மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி)

என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி)

தத்தெடுத்த ஊர் பெயரே தெரியாத எம்.பி

#EnnaSeitharMP
#MyMPsScore

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்த நேரம். அவிநாசி அருகிலுள்ள தெக்கலூர் பாலத்துக்குப் பக்கத்தில் வந்து நின்றது நீலகிரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணனின் பிரசார வேன். வேட்பாளரைச் சூழ்ந்துகொண்டார்கள் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் போராட்டக் குழுவினர். “வெற்றிபெற்றதும் முதல் வேலை, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான்” என்று சொன்னார் கோபாலகிருஷ்ணன். “நாலரை வருஷமாச்சு. அந்தத் திட்டமும் வரலை. கோபாலகிருஷ்ணனையும் பார்க்க முடியலை” என்று புலம்புகிறார்கள் நீலகிரி தொகுதி வாக்காளர்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியிலிருந்து ஒரு பெரிய மரத்தைப்போல நான்கு மாவட்டங் களில் வேர் பரப்பியிருக்கிறது நீலகிரி தொகுதி. இதன் எம்.பி., நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு என நான்கு மாவட்டங்களின் கலெக்டர்களையும் போலீஸ் உயர் அதிகாரிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஜெயலலிதாவுக்கு நீலகிரி தொகுதி எப்போதுமே ஸ்பெஷல். அதனால்தான் இந்தத் தொகுதியைச்் சேர்ந்த அர்ஜுனனையும், ஏ.கே.செல்வராஜையும் ராஜ்யசபா எம்.பி-க்களாக நியமித்தார் அவர். இவர்களுடன் கோபாலகிருஷ்ணனையும் சேர்த்து இந்த ஏரியாவுக்கு மூன்று எம்.பி-க்கள். மற்ற இருவரை விடுங்கள். மக்கள் ஓட்டு போட்டுத் தேர்வானவர் கோபாலகிருஷ்ணன்தானே... அவர் என்ன செய்திருக்கிறார்?

“எவ்வளவு தாங்க பொறுமையா இருக்குறது? ஒருகட்டத்துல ‘எங்க எம்.பி கோபால கிருஷ்ணனைக் காணவில்லை’னு போஸ்டர் ஒட்ட வேண்டியிருந்தது. ஒருமுறை கட்சிக் கூட்டத்தில் கோபாலகிருஷ்ணன் பேச எழுந்தபோது, ‘ஜெயிச்சதுக்கு நன்றி சொல்லக்கூட தொகுதிப் பக்கம் வரலை... பெருசா பேச வந்துட்டாரு. கம்முன்னு உட்காருங்க’ என்று கட்சிக்காரங்களே கோஷம் எழுப்புனாங்க” என்பதுபோன்ற கருத்துகளே தொகுதியில் அதிகம் ஒலிக்கின்றன.

என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி)

கூடவே, “அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி-க்கள் இருவரும் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொகையைத் தந்து சில பிரச்னைகளைத் தீர்த்துவைத்துள்ளனர். ஏன், எதிர்க்கட்சியைச் சேர்ந்த தி.மு.க ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாகூட நீலகிரி மலை ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டபோது அதை எதிர்த்து அறிக்கை விட்டார். மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலிடமும் பேசினார். ஆனால், கோபாலகிருஷ்ணன் வாயே திறக்க வில்லை” என்கிறார்கள் மக்கள்.

“தேர்தல் நேரத்தில், தனது சொந்த ஊரான குன்னூர் நகரில் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண்பேன் என உறுதியளித்தார். அதை தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். குடிநீருக்கு நாங்க நாய்படாத பாடுபடுறோம். இப்போதும் குன்னூரில் 15 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வருகிறது. குன்னூரின் ஒரே குடிநீர் ஆதாரம் ரேலியா அணைக்கட்டு. அதை சரியாகப் பராமரிக்காததால், முறையாகத் தண்ணீர் விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் சுமார் ஒரு லட்சம் மக்கள் அவதிப்படுகிறார்கள். கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே குன்னூர் நகராட்சித் தலைவராக இருந்தவர்தான். அப்போதும் சரி... இப்போதும் சரி... குடிநீர்ப் பிரச்னையைக் கண்டுகொள்ளவே இல்லை’’ என்றார்கள் மக்கள்.

ஊட்டியின் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். “ஊட்டிக்கும் தொட்டபெட்டா வுக்கும் இடையே ரோப் கார் வசதி செய்யப்படும் என்கிற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே மலைக்கு நடுவுல தொங்குது. ஊட்டி ஏரியில் நகரத்தின் மொத்தக் கழிவுநீரும் கலக்குது. அதைத் தடுக்க எம்.பி என்ன செஞ்சாரு? உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து ஊட்டி ஏரியில் மூக்கைப் பொத்திக்கிட்டு படகுச் சவாரி போறாங்க. நம்ம மானம் ஏரோப்ளேன் ஏறுதுங்க” என்று ஆவேசப்பட்டார் அவர்!

“ஒரு காலத்துல பழமையான தொழிற்சாலைகள் கொண்ட தொகுதியாக அறியப்பட்ட பெருமைக்குரியது நீலகிரி. ஆனால், ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை மூடப்பட்டு விட்டது. அடுத்ததாக, அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையையும் மூடுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. இத்தனைக்கும் அந்தத் தொழிற்சாலை லாபத்தில் இயங்குகிறது. ஆனாலும் திட்டமிட்டே அதன் உற்பத்தியைக் குறைக்கிறது மத்திய அரசு. சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் ராணுவ விவகாரங்களைக் கவனிக்கும் நாடாளுமன்ற நிலைக் குழுவினர் அரவங்காடு, வெலிங்டன் உள்ளிட்ட ராணுவப் பகுதிகளுக்கு ஆய்வு செய்ய வந்தனர். தொகுதி எம்.பி நேரில் போய் கோரிக்கை வைத்திருக்க வேண்டாமா? ஆனால், மனிதர் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. தொழிலாளர்கள் கொதித்துப்போய் கேட்டதற்கு, ‘அழைப்பு இல்லை’ என்று அசால்டாக சொல்லிவிட்டார்” என்று புலம்பித் தவிக்கிறார்கள் தொழிலாளர்கள்.

நீலகிரி மாவட்டத் தேயிலை சாகுபடியாளர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரான மஞ்சை மோகன், “ஒரு கிலோ தேயிலையில் 100 கிளாஸ் டீ போடலாம். இன்னைக்கு சாதாரண டீக்கடை யிலேயே ஒரு டீ பத்து ரூபாய். நூறு டீ ஆயிரம் ரூபாய். ஆனா, தேயிலை பறிக்கும் தொழிலாளிக்கு கிடைக்குறது வெறும் அஞ்சு ரூபாய்தாங்க. இந்தப் பொழப்பை நம்பி நான்கு லட்சம் தொழிலாளர்கள் இருக்காங்க. அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுறதுக்கு எம்.பி ஒண்ணுமே செய்யலை. அரசு கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு முன்னாடி அரசு மானியம் கொடுத்தாங்க. இப்போ அதுவும் இல்லை” என்றார் வருத்தத்துடன்.

மலைமேல் இப்படி என்றால், மூன்று சமவெளி சட்டமன்றத் தொகுதிகளில் வேறு மாதிரியான பிரச்னைகள். அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி, “1957-ம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டத்துக்காகப் போராடிவருகிறோம். ஜெயலலலிதா முதல்வராக இருந்தபோது 2016-ல் ஆரம்பகட்ட நிதியாக ரூ. 3.27 கோடி ஒதுக்கினார். 2017-ல் எடப்பாடி பழனிசாமி அதில் மாற்றம் செய்து அறிவித்தார். அடுத்தடுத்து அறிவிப்புகள் மட்டுமே வருகின்றன. வேலைகள் நடக்கவில்லை’’ என்றார் அவர்.

சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் ஸ்டாலின் சிவக்குமார், “சத்தி அரசு மருத்துவமனையில் மின்கோபுர விளக்கு அமைத்துத் தந்தார் எம்.பி. ஆனால், அந்த விளக்கு ஆரம்பத்திலிருந்தே எரியவில்லை. சத்தியமங்கலம் நகரப் பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியை ரங்கசமுத்தரம் பகுதியில் அமைக்க ஏற்பாடு நடந்தது. அதையும் மக்கள்தான் போராடி நிறுத்தினார்கள்; எம்.பி கண்டுகொள்ளவே இல்லை” என்றார்.

மூன்று கிராமங்களைத் தத்தெடுத்துள்ளார் கோபாலகிருஷ்ணன். முதலில் தத்தெடுத்தது கோடநாடு கிராமம். மற்ற இரண்டு கிராமங்கள் எவை என்பது கோபாலகிருஷ்ணனுக்கே தெரிய வில்லை. அவரிடம் கேட்டதற்கு, “சத்தியமங்கலம் பக்கத்துல... அது ஏதோ ஒரு கிராமமுங்க” என்று பலத்த யோசனையுடன் இழுத்தவர், “மறந்துடுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுங்க. சொல்றேன்” என்றார். அரை மணி நேரம் கழித்து, “முத்தாண்டிபாளையம்” என்றார். அந்த கிராமம் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ளது. ஆனால், அதை அவர் தத்தெடுக்கவில்லை. இதை எம்.பி-யின் உதவியாளர் ராம்குமாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, “எனக்கும் தெரியலைங்க... விசாரிக்கிறேன்” என்றவர், அரை மணி நேரம் கழித்து, “பவானிசாகர் தொகுதியில் உத்தண்டியூர், அவிநாசி தொகுதியில் துலுக்கமுத்தூர்... இந்த ரெண்டு கிராமங்களையும் தான் எம்.பி தத்தெடுத்திருக்கிறார்” என்றார்.

“ஜெயலலிதா இருந்தவரை கோடநாடு கிராமத்துக்கு அனைத்து வசதிகளும் கிடைத்தது. கோபாலகிருஷ்ணனும் எம்.பி நிதியிலிருந்து சாலை அமைப்பது, தெரு விளக்குகள் அமைப்பது, மண்சரிவு ஏற்படாமல் இருப்பதற்காக கான்க்ரீட் தடுப்பு அமைப்பது என விழுந்து விழுந்து வேலை பார்த்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு யாரும் இந்தப்பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை’’ எனப் புலம்புகிறார்கள் கோடநாடு கிராமத்தினர்.

எம்.பி தத்தெடுத்துள்ளதாகக் கூறிய உத்தண்டியூர் கிராமத்துக்குச் சென்றோம். “உங்கள் கிராமத்தை எம்.பி தத்தெடுத்துள்ளார்” என்று அங்குள்ள மக்களிடம் சொன்னதும் ஆச்சர்யமாகப் பார்த் தார்கள். “இந்த விஷயம் நீங்க சொல்லித்தானுங்க எங்களுக்கு தெரியுது. எங்க கிராமத்தை ஒட்டித்தான் கீழ்பவானி வாய்க்கால் ஓடுது. இருந்தும் எங்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்குறதில்லைங்க. பல இடங்களில் சாக்கடைத் தண்ணீர் தேங்கி நிக்குது. அரசாங்கத்தோட தொகுப்பு வீடுகூட எங்களுக்கு கிடைக்கலை” என்கின்றனர் உத்தண்டியூர் மக்கள். இதே நிலைதான் எம்.பி தத்தெடுத்த மற்றொரு கிராமமான துலுக்கமுத்தூரிலும் நிலவுகிறது.

எம்.பி கோபாலகிருஷ்ணனைச் சந்தித்தோம். “நாடாளுமன்றத்தில் அதிகக் கேள்வி எழுப்பிய எம்.பி நான்தான். படுகர் மற்றும் நரிக்குறவர் இனத்தை எஸ்.டி பிரிவில் சேர்க்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன். நரிக்குறவர் இனத்தைச் சேர்த்துள்ளார்கள். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இடம் பெறாமல் இருந்த பல பகுதிகளைத் தற்போது இதில் இடம்பெற வைத்துள்ளோம். இதற்காக, தமிழக அரசு 250 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. காய்கறி, பழங்கள், மஞ்சள் உள்ளிட்டவற்றை வைப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் குளிர்பதனப் பாதுகாப்புக் கிடங்கு அமைத்துள்ளோம். அரவங்காடு தொழிற்சாலைக்காக டெல்லியில் பேசியிருக்கிறேன். பிரதமர் நிவாரண நிதியின்கீழ் இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகள் சுமார் 125 பேருக்கு நிதியுதவி பெற்றுக்கொடுத்துள்ளேன். குன்னூரில் குற்றச் செயல்களைத் தடுக்கக் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளேன். மேட்டுப் பாளையம் - சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டிகள் இணைத்துள்ளோம். நீலகிரி தொகுதியில் புதிதாக 70 பாலங்கள் கொண்டு வந்துள்ளோம்’’ எனப் பட்டியல் போட்டார். அவரிடம், “ஆனால் தொகுதிக்கு நன்றி சொல்லக்கூட வரவில்லை, சில ஊர்களில் காண வில்லை என்று போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்களே...” என்று கேட்டோம். “நன்றி சொல்வதைவிட மக்கள் பணி செய்வதுதான் சாதனை’’ என்று முடித்தார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- ஆர்.பி., இரா.குருபிரசாத், தி.ஜெயப்பிரகாஷ், நவீன் இளங்கோவன், அருண்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி)
என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி)
என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி)

எப்படி இருக்கிறது எம்.பி ஆபீஸ்?

கு
ன்னூர் பெட்போர்டு பகுதியில் இருக்கிறது எம்.பி கோபாலகிருஷ்ணனின் அலுவலகம். தேயிலைக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கும் முறையை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குன்னூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மனோகரன் 28.09.2018 அன்று எம்.பி ஆபீஸுக்கு மனு அளித்திருந்தார். அதனை எம்.பி-யின் உதவியாளர் பெற்றுக் கொண்டார். அந்த மனுமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனோகரனுக்கு பதில் வரவில்லை. அவரே நேரில் போய் எம்.பி அலுவலகத்தில் விசாரித்தபோது, ‘‘எம்.பி நடவடிக்கை எடுப்பார்’’ என்று பொத்தாம் பொதுவாக பதில் சொன்னார்.

எம்.பி எப்படி?

நீ
லகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியிருக்கும் உதகமண்டலம், கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 600 பேரை சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:

என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி)
என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி)