Published:Updated:

`ஸ்டாலினைவிட சாடிஸ்ட் யாரும் இருக்க முடியாது’ - பொன்னார் பாய்ச்சல்!

`ஸ்டாலினைவிட சாடிஸ்ட் யாரும் இருக்க முடியாது’ - பொன்னார் பாய்ச்சல்!
`ஸ்டாலினைவிட சாடிஸ்ட் யாரும் இருக்க முடியாது’ - பொன்னார் பாய்ச்சல்!

ஸ்டாலின் நாகாக்க வேண்டும். ஸ்டாலினைவிட சாடிஸ்ட் யாரும் இருக்க முடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சாடியுள்ளார்.

சென்னை  விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, `` கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் ஏற்பட்ட அழிவை தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதேபோல மத்திய அரசின் குழுவும் ஆய்வு செய்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து ஒன்றரை மாதமாக பாரதிய ஜனதா கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிவாரணப் பணிகளில் ஈடுப்பட்டார். புயல் பாதிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் நான் சென்றேன். 3 கட்டமாக சென்று பார்வையிட்டேன். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர், முன்னாள் தலைவர் உட்பட தலைவர்கள் சென்று பார்த்து பல கோடிக்கணக்கான ரூபாய் நிவாரண உதவிகளை வழங்கி உள்ளோம்.

விவசாய மக்கள், மீனவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து டெல்லியில் மத்திய உள்துறை, நிதித்துறை, விவசாயத்துறை, பெட்ரோலியத் துறை, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, வணிகத்துறை அமைச்சர்களை சந்தித்து எந்தெந்த துறை முலமாக நிவாரணம் பெற முடியுமோ அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மத்திய மந்திரிகள் மனமுவந்து உதவி செய்வதாக தெரிவித்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மத்தியக் குழு ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அறிக்கையை சமர்ப்பித்தும் அதிகாரிகள் அளவில் கூட்டம் நடக்கும். அதன்பின்னர்தான் எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை நிதித்துறை, உள்துறை, விவசாயத்துறை மந்திரிகளின் கூட்டத்தின் பின்தான் முடிவு செய்வார்கள். ஒரு  கருத்தைச் சொல்லும்போது அதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருப்பதை கணக்கில் எடுக்க வேண்டும்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கப் போவது பற்றி தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாருக்கும் தெரியாது. மேடையில் இருந்த ஆந்திர, கேரள மாநில முதல்வர்கள் வரவேற்கவில்லை. புதுச்சேரி மாநில முதல்வர்தான் கைதட்டினார். ஏன் முன்மொழிந்தார்கள் என்று மற்ற எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எந்தெந்த கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர இருந்ததோ அந்தக் கட்சிகள் இதில் உடன்பாடு இல்லை என்று கூறிவிட்டனர். கூட்டி வந்து கழுத்தை அறுத்ததாக தான் பலர் நினைக்கின்றனர். அழைக்கப்பட்டாத ஒருவரை வழிந்து அழைத்து வந்ததின் நோக்கம் என்ன? புலியைப் பார்த்து பூனை சூடு போட்டதாக கருதுகிறேன். கருணாநிதி சொன்னார் என்றால் அவரின் தலைமை எப்படிப்பட்டது என்பது நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தெரியும்.

கருணாநிதி செய்த விஷயங்களை ஒப்பிட்டு நான் செய்யப் போவதாக சொன்னா யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. சாடிஸ்ட் என்ற வார்த்தை யாருக்குப் பொருந்தும். 1984-ல் இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது சீக்கிய சகோதரர்களைத் தேடிக் கொன்றவர்களை மேடையில் வைத்துக்கொண்டு சாடிஸ்ட் என்று சொல்லாமா?. சாடிஸ்ட் காங்கிரஸ் கட்சிக்குப் பொருந்தும். 2,000-க்கும் அதிகமான கொலைகள் செய்த கொலைகார கூட்டத்தை அழைத்து வந்து பெருமைப்படுத்துவதாக நினைத்து சாடிஸ்ட் என்று பேசுகின்றார்.  ஸ்டாலினைவிட சாடிஸ்ட் வேறு யார் இருக்க முடியும். அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து நடந்த துயரச் சம்பவங்களை பேசலாமா. தயவு செய்து நாகாக்க வேண்டும். இல்லை என்றால் நீங்களே உங்களை அசிங்கப்படுத்திக் கொள்வீர்கள்” இவ்வாறு அவர் கூறினார்.