப்புகளுக்கு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.